Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சாப்பிட்ட பிறகே உண்ணாவிரதத்துக்குச் செல்வேன்!' - செம தில் கமல் #VikatanExclusive

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ, வரும் ஜூன் 18-ம் தேதியிலிருந்து விஜய் டிவி-யில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான புரமோஷன் படப்பிடிப்பு, கடந்த 12-ம் தேதி திருவேற்காட்டில் உள்ள கோகுலம் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. பரபரப்பான அந்தப் படப்பிடிப்பு வேலையிலும் ஆனந்த விகடனுக்காக கமல் அளித்த பேட்டியிலிருந்து...

‘‘ ‘டிவி-யின் வீச்சை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகிறீர்கள். ஆனால், அதை ஏதோ தீண்டத்தகாத விஷயம்போல் ஒதுக்கிவைத்துள்ளார்களே?’’
‘‘மனுஷனையே ஒதுக்கிவைக்கும் இந்த ஊரில் டிவி-யை ஒதுக்க மாட்டார்களா? அது, காலம், விஞ்ஞானம் இரண்டின் வேகத்துக்கும் ஈடுகொடுக்க முடியாத கோபத்தின் வெளிப்பாடு. காலப்போக்கில் அவர்களே திருந்தி மாறுவார்கள்; மாறித்தான் ஆக வேண்டும். அப்போது சாட்டிலைட் டெலிவிஷன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சினிமாத் துறையினர் ஊர்வலம் போனார்கள். அதில் எங்கள் வாத்தியாரும் இருந்தார். அதனால் நான் அப்போது அதிகம் பேச முடியவில்லை. ‘ரோடு போட்டாச்சு. மக்கள் அந்தப் பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிடுவார்கள். கார் வரும். அதுக்காக, நீங்கள் கோபித்துக்கொள்ள முடியாது. மாட்டுவண்டி இடம் கொடுத்துத்தான் ஆகணும்’ என்றேன்.

உடனே, ‘கமல், சினிமாவை `மாட்டுவண்டி'னு சொல்லிட்டார். மன்னிப்பு கேட்கணும்’ என்றார்கள். ‘கேட்கவே மாட்டேன்’ என்றேன். எங்கள் வாத்தியார், தவறு என்றால் அதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பார். எனக்கு 18 வயதாக இருக்கும்போதே என்னைத் திட்டிவிட்டு பிறகு ‘தேவையில்லாமல் திட்டிவிட்டோம்’ எனத் தெரிந்தால் கூப்பிட்டு ‘ஸாரிடா’ என்பார். அப்பாத்தனம் இருப்பவர்கள் அப்படி சொல்லவே மாட்டார்கள். பிறகு, அவரே டெலிவிஷனை சுவீகரித்ததுபோல் வேறு எந்த இயக்குநரும் அதைத் தத்தெடுக்கவில்லை. பிறகு, டி.டி.ஹெச் பற்றி சொன்னேன். கடுமையாகக் கோபப்பட்டார்கள். ஆனால் இன்று, அதுதான் நெட்ஃபிளிக்ஸாக வந்துவிட்டது. அதையெல்லாம் தடுக்கவே முடியாது.”

கமல்

“ஆனால், பெரிய லாபம் தரக்கூடிய தியேட்டர்கள் பாதிக்கப்படும் என்ற அவர்களின் அச்சத்திலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது?”
“ ‘நீங்கள் விரலால் எண்களைச் சுற்றிப் பேசும் பழைய டெலிபோன் வியாபாரம் செய்கிறீர்கள். அந்த டெலிபோன் வியாபாரம் கெட்டுப்போய்விடும் என்பதற்காக, ‘செல்போன்லாம் வாங்காதீங்க. செல்போன்ல பேசினா காது சுட்டுடும்; மூளை மழுங்கிடும்’ என்று சொல்லிப்பாருங்கள். அப்படியும் சிலர் சொல்லியும் பார்த்தனர். ஆனால், இன்று நடந்தது என்ன? செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. நீங்கள் சொல்வதுபோல அதனால் சில கெடுதிகளும் இல்லாமல் இல்லை. ‘பசுமைப் புரட்சி’ எவ்வளவு பெரிய முன்னேற்றம்! அதிலும் நிறைய தவறுகள், தடுமாற்றங்கள் இருந்ததாகச்  சொல்கிறார்களே. அதுபோல இதிலும் சில கெடுதிகள் வரலாம். புதிய விஞ்ஞானம் வரும்போது அதை ஆராய வேண்டும். அதற்காக அது வேண்டாம் என்று நீங்கள் சொன்னால், அது உங்களை ஒதுக்கிவைத்துவிட்டு தானாக வந்து சேர்ந்துவிடும்.”

