Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்க காலேஜ் ஃபேர்வெல் டே பாட்டு ஞாபகம் இருக்கா? #FarewellMemories

இது கல்லூரிகளின் இலையுதிர்க் காலம். மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் ஒன்றாகச் சுற்றித் திரிந்து, ஒன்றாகக் கல்லூரிக்குப் போய், ஒன்றாக சைட் அடித்து, ஒன்றாக சஸ்பென்ட் ஆகி... ஒரு கூட்டுக் கிளியாக வாழ்கின்ற அனுபவம் மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும். இனி அவர்களில் பலருக்குக் கல்லூரி வாழ்க்கை மீண்டும் அமையப் போவதில்லை. சில ஆண்டுகளின் மொத்த நிகழ்வுகளையும் அசைபோட ஆட்டோகிராஃப் டைரிகளைச் சுமந்து திரியும் நண்பர்கள், கடைசி நாள் பிரிவை ஆற்றமாட்டாமல் குலுங்கி அழும் தோழிகள் என கொஞ்சம் ஓவர்டோஸாக இருந்தாலும் அவை எல்லாமே அழகான நினைவுகள்தாம். இந்த வருடம் கல்லூரியை நிறைவு செய்யும் மாணவர்களும், எப்போதோ காலேஜ் படித்து முடித்தவர்கள் ரீவைண்ட் செய்துகொள்ளவும் இங்கே சில ஃபேர்வெல் பாடல்கள்... 

காலேஜ் ஃபேர்வெல் பாடல்கள்

பசுமை நிறைந்த நினைவுகளே... 
கல்லூரியின் பிரிவு உபசார விழாவின் போது, அங்கு படிக்கும் மாணவர்களான நடிகர் திலகம் சிவாஜிகணேசன் - சாவித்திரி இணைந்து பாடுமாறு வரும் இந்தப் பாடல்தான் காலம் தாண்டியும் ஃபேர்வல் டேக்களில் பாடப்படுகிறது. கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.எஸ் - பி.சுசீலா ஆகியோர் கண்ணதாசனின் வரிகளைப் பாட 'ரத்த திலகம்' படத்தில் இந்தப்பாடல் வெளிவந்தது. 

மனசே மனசே...
'ஏப்ரல் மாதத்தில்' திரைப்படத்தில் வெங்கட்பிரபு, ஶ்ரீகாந்த் நண்பர்களோடு சேர்ந்து 'ஃபேர்வெல் டே' நிகழ்வில் பாடும் பாடல் இது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் கார்த்திக் இந்தப் பாடலைப் பாடினார். காதல், நட்பு, பிரிவு என சோக ஸ்மைலி போடும் கடைசி நாள்களின் வலியை இந்தப் பாடலைக் கேட்டால் உணரலாம். 

நண்பனைப் பார்த்த... 
விஜய் ஆண்டனி இசையில் பென்னி தயால் பாடிய இந்தப் பாடல் 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் இடம்பெற்றது. நண்பர்கள் ஒன்றாக இருந்த காலத்தின் மகிழ்ச்சியான தருணங்களைப் பதிவு செய்த இந்தப்பாடலை மறைந்த கவிஞர் அண்ணாமலை எழுதினார். 

ஜூன் ஜூலை மாதம்... 
பாலாஜி சக்திவேல் இயக்கிய 'கல்லூரி' திரைப்படத்தில் வரும் பாடல் இது. இந்தப் பாடலுக்கு ஜோஸ்வா ஶ்ரீதர் இசையமைத்திருந்தார். கல்லூரியில் சேர்ந்தது முதல் ஆண்டு முதல் வகுப்பின் இறுதி வரை நிகழும் தருணங்களை அசைபோட்டுக் கடைசியில் வரும் பாட்டு இது. 

கல்லூரித் தாயே... 
வைரமுத்துவின் வரிகளில் மிக்கி மேயர் இசையமைத்த இந்தப் பாடல் 'இனிது இனிது' திரைப்படத்தில் இடம்பெற்றது. காலேஜ் வாழ்க்கையைக் கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தில் இந்தப் பாடல் 'ஃபேர்வெல் டே' அன்று பாடப்படும். கல்லூரியே கோவில், பேராசிரியர்களே கடவுள் என இயல்புக்கு மாறான காமெடியெல்லாம் கட்சி காலத்தில் தான் தோன்றும் போல... 

நட்பே நட்பே...
இரட்டை இயக்குநர்கள் ஜேடி & ஜெர்ரி இயக்கத்தில் வெளிவந்த திகில் படம் 'விசில்'. இந்தப் படம் கல்லூரியில் உலாவும் ஒரு அமானுஷ்யக் கதையைப் பற்றி எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் வரும் இந்த நட்புப் பிரிவுபசாரப் பாடலுக்கு இமான் இசையமைத்தார். 

கண்கள் கலங்கிட... 
நந்தா பெரியசாமி இயக்கிய 'ஒரு கல்லூரியின் கதை' படத்தில் வரும் இந்தப் பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, கார்த்திக் பாடினார். 

ஏப்ரல் மேயிலே பசுமை... 
காலம் முழுக்க கல்லூரி மாணவராகவே நடித்த முரளி கதாநாயகனாக நடித்த 'இதயம்' படத்தில் வரும் பாடல் இது. வாலி வரிகளுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் பாடல் காட்சியில் பிரபுதேவா, ராஜுசுந்தரம் ஆகியோர் நடித்திருப்பார்கள். 

கும்தலக்கடி கானா...
யுவன் ஷங்கர் ராஜா இசையில் நா.முத்துக்குமாரின் வரிகளில் 'சண்டக்கோழி' படத்தில் வெளிவந்த பாடல் இது. கல்லூரி நண்பர்களின் பிரிவையும் கொண்டாட்டமாகப் பதிவு செய்த இந்தப் பாடலைப் பாடகர்கள் கார்த்திக், ரஞ்சித் ஆகியோர் பாடினர். 

முஸ்தபா முஸ்தபா...
'காதல் தேசம்' திரைப்படத்தில் வந்த எவர்க்ரீன் ஃப்ரெண்ட்ஷிப் பாடல் இது. கல்லூரி நண்பர் குழுக்களின் ஃபேவரைட் பாடலாகப் பின்னணியில் இன்றுவரை ஒலித்துக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல். ராகிங் முதல் ஃபேர்வெல் டே வரை கல்லூரி காலத்தின் நினைவுகளை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துப் பாடினார். இந்தி மற்றும் தெலுங்கிலும் வெளியான இந்தப் படத்தின் 'முஸ்தபா முஸ்தபா' பாடலையும் இவரே பாடினார். 

உங்கள் கல்லூரிக் காலத்தில் நண்பர்கள் விடைபெறும்போது ஒலித்த பாடல்களைக் கமென்ட்டில் பதிவு செய்து ஞாபகச் சிறகடிக்கலாம்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement