Published:Updated:

இன்னும் எத்தனை வருஷத்துக்கு இதே ஃபார்முலா? - திகில் பட க்ளிஷேக்கள்

செ.சங்கீதா
இன்னும் எத்தனை வருஷத்துக்கு இதே ஃபார்முலா? - திகில் பட க்ளிஷேக்கள்
இன்னும் எத்தனை வருஷத்துக்கு இதே ஃபார்முலா? - திகில் பட க்ளிஷேக்கள்

முன்னொரு பாகுபலி காலத்துல 'நான் பேயை நேர்ல பார்த்திருக்கேனே'னு யாராவது சொல்லிட்டா போதும், மொத்த க்ளாஸே அடுத்து என்ன சொல்லுவான்னு அவன் வாயை பார்த்துட்டேதான் இருந்துருப்போம். ஆனா இப்ப அதே வசனத்தை நேத்து அடிச்ச வெயில்ல இன்னிக்கு கருப்பான பசங்ககிட்ட சொன்னாக் கூட கண்டுக்க மாட்டாங்க. 'மாசம் நாலு திகில் படம் பாக்குறோம். காஞ்சனா அக்கா எல்லாம் என் கஸின் மாதிரி. பயப்பட எல்லாம் முடியாது'னு அசால்ட்டா சொல்லி சமாளிச்சுடுறாங்க. அப்படி இந்த பேய்ப்படங்கள் படுத்துற பாடு இருக்கே!.

முதல்ல பேய்ப்படங்களுக்கு தேவையான பொருட்கள்னு பாத்தா பெருசா ஒண்ணுமில்லீங்க. பேய் வேஷம் போட்டா பொருந்துற மாதிரி ஒரு ஹீரோயின், லைட்டா மேக்கப் பூசிக்க ரெண்டு டன் பவுடர், பேய்கிட்ட மொக்கை போட்டு அடிவாங்குற காமெடியன், பல வருஷமா பாழடைஞ்சு இருட்டுலேயே உட்கார்ந்திருக்குற ஒரு பங்களா, தேவைன்னா ப்ரேம்ல அடிக்கடி காட்ட ஒரு கொழுத்த கருப்புப் பூனை. அவ்வளவுதான். 

இருட்டுனதுக்கு அப்புறம் வெளியே வரத் தயங்குற முனி லாரன்ஸ் ரக பயபுள்ளைங்க எல்லாம் தைரியமா வெளியே வரக் காரணம் காமெடியனாகவே மாறிட்ட இந்த பேய்ங்கதான். நாம பயமுறுத்த வந்திருக்கோங்கிறதை கொஞ்சம்கூட ஞாபகம் வச்சுக்காம காமெடியன் கூட சேர்ந்து சிரிப்பு காட்டுற இந்தப் பேய்ங்களாலதான் இளவட்டங்க பேய் பயம் இல்லாம இருக்காங்ககிறது நம்மில் எத்தினி பேருக்கு...? இதுல சில பேருக்கு பேய் மேலேயே ல்தகாசைஆ எல்லாம் வந்து டூயட் பாடுறாங்களாம்.

இட்லி, தோசை, பணியாரம்னு ரகரகமா சுட்டாலும் மாவு ஒண்ணுதானே மாஸ்டர். போன வாரம் பார்த்த படத்துகே இந்த வாரமும் வந்துட்டோமானு டவுட் ஆகுற அளவுக்கு ஆறு வித்தியாசங்கள் கூட கண்டுபிடிக்க முடியாதபடி படம் எடுக்குறாங்க. அதே கொலை, அதே ப்ளாஷ்பேக், அதே பேய் ஓட்டுற பெரியவர். ஹாலிவுட்ல மட்டும் எட் - லாரன் ஜோடி பேய் ஓட்டும்.

பேய்ப்படம் பார்க்கிறதுக்கு முக்கியமான கண்டிஷன், உங்க மூளையை கழட்டி போற வழில சேட்டுக் கடையில அடமானம் வச்சுடணும். வேர் இஸ் தி லா ஆஃப் கிராவிட்டி, வேர் இஸ் த லா ஆஃப் இல்லுமினாட்டினு ஏதாவது கேள்வி கேட்டா நம்மளை ஊரை விட்டு ஒதுக்கி வச்சு உப்புப் புளி புழங்கமாட்டாங்க. ஜாக்கிரதை. 
           
பேய்களுக்குனு சில கொள்கைகள் எல்லாம் வச்சுருக்காங்க. பேய் எப்பவும் பெண்ணாதான் இருக்கணும். ஃப்ரீ ஹேர்ல இருக்கணும். கண்ணை சுத்தி க்ரேல்னு கருவளையம் இருக்கணும். ஹீரோக்கள் வேணாம்னு ஒதுக்கித் தள்ளுன பன்ச் டயலாக்குகளை பேசணும். கண்ணைக் கூச வைக்கிற காஸ்ட்யூம்கள் - இதுதான் பேய்களுக்கான வரைமுறைகள். 

இப்படி வாரத்துக்கு ஒருமுறை மறக்காம ஆஜராகுற பேய்களை வச்சு நீங்க மத்தவங்களை பயமுறுத்தணும்னா படத்துக்கு நடுவுல நீங்களா அய்யோ, அம்மானு கத்தி கதறுனாதான் உண்டு. சுத்தி இருக்குறதுல ஒரு நாலு பேராவது பயப்படுவாங்கல. வேற என்ன பண்ண? இனி பேய்ப்படம் எல்லாம் பார்த்தா பயம் வராது. கொட்டாவிதான் வரும்!              

செ.சங்கீதா

Student Reporter