கமல்

‘‘பல தயாரிப்பாளர்கள் `நஷ்டம்' என்கிறார்கள். சிலர், `பிரேக் ஈவன் ஆகியிருக்கிறது' என்கிறார்கள். மற்ற தொழில்களில் வருவதுபோன்ற நிச்சய வருமானம் சினிமாவில் இல்லையே?”
‘‘அதெல்லாம் நிறையவே இருக்கிறது. ஆனால், அதைப் பண்ணவில்லை. உதாரணமாக, ‘ஆனந்த விகடன்’ பத்திரிகை ஆரம்பிக்கும்போது என்ன கியாரன்டி இருந்தது? ‘தந்தி’ ஆரம்பித்த ஆதித்தனாருக்கு என்ன கியாரன்டி இருந்தது? ‘படிப்பாங்க’ என்ற கியாரன்டி இருந்ததா? முதலில் இந்த மக்களுக்குப் படிப்பறிவு இருந்ததா? அதையும் தாண்டி அவர்கள் அதை ஏற்படுத்திக்கொண்டனர். எப்படி நியூஸ் மார்ட்டுக்குள் தன் பத்திரிகையைக் கொண்டுபோய் வைப்பது, கொண்டுபோய் வைத்த பத்திரிகை விற்கிறதா எனப் பார்ப்பது, விற்பனை, வீடு வந்து சேர்ந்ததா எனப் பார்ப்பது... இவ்வளவு வேலைகள் இருக்கிறதல்லவா! அவை நேர்மையாக நேரத்துக்குக் கடைப்பிடிக்கப்படுகிறதா எனப் பார்ப்பது, அது இல்லாதபட்சத்தில் அதற்காகப் போராடுவது... இவற்றை எல்லாம் நம் சினிமா இண்டஸ்ட்ரி இன்னும் சரியாகச் செய்யவில்லை. ஏனெனில், இங்கு கூட்டு முயற்சி இல்லை. இன்னும் உட்கார்ந்து பேசவில்லை. இவை, உதிரி பாட்டாளிகளாக இருப்பதால் வரக்கூடிய பிரச்னைகள்தான்.’’

கமல்

‘‘ ‘இந்த விஷயங்களைப் பண்ணவில்லை என்றால், வேலை நிறுத்தம்' என்று தமிழ் சினிமா கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. இதில் உங்கள் பார்வை என்ன?’’
‘‘எனக்கு வேலை நிறுத்தத்தில் நம்பிக்கை கிடையாது. அதேபோல உண்ணாவிரதத்திலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. காந்தியை எனக்குப் பிடிக்கும் என்றால்கூட நான் சாப்பிடாமல் எல்லாம் இருக்க மாட்டேன்.’’

‘‘ஆனால், நீங்களும் சில உண்ணாவிரதங்களில் கலந்துகொண்டிருக்கிறீர்களே?”
‘‘கூப்பிடுவார்கள் சார். ஆனால், நான் சாப்பிட்டுவிட்டுதான் செல்வேன். என்னுடைய ஆதரவைக் காட்டுவதற்குப் போவேனே தவிர, எனக்கு உண்ணாவிரதங்களில் நம்பிக்கை கிடையாது. உண்ணா நோன்பை... நோன்பு இருப்பவர்கள் இருக்கலாம். எனக்கு நோன்பிலேயே நம்பிக்கை இல்லை எனும்போது, நான் எப்படி அதில் கலந்துகொள்ள முடியும்? பசிக்கும்போது சாப்பிட்டுவிட வேண்டும். இல்லை... அந்தத் தியாகத்தை யாரும் மதிக்கப்போகிறார்களா? ‘நான் செத்துப்போயிடுவேன்’ என்று சொன்னால் ‘ஐயய்யோ... ஒரு கலைஞன் போயிடுவான். அவனை எப்படியாவது காப்பாத்தணும்’ என நினைக்கும் அரசியல்வாதிகள் இங்கு எத்தனை பேர் இருக்கிறார்கள்? கையைத் தடுத்து, ‘வேணாம் உண்ணாவிரதத்தை நிறுத்திக்கங்க’னு சொல்கிறவர்கள், நிஜமாகவே மனம் உவந்து சொல்கிறவர்கள் யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்படி இருக்கையில் எதற்கு நம்மைப் பணயமா வைத்து விளையாட வேண்டும்?  ‘சாகும்வரை உண்ணாவிரதம்’ என்று அறிவித்த பொட்டி ஸ்ரீராமலுவை அப்படியே சாகவிட்டபோதே இங்கு உண்ணாவிரதம் செத்துப்போய்விட்டது.”
 

