வெளியிடப்பட்ட நேரம்: 16:03 (09/05/2017)

கடைசி தொடர்பு:17:51 (09/05/2017)

“விஷாலுக்காக பாகுபலியை விட்டுக் கொடுக்க முடியாது!’’ கொதிக்கும் திரையரங்க சங்கங்கள் #VikatanExclusive

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம்... இரண்டு தேர்தல்களிலும் வெற்றிமேல் வெற்றி குவித்த விஷாலுக்கு ‘நடிகர் சங்க கட்டட வேலையை உடனே நிறுத்த வேண்டும்’ என்று உயர்நீதிமன்ற உத்தரவு அதிர்ச்சியை தந்துள்ளது. முன்னதாக ‘கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் வரும் மே 30-ம்தேதி முதல் நடிகர், தயாரிப்பாளர்கள், பெப்சி, திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்கள் போராட்டத்தில் குதிக்கும்’ என்று விஷால் அறிவித்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் விஷால் அறிவிப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதிரையரங்க உரிமையாளர்கள் சங்கம், ‘அந்த ஸ்ட்ரைக்கில் பங்கேற்க மாட்டோம்’ என்றும் அறிவித்து உள்ளது. 

விஷால்

இதுகுறித்து சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான ‘அபிராமி‘ ராமநாதனிடம் பேசினோம்.

விஷால்“தமிழ் சினிமா உலகில் ஒரு பிரச்னை என்றால் முதலில் முதல்வரை சந்தித்து திரையுலகம் சார்பாக கோரிக்கை மனு தரவேண்டும். அதன்பின் அவர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்போது செல்ல வேண்டும். முதல்வரோடு நடக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் இருந்தால் அதன்பிறகு தமிழ்சினிமாவில் இருக்கும் பிற அமைப்புகளோடு கலந்து ஆலோசித்த பிறகே அறிவிப்பு வெளியிட வேண்டும். திரைப்பட துறையின் எதிர்கால நலன் கருதாமல் தன்னிச்சையாக ஸ்ட்ரைக் அறிவிப்பு வெளியிட விஷால் யார்? சினிமா நடிகர் பேசாமல் நடித்துக் கொண்டு போய்க்கொண்டே இருப்பார் அவ்வளவுதான். திரையரங்க உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வாழ்க்கை, எதிர்காலம் குறித்து அவருக்கு என்ன தெரியும்? 

சினிமாவின் உள்ளே இருக்கும் எந்த அமைப்புகள் போராட்டம் நடத்தினாலும் அதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் சினிமா திரையரங்குகளை மூடினால் அதனால் பொதுமக்கள் மத்தியில் ஏற்படும் உணர்வுகளை காட்டி அரசாங்கத்துக்கு தன்பலத்தை காட்ட நினைக்கிறார் விஷால். நாங்கள் ஒருபோதும் அந்த செயலுக்கு துணைபோக மாட்டோம். நாங்கள் திரையரங்கத்தை மூடினால் அதனால் அரசாங்கத்துக்கு ஒரு நஷ்டமும் இல்லை. நிரந்தரமாக தியேட்டர்களை அரசாங்கம் மூடுவதற்கு முடிவெடுத்தால் நிலைமை என்னாகும்? திரையரங்க உரிமையாளரும், தொழிலாளிகளும் நடுரோட்டுக்கு வந்து விடுவார்கள். ஏற்கெனவே புதுப்படங்களை பாதிப்பேர் இன்டர்நெட்டில் பார்த்து விடுகிறார்கள். திரையரங்கை மூடினால் மொத்தமுள்ள அத்தனைபேரும் இன்டர்நெட்டில் படம் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். 

பால் வியாபாரிகள் ஸ்ட்ரைக் செய்தால் பச்சிளங் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தும். லாரி ஸ்ட்ரைக் நடந்தால் பொதுமக்களின் அத்தியாவசிய வாழ்க்கை பாதிக்கும் என்று அரசாங்கம் அச்சப்படும். சினிமா பார்த்தே ஆகவேண்டும் என்று யாருக்கும் கட்டாயம் இல்லையே. சினிமாவுக்கு விதித்துள்ள 30 விழுக்காடு வரியை குறைக்க வேண்டும் என்று இப்போது ஆவேசமாக போராடும் விஷால், ஜெயலலிதா அம்மையார் உயிரோடு இருந்திருந்தால் இப்படி செய்வாரா? சினிமாத் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள 30% வரியை பேசாமல் 50% வரியாக உயர்த்திவிட்டு போய்க்கொண்டே இருப்பார். அதுதான் ஜெ. வருகிற 11-ம்தேதி சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடக்க இருக்கிறது. அந்த கூட்டத்தில், ‘விஷால் அறிவிக்கும் ஸ்ட்ரைக்கில் எங்கள் திரையரங்கம் கலந்து கொள்ளாது’ என்றே அறிவிக்க இருக்கிறோம்’’ என்று தங்கள் தரப்பு விளக்கத்தை கூறுகிறார். 

கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினோம். விஷால்

‘‘ தமிழ்நாடு அரசாங்கத்திடம் முறைப்படி அணுகி விஷால் கோரிக்கை வைத்து இருக்க வேண்டும். அப்படி எந்த முயற்சியுமே எடுக்காமல் திடீரென ஸ்ட்ரைக் அறிவிப்பது எந்த வகையில் நியாயம். எங்கள் மாவட்டங்களில் இருக்கும் விநியோகஸ்தர்கள் பெரிய விலைகொடுத்து வாங்கி ‘பாகுபலி-2‘ திரைப்படத்தை எங்கள் தியேட்டர்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள். விஷால் அறிவித்த மாதிரி நாங்கள் மே-30ம் தேதிக்கு பிறகு போராட்டத்தில் இறங்கினால் எங்களுக்கு படம் கொடுத்த விநியோகஸ்தர்கள் நிலை என்னாவது? எனவே விஷால் அறிவித்துள்ள ஸ்ட்ரைக்கில் நாங்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டோம். எங்கள் மாவட்டத்தில் இருக்கும் 169 தியேட்டர்களிலும் மே 31-ம்தேதி வழக்கம்போல் திரைப்படங்கள் ஓடும்’’ என்கிறார். 

விஷால் இப்போது என்ன முடிவெடுப்பார்? சங்கங்களை அழைத்து பேசுவாரா? பார்ப்போம்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க