சமந்தா - நாக சைதன்யா காதல் கதை ரீவைண்ட்! | Samantha - Naga Chaitanya Marriage going to happen on October

வெளியிடப்பட்ட நேரம்: 12:13 (24/05/2017)

கடைசி தொடர்பு:12:12 (24/05/2017)

சமந்தா - நாக சைதன்யா காதல் கதை ரீவைண்ட்!

நாக சைதன்யா - சமந்தா திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியாகிவிட்டது.

``தேதி, இடம் இன்னும் முடிவுசெய்யவில்லை. அந்த விவரங்களை விரைவில் கூறுகிறேன்'' என, நாக சைதன்யா தான் நடித்திருக்கும் 'ராரன்டோய் வீடுக்கி சுட்டம்' பட புரமோஷன் நிகழ்வில் தெலுங்குப் பத்திரிகையாளர்களிடம் கூறியிருக்கிறார். இருவருக்குமான அறிமுகம், காதல், வீட்டினர் சம்மதம் எனப் பல நிலைகளைக் கடந்து வந்திருக்கும் இந்த ஜோடியைப் பற்றிய ரீ-கேப் இதோ... 

2009 - 2010:

சமந்தா

கௌதம் மேனன் இயக்கத்தில் நாக சைதன்யா, சமந்தா நடித்த படம் `ஏ மாய சேசாவே' ('விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு வெர்ஷன்)-வில் தொடங்கியது இருவருக்குமான நட்பு. 'ஏ மாய சேசாவே', சமந்தாவுக்கு தெலுங்கில் முதல் படம்; நாக சைதன்யாவுக்கு இரண்டாவது படம் என்றாலும் இதன் மூலம்தான் பெரிய பிரேக் கிடைத்தது. தவிர, திரை உலகில் கிடைத்த முதல் ஃப்ரெண்ட் சைதன்யா என்பதால், இருவருக்குமான நட்பு அழகாகத் தொடங்கியது. இந்தப் படத்துக்குப் பிறகு ரசிகர்களுக்கு இருவரும் கார்த்திக்-ஜெஸ்ஸியாகத்தான் தெரிந்தார்கள். 

2011 - 2013:

இருவருக்கும் சில வெற்றி, சில தோல்விகள் வந்துகொண்டிருந்தன. சமந்தாவின் அந்த ட்வீட், சைதன்யா - சமந்தா இருவருக்கும் இடையில் ஏதோ இருக்கிறது என்ற செய்தியைத் தொடங்கிவைத்தது. அது நாக சைதன்யாவுக்கு சமந்தா செய்த பிறந்தநாள் வாழ்த்து ட்வீட். 

 

2014:

Manam

'மனம்' படத்தில், சைதன்யா - சமந்தா கணவன் மனைவியாக நடித்தனர். படம் பெரிய ஹிட், கூடவே இவர்கள் கெமிஸ்ட்ரியும். அடுத்த படமான 'ஆட்டோநகர் சூர்யா' படத்திலும் இணைந்து நடித்தனர். படம் படுதோல்வி என்றாலும், `சைதன்யா - சமந்தா  ஜோடி நிஜத்திலும் இணைவார்கள்' எனத் தீவிரமாக நம்பினார்கள் ரசிகர்கள். படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் அது கொஞ்சம் வெளிப்பட்டது. 

2016:

"ஆம், நான் காதலில் இருக்கிறேன்" யார் என்று பெயர் சொல்லாமல் பேட்டி ஒன்றில் திருமணம் பற்றிய கேள்விக்குப் பதிலளித்திருந்தார் சமந்தா. சில தினங்களுக்குப் பிறகு தான் நடித்த 'அ ஆ' படத்தின் பிரீமியர் ஷோவுக்கு இருவரும் இணைந்து வந்ததுதான் தாமதம், `சைதன்யா - சமந்தா இடையில் காதல்' எனச் செய்திகள் மீண்டும் பரவின.