கமல்

“இந்த அரசில் அமைச்சர்கள் அனைவரின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள். எதிர்க்கட்சிகள் இன்னும் சிறப்பாகச் செயல்படலாமே எனத் தோன்றுகிறதா? குறிப்பாக கம்யூனிஸ்டுகள்...?”
“அது என் நண்பர்கள், தோழர்கள் மீது நான் வைக்கும் பெரும் குற்றச்சாட்டு. நேர்மையாக இருக்கும் ஒரு இசம் அதுவும் இவர்களுடன் மல்யுத்தம் செய்வதனால் அழுக்குதான் படியுதே தவிர, அவர்கள் வென்ற சாட்சியங்கள் குறைவாக இருக்கின்றன. உலகத்தில் இல்லாத சாதனைகளை நிகழ்த்திக்காட்டியவர்கள் இந்திய கம்யூனிஸ்டுகள். ஒரு டெமாக்ரடிக் நாட்டுக்குள் இரண்டு மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்வது பெரிய வெற்றி. உலகத்தில் இல்லாத நிகழ்வு. ஆனால், அது போதாது. அந்த மகுடத்தை மட்டுமே போட்டுக்கொண்டு உட்கார்ந்துவிடக் கூடாது. உடனே, ‘கம்யூனிசம்தான் வெல்லும்’ என்கிறீர்களா?’ என்றால், ‘எந்த இசமுமே வெல்லவேண்டிய அவசியம் கிடையாது. மக்கள் வெல்லணும். ஏன்னா, இந்தக் கட்டடம் இன்னும் வேலை முடிந்தபாடில்லை. கலாசாரம், ஹ்யூமன் சொசைட்டி என்பது ஏதோ வேலை முடிந்துவிட்ட மாதிரி கையைத் தட்டிக்கொள்ள வேண்டாம். இது வொர்க் இன் ப்ராக்ரஸ். அதனால் எந்த இசமும் நம் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமைய முடியாது. அதுக்கு பேசாமல் ஒரு புத்தகம், ஒரு நம்பிக்கை என பக்தி மார்க்க வழியிலேயே போய்விடலாமே, கம்யூனிசம் அப்படி கிடையாதே. `தாஸ் கேபிடல்' ஒரு புத்தகத்தை நம்பிக்கொண்டு எல்லாமே முடிந்துவிட்டது என்று அதை வைத்து  பூஜை பண்ணிக்கொண்டு இருக்க முடியாது.”

கமல்

“அண்ணன் சந்திரஹாசனின் இழப்பு பற்றி?”
“பேரிழப்புதான். ஆனால், ஒன்றே ஒன்றுதான். நான் 16 வயதில் நிச்சயம் இப்படி நடிக்கவில்லை என்பதற்கான உதாரணம் ‘அரங்கேற்றம்’ பார்த்தாலே தெரியும். அன்று, இன்றுபோல் நடிக்கும் கமல்ஹாசன்ம இல்லை. ஏனெனில், அந்தக் கமல்ஹாசனுக்கு பல விஷயங்கள் தெரியாது. டான்ஸ் தெரியும், பரதநாட்டியம் தெரியும். கொஞ்சமாக சங்கீதம் பாடுவான். ஆனால், பாலசந்தர் என்ற பெரிய வாத்தியாரிடம் வேலை செய்து அவர் மாதிரி எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு எழுதவும் ஆரம்பித்து அதற்கான விருதுகளும் வாங்கி டைரக்டராகவும் ஆகி இருக்கிறேன். அதற்கு 45 வருடங்கள் ஆகியிருக்கின்றன.

62 வருஷங்களாக நான் சந்திரஹாசனுடன் வாழ்ந்திருக்கிறேன். அவரும் நல்ல வாத்தியார்தான். அவர் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றாலும், என் வாழ்க்கை தடைப்படும் அளவுக்கு இழப்பல்ல. ஏனெனில், நன்றாகக் கற்றுக்கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்; என்னை இந்த நாளுக்குத் தயார்படுத்திவிட்டுதான் போயிருக்கிறார். திடீரென என்னை ஏமாற்றிவிட்டுப் போகவில்லை. இந்தப் பேச்சை நாங்கள் பேச ஆரம்பித்து 20 வருடங்கள் ஆகின்றன. என்னை குழந்தையிலிருந்து எடுத்து வளர்த்தவர் என்பதால், அவர் என்னை தன் மூத்த மகனாகத்தான் பார்த்தார். ஒரு மூத்த மகனுக்கு என்னென்ன அறிவுரைகள் சொல்ல வேண்டுமோ, அனைத்தையும் சொல்லாமல் போயிருப்பார் என நம்புகிறீர்களா நீங்கள்? ஒரு வீட்டில் பெரிய தகப்பனார் இறந்த பிறகு மூத்தவன் என்ன செய்வானோ, அதையெல்லாம் செய்ய நானும் முனைவேன்.”

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்