பில்லா -2 முதல் விவேகம் வரை... அஜித் படங்களின் டீஸர் ஹிஸ்டரி! | Did you remember Ajith's previous teasers?

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (13/05/2017)

கடைசி தொடர்பு:21:30 (13/05/2017)

பில்லா -2 முதல் விவேகம் வரை... அஜித் படங்களின் டீஸர் ஹிஸ்டரி!

`ஆழ்வார்', `கிரீடம்', `பில்லா' ஆகிய படங்கள் அஜித் நடிப்பில் ஒரே வருடத்தில் (2007) வெளியானவை. அடுத்தடுத்த வருடங்களில் (2009, 2016 தவிர) வருடத்துக்கு ஒரு படம்தான். எனவே, அஜித் படத்தின் தலைப்பு, போஸ்டர், டீஸர், ட்ரெய்லர் என எது வந்தாலும் ரசிகர்கள் குஷியாகிவிடுகிறார்கள். `வேதாளம்', `விவேகம்' இரண்டுக்குமிடையில் ஒரு வருட காலத்துக்கு அஜித்தின் எந்தப் படமும் வெளிவரவில்லை. இது 'விவேகம்' படத்துக்கான எக்ஸ்ட்ரா மைலேஜ் எனவும் சொல்லலாம்.

சாதாரணமாக, அஜித் படத்துக்காக உருவாகும் எதிர்பார்ப்பை இந்த இடைவெளி அதிகமாக்கியிருக்கிறது. 'விவேகம்' டீஸர் வரும் வரை `எப்படி இருக்கும்?' எனக் காத்திருந்தவர்கள், வந்த பிறகு படத்தின் கதையையே கணித்திருப்பார்கள். இது `விவேக'த்தில் மட்டுமல்ல, இதற்கு முன் வந்த படங்களுக்கும் நடந்தது. அஜித்தின் முந்தைய படங்களான `பில்லா-2', `ஆரம்பம்', `வீரம்', `என்னை அறிந்தால்', `வேதாளம்' பட டீஸர் வந்த சூழல் நினைவிருக்கிறதா?

அஜித்

பில்லா 2:

`ஐந்து வருடங்களுக்கு முன்னர் வந்த `பில்லா'வின் ப்ரீக்குவலாக உருவாகிறது' என்ற தகவல் வந்ததும் ரசிகர்கள் வட்டாரம் பரபரப்பானது. காரணம், ரீமேக் ஆக உருவாகியிருந்த 'பில்லா'வையே சிறப்பாகக் கொடுத்திருந்த விதம். கமல் படத்தை இயக்கிய சக்ரி, யுவன் இசை என ஒவ்வொரு நபராகச் சேர, படத்தின் எதிர்பார்ப்பு வேறு லெவலுக்குச் சென்றிருந்தது. `Every Man has a past. Every Don, A History' என்ற பன்ச் லைன் இருக்கும் போஸ்டர், எதிர்பார்ப்பைக் கிளப்பியது. `பில்லா'வின் முன் கதை எப்படி இருக்கும்?' என நினைக்கும் ஒவ்வொரு முறையும் ரசிகர்கள் பறந்தார்கள். அந்த எதிர்பார்ப்புகளைக் கொஞ்சமும் கெடுக்காமல் டீஸரும் இருந்தது. ஆனால், படம் அந்த அளவுக்கு எடுபடவில்லை. `பாட்ஷா' படத்தில், ஃப்ளாஷ் பேக் ரஜினி போர்ஷனை முன்பே காட்டிவிட்டு அதன் பிறகு ரஜினி ஆட்டோ ஓட்டுவதைக் காட்டினால் எப்படி இருக்குமோ, அதுபோன்ற உணர்வைத்தான் 'பில்லா 2' கொடுத்தது. 

ஆரம்பம்:

`பில்லா'வில் பிரிந்த கூட்டணி மீண்டும் இணைந்ததே அஜித் ரசிகர்களுக்கு எனர்ஜியைக் கொடுத்தது. அதிலிருந்து படத்தின் டீஸர் வெளியாகும் வரை தலைப்பே முடிவாகாமல் இருந்தது `தல 53'. டீஸர் கூட என்டு பன்ச்சாக 'டைட்டில் இன்னும் வெக்கல' வசனத்தை வைத்து வெளியானது. 'வலை', 'உச்சம் நீ', 'பறவை' எனப் பல தலைப்புகளுக்குப் பிறகு இறுதியானது 'ஆரம்பம்'. மங்காத்தாவுக்குப் பிறகு மறுபடி சால்ட் அண்ட் பெப்பர் லுக் ஸ்டைலிஷ் மேக்கிங் எனப் பரபரப்பானது டீஸர். `ஆயுத ஊழல் பற்றிய படம்' எனப் பல கதைகள், இதுதான் 'ஆரம்பம்'  படத்தின் கதை எனவும் பரவியது. 

