அஜித் முதல் கார் வாங்கிய கதை! - ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 2

 Ajith vikatan

பாகம் 1

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித்.  அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

நேற்றைய பாகத்தில் அவரது முதல் ஐந்து படங்கள் பற்றிப் பார்த்தோம்...

விஜய்யின் அம்மா கொடுத்தனுப்பிய உணவை சாப்பிட்ட அஜித், விநாயகர்-அஜித் காம்போ வென்றது எப்படி? விளம்பரங்களில் அஜித் இருட்டடிப்பு செய்யப்பட்ட படம் எது? நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி எந்தப் படத்தில் முதன் முதலில் அஜிததுடன் இணைந்தார்? அஜித்தின் அதிக பாடல்களுக்கு நடன இயக்கம் அமைத்த டான்ஸ் மாஸ்டர்கள் யார்  யார்? அஜித் வாங்கிய முதல் கார், அதன் நம்பர் என்ன தெரியுமா? இவற்றை   இன்று பார்ப்போம்

6. ‘ராஜாவின் பார்வையிலே’

அன்றிலிருந்து இன்று வரை நிறைய டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்களில் நடித்துள்ளார் அஜித் என்பது, அவரின் பட வரிசையைப் பார்த்தாலே தெரியும். அவரின் கான்ஃபிடன்ஸ் லெவலே அதற்குக் காரணம். அப்படித்தான் விஜய்யுடன் சேர்ந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படமும். இந்தப் படத்தில் கமிட் ஆகும்போது அஜித்-விஜய் இருவருமே இன்று உள்ளதுபோல் மாஸ் ஹீரோக்கள் கிடையாது; ஆரம்பகட்டத்தில் இருந்தவர்கள். இந்தப்பட படப்பிடிப்பு சமயத்தில் விஜய்யின் அம்மா ஷோபா அவருக்கு மதிய உணவு கொடுத்தனுப்பும்போது, அதில் அஜித்துக்கும் சேர்த்தே லன்ச் இருக்கும். 

`அஜித், எந்த ஆடியோ வெளியீட்டு விழாவுக்கும் வருவதில்லை’ எனக் குறைபட்டுக்கொள்பவர்களுக்கு ஒரு தகவல். அவர் தலைமைதாங்கி நடத்திய ஒரே ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி ‘குஷி’ பட ஆடியோ வெளியீட்டு விழாதான். காரணம், எஸ்.ஜே.சூர்யா. அவர் அழைத்ததால் சென்றார். அந்த நிகழ்ச்சி ஆல்பர்ட் தியேட்டரில் நடந்தது. அதில், ‘நானும் விஜய்யும் ஷோபா அம்மா கொடுத்தனுப்பின சாப்பாட்டை சேர்ந்து சாப்பிட்டிருக்கோம். விஜய்யை எனக்குப் பிடிக்க அதுகூட ஒரு காரணமா இருக்கலாம். ஐ லவ் யூ ஆன்ட்டி, ஆல் த யுவர் லவ்லி ஃபுட்ஸ்’ என்று பேசினார்.

அஜித்

7. ‘ஆசை’

அஜித் தேர்வான முதல் படம் ‘மே மாதம்’தான். மணிரத்னம் தயாரிப்பு. அப்போது இவர் ரேஸில் அடிபட்டு ஆபரேஷன் முடிந்து ஓய்வில் இருந்தார். அதனால் இவரை டிராப் பண்ணிவிட்டு வினித்தை கமிட் பண்ணி, அவசரம் அவசரமாக ‘மே மாதம்’ படத்தை முடித்தார்கள். இதில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ், கொடுத்த கால்ஷீட்டுக்காக அஜித் பண்ணின படம்தான் ‘ஆசை’. இந்தப் படம் தன் வாழ்க்கையில் முக்கியமான சினிமாவாக இருக்கப்போகிறது என்று அப்போது அஜித்துக்குத் தெரியாது. 1996-ம் ஆண்டு மே மாதத்தில் `ஆசை’ ரிலீஸானது. அதுவரை சென்னையை பைக்கில் சுற்றிக்கொண்டிருந்தவருக்கு, அதன் பிறகு அது சாத்தியமாகாமல் போய்விட்டது. எங்கு சென்றாலும் அடையாளம் கண்டுகொண்டு ஆட்டோகிராஃப் வாங்கத் தொடங்கினார்கள். அதேபோல இவர் ஏதாவது நிகழ்ச்சிகளுக்குப் போனால், இவரின் என்ட்ரி பாடலாக ஒலிக்கத் தொடங்கியது ‘கொஞ்ச நாள் பொறு தலைவா...’.

