வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (12/05/2017)

கடைசி தொடர்பு:15:28 (13/05/2017)

`பாகுபலி' பிரபாஸுக்கு குவியும் விளம்பர வாய்ப்புகள்!

'பாகுபலி' புகழ் நடிகர் பிரபாஸை, விளம்பரங்களில் நடிக்கவைக்க பெரிய நிறுவனங்கள் முயல்கின்றன. இதுவரை 18 கோடி ரூபாய் அளவுக்கு விளம்பர ஒப்பந்தங்கள் வந்தும் நடிக்க மறுத்துள்ளார். 

பாகுபலி நடிகர் பிரபாஸ்

`பாகுபலி' இரண்டாம் பாகம் வெளிவந்து சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இதுவரை 1,200 கோடி ரூபாய் வசூல். இந்தப் படத்தின் வெற்றியால், நடிகர் பிரபாஸுக்கு விளம்பர வாய்ப்புகள் குவிகின்றன. ஆடைகள், காலணி, நுகர்வுபொருள், ஃபிட்னஸ் கருவி தயாரிப்பு போன்ற பல நிறுவனங்கள் அவரை மொய்க்கின்றன. பிரபாஸை எப்படியாவது தங்கள் விளம்பரத்தில் நடிக்கவைத்துவிட வேண்டும் என, பெரிய பெரிய நிறுவனங்கள் துடித்துக்கொண்டிருக்கின்றன. இதுவரை, 18 கோடி ரூபாய் அளவுக்கு விளம்பர வாய்ப்புகள் வந்தும்  பிரபாஸ் அவற்றை ஏற்கவில்லை. 

விளம்பரத்தில் நடிப்பது சினிமா வாழ்க்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதால், பிரபாஸ் அவற்றைத் தவிர்க்கிறாராம். `பாகுபலி' எஃபெக்ட்டால், பிரபாஸுக்கு ஹாலிவுட் பட வாய்ப்பு வந்து கதவைத் தட்டியுள்ளது. அவரது ஃபிட்டான உடல் தோற்றமும் ஹாலிவுட் இயக்குநர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.  கதை விவாதத்துக்காகத்தான் தற்போது பிரபாஸ் அமெரிக்கா சென்று,  ஹாலிவுட் ஸ்க்ரிப்ட்களைப் படித்துக்கொண்டிருக்கிறார். வரும் ஜூலை மாதம்தான் பிரபாஸ் மீண்டும் இந்தியா திரும்புகிறார்.

`பாகுபலி' படத்தில் நடிப்பதற்காக பிரபாஸுக்கு  25 முதல் 30 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பிரபாஸின் அடுத்த படம் 'சாஹோ' 2018-ம் ஆண்டு வெளிவர உள்ளது. இந்தப் படத்தில் முழு கவனத்துடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவும் விளம்பரங்களில் நடிப்பதை பிரபாஸ் தவிர்த்துள்ளார். இதற்கிடையே, பாலிவுட் நடிகர்களுக்குப் போட்டியாக கட்டுமஸ்த்தான உடல்கட்டுடன் தென்னிந்திய நடிகர் உருவானதும் வடஇந்திய மீடியாக்களுக்கு மூக்கு வியர்க்கத் தொடங்கிவிட்டது.  பிரபாஸின் அடுத்த இலக்கு பாலிவுட்டாகத்தான் இருக்கும் என வடஇந்திய மீடியாக்கள் கணித்துள்ளன.

வடஇந்தியாவைச் சேர்ந்த ஆங்கிலப் பத்திரிகை ஒன்று, பாலிவுட் நட்சத்திரங்களின் சம்பளப் பட்டியலை வெளியிட்டு,  வடஇந்திய நடிகர்களை சூப்பர் ஸ்டார்களாகக் காட்ட முனைந்துள்ளது. 

அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, சம்பள விஷயத்தில் 51 வயது சல்மான் கான் முதல் இடத்தில் இருக்கிறார். இவரின் சம்பளம்  60 கோடி ரூபாய். இரண்டாவது இடத்தில் உள்ள ஷாரூக் கானின் சம்பளம் 55 முதல் 60 கோடி ரூபாயாம். அமீர் கானின் சம்பளம் 40 முதல் 45 கோடி ரூபாய் எனச் சொல்கிறது. கான் நடிகர்களில்கூட சல்மான் கானை ஓவர் ரேட்டாகக் காட்டுவதாக இந்திப்பட ரசிகர்களே எதிர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் பட்டியலில் ஹ்ருத்திக் ரோஷனும் அமீர் கானுக்கு இணையாகச் சம்பளம் பெறுகிறார். அக்‌ஷய் குமார் 35 முதல் 40 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். அமிதாப் 18 முதல் 20 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். 

பாலிவுட் நடிகைகளில் கங்கனா ரனாவத் 10 முதல் 12 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். தீபிகா படுகோன், கரீனா கபூர் 8 கோடி ரூபாய் வாங்குகின்றனர். பிரியங்கா 7 கோடி ரூபாயும், அனுஷ்கா சர்மா  6  முதல் 8 கோடி ரூபாயும், சோனம் கபூர் 5 கோடி ரூபாயும் சம்பளமாகப் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க