ஆயிரத்து ஐநூறு படம் கண்ட ஆச்சி மனோரமா! நினைவுப் பகிர்வு | Special article about Veteran Actress Manorama aachi

வெளியிடப்பட்ட நேரம்: 09:23 (26/05/2017)

கடைசி தொடர்பு:09:23 (26/05/2017)

ஆயிரத்து ஐநூறு படம் கண்ட ஆச்சி மனோரமா! நினைவுப் பகிர்வு

ல கதாபாத்திரங்களில் நடித்துத் தமிழ் சினிமாத் துறையில் கொடிகட்டிப் பறந்த 'ஆச்சி' மனோரமா அவர்களது வாழ்க்கையில் சினிமா எனும் அத்தியாயம் எப்படித் தொடங்கியது..? கோபிசாந்தா டு 'ஆச்சி' மனோரமா ஒரு சின்ன ரீவைண்ட்!

மனோரமா ஆச்சி

பள்ளத்தூர் பாப்பா :

மன்னார்குடியைச் சேர்ந்த காசி கிளக்குடையார் - ராமமிர்தம் தம்பதியருக்குப் பிறந்தவர்தான் கோபிசாந்தா. ராமமிர்தம் அவர்களது தங்கையையே காசி கிளக்குடையார் இரண்டாம் தாரமாக மணந்துகொண்டார். நாளடைவில் காசி கிளக்குடையாரால் புறக்கணிக்கப்பட்டதாலும், வறுமையின் காரணத்தாலும் ஊரை விட்டு வெளியேறி காரைக்குடியில் உள்ள பள்ளத்தூர் என்ற கிராமத்துக்கு குடி புகுந்தனர். கோபிசாந்தா தன்னுடைய பள்ளிப்படிப்பைப் பள்ளத்தூரில்தான் ஆரம்பித்தார். அவர் சிறு வயதில் இருந்தே பாட்டின் மீது ஆர்வமாகவும், நன்றாகப் பாடும் திறன் கொண்டவராகவும் திகழ்ந்தார். பல நாடகங்களில் பாடியும் இருக்கிறார். ஒரு காலகட்டத்தில் அவரது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தினால் தன் பள்ளிப் படிப்பினைப் பாதியிலேயே நிறுத்திவிட்டார். அதன் பின்னர் ஒரு பண்ணையார் வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பணியில் வேலைக்குச் சேர்ந்தார். அவரது அம்மாவின் கனவே இவரை ஒரு நல்ல டாக்டராக்கிவிட வேண்டுமென்பதுதான். ஆனால் வறுமையின் பிடியினாலும், அவரது அம்மா உடல்நிலை காரணமாகவும் அவர் தன் படிப்பினைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டார்.

நாடக உலகின் ராணி :

ஒருநாள் அவருடைய ஊர் நிகழ்ச்சி ஒன்றில் 'அந்தமான் காதலி' எனும் நாடகத்தை அரங்கேற்றினார்கள். அந்த நாடகத்தின் கதாநாயகிக்குச் சரியாகப் பாட வராத காரணத்தினால், அந்த வாய்ப்பு மனோரமாவைத் தேடி வந்தது. அந்த நாடகத்தில் நினைத்துப் பார்க்காத அளவுக்குத் தன் திறமையினை இனிமையான குரல், நடனம், நடிப்பு ஆகிய மூன்றின் வாயிலாக வெளிக்காட்டினார். அதைக் கண்ட ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டினார்கள். அதுமட்டுமல்லாமல், அந்த நாடகத்தில் பணியாற்றிய இயக்குநர் சுப்பிரமணியனும், ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் கோபிசாந்தா என்ற அந்தப் பள்ளத்தூர் பாப்பாவுக்கு 'மனோரமா' என்று பெயரிட்டனர். அதன் பின்னர் பல்வேறு நாடகங்களில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி பல பாராட்டுகளைப் பெற்றதோடு அல்லாமல் 'நாடக உலகின் ராணி' என்று போற்றும் அளவிற்கு உயர்ந்தார். ஆரம்பத்தில் வைரம் நாடக சபா நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் புதுக்கோட்டை எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாடகக் கம்பெனியின் சொந்தக்காரரான எஸ்.எஸ்.ஆரிடம் பி.ஏ.குமார் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டார். நாட்கள் செல்லச்செல்ல, மனோரமாவின் திறமையை அடையாளம் கண்ட ராஜேந்திரன் தனது எஸ்.எஸ்.ஆர் நாடக மன்றத்தில் சேர்த்துக் கொண்டார். அதன் பின் எண்ணற்ற நாடகங்களில் நடித்து மனோரமா ஆச்சி தன் திறமையினை வளர்த்துக் கொண்டார்.   