 

அஜித்

8. `வான்மதி’

பிள்ளையாருக்கும் அஜித்துக்குமான கனெக்‌ஷனுக்கு, பிள்ளையார் சுழி போட்ட படம் இது. இந்தப் படப் பாடலான, ‘பிள்ளையார்பட்டி ஹீரோ நீதாம்பா கணேசா, நீ கருணை வெச்சா நானும் ஹீரோப்பா...’வில் தொடங்கிய அந்த லிங்க் ‘அமர்க்களம்’ பட ‘காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா... மகாகணபதி...’யில் தொடர்ந்து ‘வேதாளம்’ பட ‘வீர விநாயக வெற்றி விநாயக...’ பாடல் கடந்து இன்றும் தொடர்கிறது. அதற்குக் காரணம் ‘வான்மதி’ பட `பிள்ளையார்பட்டி ஹீரோ’தான். ‘சாஃட்டான ஏ சென்டர் ஹீரோ’ என்ற இமேஜை சற்றே மாற்றி பி, சி என கிராமம் வரை இவரை அழைத்துப்போனாள் ‘வான்மதி’.

அஜித்

9. ‘கல்லூரிவாசல்’

பவித்ரன் டைரக்‌ஷனில் பிரசாந்த் உடன் நடித்த படம். இந்தப் பட புரமோஷன் சமயத்தில் போஸ்டர் உள்ளிட்ட விளம்பரங்களில் இவர் இருட்டடிப்பு செய்யப்பட்டார் எனக் கூறப்பட்டது. இருப்பினும், விமர்சனத்தில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதில் இந்தி பட இயக்குநர் மகேஷ் பட்டின் மகள் பூஜா பட்தான் ஹீரோயின். பூஜா இன்று வரை அஜித்தின் நல்ல தோழி. ‘ஐ லவ் யூ சார்’ என்ற இந்திப் படத்தில் நடிக்க அஜித்தை பூஜா அழைத்தபோது, அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் அஜித். `நிக் ஆடியோ’ என்ற பெயரில் `கல்லூரிவாசல்’ படத்தின் ஆடியோ உரிமையை வாங்கி அஜித்துக்கு அறிமுகமானவர்தான் ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்கரவர்த்தி. இந்தப் படத்தின் நடன இயக்குநர் கல்யாண் இன்று வரை அஜித்தின் நல்ல நண்பர். ‘தீனா’வில் ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா...’, ‘மங்காத்தா’வில் வரும் ‘ஆடாம ஜெயிச்சோமடா...’ உள்பட அஜித்தின் பல ஃபேவரிட் பாடல்களுக்கு கல்யாண்தான் நடன இயக்குநர். அஜித்தின் அதிக பாடல்களுக்கு நடனம் அமைத்தவர்களில் கல்யாண், தினேஷ் இருவரும் முக்கியமானவர்கள்.

10. ‘மைனர் மாப்பிள்ளை’

அஜித்தின் அப்பா, ‘6446’ என்ற எண்கொண்ட மாருதி எஸ்டீம் கார் ஒன்று வைத்திருந்தார். ஆனால், முன்னதாக அஜித் இத்தனை படங்கள் நடித்தும் அதுவரை பைக் பயணம்தான். அந்தச் சமயத்தில் வி.சி.குகநாதன் இயக்கிய இந்தப் படத்தின் சம்பளத்தில் வாங்கியதுதான் அவரின் முதல் காரான, டிஎஸ்பி 1626 என்ற மாருதி 800 கார். அஜித்துக்கு கார் புதிது அல்ல என்றாலும், சொந்த கார் என்ற பரவச நிலையில் இருந்தார். பொதுவாக தன் பட பூஜை, ஆடியோ ரிலீஸ்களில்கூடக் கலந்துகொள்ளாதவர், கார் வாங்கிய மறுநாளே இவர் சம்பந்தப்படாத ஒரு படத்தின் பூஜைக்கு காரில் போய் இறங்கி கெத்துகாட்டினாராம். தற்போது அந்தக் காரை இவரின் நண்பர் ஒருவர் வாங்கி வைத்துள்ளார். அவரிடம் கேட்டால், ‘அது அந்தப் பட சம்பளத்தில் வாங்கியதில்லை. அந்தப் படத்துக்கான சம்பளமே அந்த கார்தான்’ என்று சிரிக்கிறார்.

அஜித்

ஒரு  நடிகையின் அம்மா, அஜித்தை தன் மகனாகப் பார்த்தார். அவர் யார்? அஜித் முதன்முதலில் புகைப்படம் எடுக்கத்தொடங்கியது எந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்? அஜித் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்காக நடித்த முதல் படம் எது? விக்ரமை இருட்டடிப்பு செய்தாரா அஜித்? ‘அமர்க்களம்’ வாசு கேரக்டருக்கு எது ட்ரெயிலர் தெரியுமா? ‘பகைவன்’ ஏன் அஜித்துக்கு பகைவனானது...

நாளை பார்ப்போம்.

முந்தைய பாகத்தை படிக்க...

-அஜித் அறிவோம்..! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!