வீரம்:

veeram teaser

`சிறுத்தை' படம் ஹிட்டான கையோடு தெலுங்கில் ஒரு படம் இயக்கியிருந்த சிவாவுடன் அஜித் இணைகிறார் என்றதும், என்ன மாதிரி படமாக இருக்கும் எனப் பல பேச்சுகள் ஆரம்பித்தன. இந்தப் படத்திலும் டைட்டில் குழப்பம் வருகிறது. 'விநாயகம் பிரதர்ஸ்'தான் படத்தின் டைட்டில் எனக் கிசுகிசுக்கள் வர, பிறகு படத்தின் டைட்டிலை `வீரம்' என அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். அதைத் தொடர்ந்து படத்தின் டீஸரும் வெளியானது. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் `ரதகஜ துரக பதாதைகள்...' பின்னணியாக ஒலிக்க அஜித் தோன்றும் டீஸர் வந்ததும் `படம் நிச்சயம் மாஸ்!' எனக் கொண்டாட்டத்துக்குத் தயாரானார்கள் ரசிகர்கள். ட்ரெய்லர் வெளியான பிறகு 'முரட்டுக்காளை' படத்தின் ரீமேக்தான் 'வீரம்' என்ற பேச்சும் எழுந்தது. 

என்னை அறிந்தால்:

அஜித் + கௌதம் மேனன் காம்போ என்றதும் ஆரம்பித்தது கொண்டாட்டம். இதற்கு முன்பு பார்த்த அஜித்திலிருந்து வேறு ஒரு அஜித்தைப் பார்க்கப்போகிறோம் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவானது. காரணம், கௌதம் மேனன். 'ஆயிரம் தோட்டாக்கள்', 'சத்யா'தான் தலைப்பாக இருக்கும் என ரசிகர்களே ஃபேன்மேட் போஸ்டர்களை வெளியிட்டார்கள். அந்தச் சமயம் 'என்னை அறிந்தால்' என டைட்டிலுடன் போஸ்டரும் பிறகு டீஸரும் வெளியானது. அஜித் படங்களில் 'என்னை அறிந்தால்' வேறு டைப் படம்தான் என்ற எண்ணத்தை வரவழைத்தது டீஸர்.

வேதாளம்:

`வீரம்' படத்துக்குப் பிறகு மீண்டும் அஜித் + சிவா கூட்டணி. 'வேதாளம்' படத்தின் டீஸர் வெளியாகி தெறிக்கவிட்டது. அனிருத் பின்னணி இசை மிரட்டலாக இருக்க, வேற லெவல் எதிர்பார்பை உண்டாக்கியது. `படத்தில் மொத்தம் இரண்டு அஜித். ஒருவர் இறந்துபோய்விடுவார். அந்த அஜித்தின் தங்கைதான் லட்சுமி மேனன். தன்னைக் கொன்றவர்களைப் பழிவாங்கவும், தங்கையைப் பார்ப்பதற்கும் இன்னொரு அஜித் உடலில் ஆவி அஜித் புகுந்துகொள்வார்' என டீஸர் பார்த்தே பல கதைகள் உருவாக்கிய சம்பவமும் உண்டு. வாய்ஸ் ஓவரில் டீஸர் தொடங்குவது, துப்பாக்கி, பைக் சேஸிங், பாம் என, பொதுவான பல விஷயங்களை அஜித் பட டீஸர்களில் நாம் பார்க்கலாம்.

இப்போது ரசிகர்களால் கொண்டாடப்படும், `விவேகம்' டீஸரின் `Never Ever Give up' போல ஆன் ஸ்க்ரீனிலும் ஆஃப் ஸ்க்ரீனிலும் தனக்கும் தன் மாஸை ரசிகர்கள் கொண்டாடுவதற்கும் பொருந்தும்படி ஒரு வசனத்தை உபயோகிப்பதும் இருக்கும். `பில்லா 2'-வில் `என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா', `ஆரம்பம்' படத்தில் `சாவுக்குப் பயந்தவனுக்கு தினம் தினம் சாவு. எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒருமுறைதான் சாவு' எல்லாமே இந்த டைப்தான். இவை எதுவும் புத்தம் புது விஷயம் கிடையாது. வெவ்வேறு நபர்களால் வேறு வேறு வார்த்தைகளில் சொல்லப்பட்டவையே. ஆனால், அது அஜித் சொன்னால் வேற லெவல் என்பதுதான் ரசிகர்களின் கருத்து.

எது எப்படியோ 'விவேகம்' படத்தின் டீஸரும் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. மூன்றாவது முறை சிவாவுடன் கூட்டணி சேர்ந்ததற்கு படம் நியாயம் சேர்த்தாலே போதும்.

`விவேகம்' பட டீஸரில் இதைக் கவனிச்சீங்களா?

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், படத்தின் டீஸர் 57 நொடிகள் மட்டுமே. காரணம், இது அஜித்தின் 57-வது படம்!


டிரெண்டிங் @ விகடன்