இதற்கிடையில் நாகார்ஜுனா அளித்த பேட்டி ஒன்றில், `தனக்குப் பிடித்த நபரை சைதன்யா தேர்ந்தெடுத்ததில் அமலாவும் நானும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்' என்று கூறியிருந்தார். ஆனால், அப்போதுகூட யார் எனப் பெயரைக் கூறவில்லை. 'அ ஆ' பட புரமோஷன் பேட்டியில்கூட `சரியான சமயம் வரும்போது நானே என் திருமணம் பற்றி கூறுவேன்' என்றே சொல்லியிருந்தார் சமந்தா.

2017:

Nagachaithanya

அந்தச் சமயமும் வந்தது. இருவரின் காதலையும் அறிவித்த அந்த நாள் ஜனவரி 29. அன்றுதான் சமந்தா - நாக சைதன்யா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகும் ஓயவில்லை இவர்களின் திருமணம் குறித்த புரளிகள். `இருவருக்கும் ரகசியத் திருமணம் நடந்துவிட்டது', `திருமணம் நிறுத்தப்பட்டிருக்கிறது', ` `திருமணத்துக்குப் பிறகு நடிப்பேன்' என சமந்தா கூறியது பிரச்னை ஆகியிருக்கிறது' என்பதாகப் பல வதந்திகள் வட்டமிட்டன. இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக நாக சைதன்யா தங்கள் திருமணம் அக்டோபரில் நடக்கவிருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார். "விரைவில் எங்கள் திருமணம் குறித்த முழு விவரத்தையும் அறிவிப்போம். அக்டோபரில் இரு குடும்ப முறைப்படியும் நடக்கவிருக்கிறது திருமணம்" என 'ராரன்டோய் வீடுக்கி சுட்டம்' படத்தின் புரமோஷன் நிகழ்வில் தெலுங்குப் பத்திரிகைகளிடம் கூறியிருக்கிறார் நாக சைத்தன்யா.

தற்போது நாக சைதன்யா நடித்து முடித்திருக்கும் 'ராரன்டோய் வீடுக்கி சுட்டம்' படத்தின் புரமோஷன் வேலைகளில் இருக்கிறார். சமந்தா 'ராஜூ காரி கதி 2', சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் 'மஹாநதி' ஆகிய படங்களில் தன்னுடைய போர்ஷனை முடித்துவிட்டாராம். தமிழில் நடித்துக்கொண்டிருக்கும் படங்களையும் செப்டம்பருக்குள் முடித்துவிட்டு திருமண வேலைகளில் இறங்க இருக்கிறாராம் சமந்தா. அப்படி முடிக்க இயலாதபட்சத்தில் திருமணம் முடிந்த பிறகு அந்தப் படங்களில் கலந்துகொள்வதாகத் திட்டமாம்.

திருமணமே முடிவான பிறகும், "எங்களுக்குள் எப்போது காதல் வந்தது என்பது தெரியவில்லை. 'ஏ மாய சேசாவே' படத்தின் மூலம் சமந்தா எனக்கு அறிமுகமானார். அதற்கு கௌதம் மேனனுக்குதான் நன்றி கூற வேண்டும்.  அதன் பிறகு 'மனம்' படத்தில் நடித்தபோதும் எங்களுக்குள் நட்புதான் இருந்தது. அந்தப் படத்தில் கணவன் மனைவியாக நடித்தபோதுகூட இது நிஜத்தில் நடக்கப்போகிறது என நினைக்கவில்லை. இந்தக் காதல் எல்லாம் சமீபத்தில் நிகழ்ந்திருக்கிறது. எங்களின் உறவு இயற்கையாகவே நிகழ்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்" என்கிறார் நாக சைதன்யா.

எது எப்படியோ தாங்கள் ஸ்க்ரீனில் ரசித்த ஜோடி நிஜத்திலும் சேர இருக்கிறது என்பதால், ரசிகர்கள் செம ஹேப்பி.

வாழ்த்துகள் சமந்தா - நாக சைதன்யா!


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close