'கடவுளின் குரல்!' - ரஜினியின் அடுத்த படத்துக்கு டைட்டில் பரிந்துரைகள்!

போன வருடம் இந்நேரம் 'கபாலி' பீவரில் தத்தளித்த தமிழகம் இப்போது 'ஆண்டவன் சொல்றான்' பன்ச் டயலாக்கால் பரபரத்துக் கிடக்கிறது. சைலன்ட் மோடில் இருந்து இப்போது வைப்ரேஷன் மோடுக்கு மாறியிருக்கும் ரஜினியால் சோஷியல் மீடியாவும் குலுங்கிக் கொண்டிருக்கிறது. இதே பரபரப்பில், 2.0 படத்திற்குப் பின் ரஜினி நடிக்கப்போகும் படத்திற்கு டைட்டில் வைத்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்!

rajini

* 'ஆண்டவன்தான் என்னை இயக்குறான், அவன் சொன்னா நான் கண்டிப்பா அரசியலுக்கு வருவேன்' என 13 ஆயிரத்து 758வது முறையாக கருத்து உதிர்த்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். இப்படி தொன்று தொட்டு ஒரே வசனத்தை ஒரே மாடுலேஷனில் சொல்லும் காரணத்திற்காகவே, 'பேச்சு மாறாதவன்' என டைட்டில் வைக்கலாம். 'பொல்லாதவன்', 'படிக்காதவன்' என ஏற்கெனவே நடித்தவர்தானே. போக, 'அன்பானவன், அசராதவன், அடங்காதவன்' பட டைட்டில் ட்ரெண்டுக்கேற்ற வைத்த மாதிரியும் ஆயிற்று.

* தமிழ் சினிமா, அரசியல் வெறியர்களுக்குத் தெரியும், 'வரும்.... ஆனா வராது' ட்ரெண்டை ஆரம்பித்து வைத்தது 'என்னத்த' கண்ணையா இல்லை, சூப்பர்ஸ்டார் தானென. இருபது ஆண்டுகளுக்கு முன் அவர் ஆரம்பித்து வைத்த ட்ரெண்டை இப்போது வரை சிங்கிள் சிங்கமாய் மெயின்டைன் செய்வதற்காகவே 'வரும்... ஆனா வராது' என டைட்டில் வைக்கலாம். படம் ஹாரர் ஜானரில் இருந்தால் இன்னும் சிறப்பு. 'இருக்கு ஆனா இல்ல', 'என்னமோ இருக்கு' - இப்படிலாம் படம் வரும்போது இந்த டைட்டிலுக்கு என்ன குறை?

* 'நான் ஒரு பச்சைத்தமிழன், இங்கேதான் நிறைய நாட்கள் இருந்திருக்கிறேன்' என இப்போது சொல்லியிருக்கிறார் ரஜினி. இதை வைத்து 'பச்சத்தமிழன்' என டைட்டில் வைக்கலாம்தான். ஆனா, 'பச்ச, மஞ்ச, கருப்பு உள்பட எல்லாக் கலர் தமிழனும் நான்தான்' என அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா 'ஆல்ரடி கேம் ப்ரோ' சொல்வதால், 'தமிழனென்று சொல்லடா' என டைட்டில் வைத்துக்கொள்ளலாம். சோஷியல் மீடியா போராளிகளே பப்ளிசிட்டியை பார்த்துக்கொள்வார்கள்.

* 'போருக்குத் தயாராகுங்கள்' என முழக்கமிட்டிருக்கிரார் சூப்பர்ஸ்டார். உடனே சிலிர்த்துப் போய் அது சம்பந்தமாய் டைட்டில் யோசித்தால் 'தளபதி, 'மாவீரன்', 'மன்னன்', 'ராஜாதி ராஜா', 'ராணுவ வீரன்', 'தர்ம யுத்தம்' என போர் சம்பந்தமான எல்லா டைட்டில்களிலும் அவரே நடித்துத் தள்ளிவிட்டார். இனி, 'கமாண்டோ', ஸ்டார் வார்ஸ்' என ஹாலிவுட்டில்தான் கடன் கேட்க வேண்டும். இறுதிக்கட்டத்தில் வரிவிலக்கிற்காக பெயர் மாறக்கூடும் என்பதால் டேக்லைனாக *மாறுதலுக்குட்பட்டது' என சேர்த்துக்கொள்ளலாம்.

* இது எதுவுமே சரிப்படவில்லையென்றால் வேறு வழியே இல்லை, 'கபாலி 2' என பெயர் வைத்துவிட வேண்டியதுதான். ஏற்கெனவே முதல் பாகத்திற்கு எக்கச்சக்க பப்ளிசிட்டி செய்திருப்பதால் படம் ஈஸியாக ரீச் ஆகிவிடும். பொலிடிக்கல் டச் தேவைப்பட்டால், 'கபாலி 2 : கடவுளின் குரல்' என சேர்த்துக்கொள்ளலாம். செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!