மனோரமா ஆச்சி

எதிர் நீச்சலடி :

அதே நாடகக் குழுவில் மேனேஜராக இருக்கும் எஸ்.எம்.ராமநாதன் என்பவர் மனோரமாவைக் காதலிப்பதாக தெரிவித்தார். அவர் காதலை ஏற்றுக்கொண்டு திருமணம் முடிந்து, இருவருக்கும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. கல்யாணம் ஆனாலும் கலையின் மேல் இருக்கும் ஆர்வம் குறையாமல் இருந்ததன் காரணமாக  'இன்ப வாழ்வு' எனும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தது. ஆனால் அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. அதற்குப் பிறகு கண்ணதாசனின் 'உண்மையின்கோட்டை' எனும் படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் போட்டார். ஆனால் எதிர்பாரா விதமாக அந்தப் படமும் தொடக்கத்தோடு நின்றுவிட்டது. மிகுந்த மன வருத்தத்துடன் மறுபடியும் நாடக உலகத்துக்குள்ளே வந்துவிட்டார். கடைசியில், 1958-ல் கண்ணதாசன் இயக்கிய 'மாலையிட்ட மங்கை' எனும் திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக சினிமா உலகத்துக்குள் ஓட ஆரம்பித்தார். சினிமாவில் இருந்துகொண்டே தன் நாடகப் பாதையிலும் பயணித்துக்கொண்டேதான் இருந்தார். 'களத்தூர் கண்ணம்மா', 'கொஞ்சும் குமரி', 'தில்லானா மோகனாம்பாள்', 'எதிர் நீச்சல்', 'பட்டிக்காடா பட்டணமா', 'காசேதான் கடவுளடா' எனத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துத் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் மனோரமா. தமிழ் மொழி சினிமாக்களில் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிப் படங்களிலும் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. இதுவரை 1500-க்கும் மேல் படங்களில் நடித்து உலக சாதனை புரிந்து 'கின்னஸ்' புத்தகத்தில் தன் பெயரை எழுதச் செய்தார். அதுமட்டுமின்றி 5000-க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்திருக்கிறார். 

கம்முனு கெட :

ஆச்சி, வெர்சடைல் நடிப்பை வெளிக்காட்டுவதில் சிறந்து விளங்கியவர். 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் குணச்சித்திர நடிப்போடு சேர்த்துக் காமெடியாகவும் நடித்திருப்பார். அதில் கிஷ்முவுடன் இடம்பெற்ற காமெடிக் காட்சி எல்லோர் மனதில் நின்ற காட்சி. 'கம்முனு கெட' எனச் சொல்லிவிட்டு ஒரு ஃப்ளோவில் பேசிக்கொண்டே இருப்பார். 'சின்ன கவுண்டர்' படத்தில் சுகன்யாவுடன் இடம்பெற்ற காமெடிக் காட்சியில் இவர் சொல்லும் 'நான் மட்டும் உனக்கு மாமியாரா வாய்ச்சேன்னா அந்த வெடுக்கு வெடுக்குனு ஆட்டுற இடுப்பெழும்ப உடைச்சி ஒட்டியானமாப் போட்டுக்குவேன் ஜாக்கிரதை' என்று சொல்லும் டயலாக் பயங்கர ஃபேமஸ். இப்படி காமெடி ட்ராக்கில் போய்க்கொண்டே மறு பக்கம் விஜயகாந்தின் ஆத்தாவாக சீரியஸ் சீன்களிலும் வெளுத்து வாங்கினார். எந்தப் படத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரு பக்கம் காமெடி, மறுபக்கம் நடிப்பு. இது ஆச்சியால் மட்டும்தான் முடியும். அவர் நடித்தவற்றுள் ஒன்றிரண்டை மட்டும் குறிப்பிட்டுச் சிலாகிப்பதெல்லாம் இயலவே இயலாத காரியம். நாம கம்முனு கெடப்போம்!

அதுக்கும் மேல :

இவை அனைத்தையும்விட தமிழ்நாட்டின் முதல்வர்களான அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநிலத்தின் முதல்வரான என்.டி.ஆர் ஆகிய ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமையையும் கொண்டவர் மனோரமா மட்டுமே. தமிழ்நாடு அரசின் 'கலைமாமணி' விருது, 1988-ல் 'புதிய பாதை' படத்தில் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது, 2002-ல் 'பத்மஶ்ரீ' விருது, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக அண்ணா விருது, என்.எஸ்.கே விருது, எம்.ஜி.ஆர் விருது, ஜெயலலிதா விருது எனப் பல விருதுகளை அள்ளிக் குவித்துள்ளார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த மனோரமா குணச்சித்திர வேடங்களிலும் கால் பதிக்கத் தொடங்கினார். அதிலும் ஒரு ரவுண்ட் வந்த ஆச்சி, தன் நடிப்பு மூலம் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். குணச்சித்திர வேடங்களில் இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது எனலாம். சாதாரண மேடை நாடகத்தில் ஆரம்பித்த இவர் தற்பொழுது பல பெண் கலைஞர்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார். சில வருடங்களாக இவரது உடல் நிலை சீராக இல்லாத காரணத்தினால் அக்டோபர் 10, 2015 அன்று மரணமைடந்தார். இவரது இறுதி அஞ்சலியில் கலந்துகொண்ட ஜெயலலிதா ''இவர் இறப்புச் செய்தியைக் கேட்ட என்னால் முதலில் நம்ப முடியவில்லை. இவர் எட்டிய இலக்கை யாராலும் அடைய முடியாது, இவர் எனக்கு மூத்த சகோதரி. என்னை அம்மு என்றழைப்பவர்களுள் இவரும் ஒருவர். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் நான் அவர் வீட்டுக்கும், அவர் என் வீட்டுக்கும் வந்து உரையாடுவது வழக்கம். சிவாஜி கணேசன் 'நடிகர் திலகம்' என்றழைக்கப்பட்டால், இவர் 'நடிகையர் திலகம்' என்றே அழைக்கப்படுவார்'' என்று ஆச்சியின் புகழ்பாடினார். 

இறந்தும் பலர் மனதில் குடிகொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் 'ஆச்சி' என்றழைக்கப்படும் 'நடிகையர் திலகம்' மனோரமா அவர்களின் பெருமை காலம் கடந்தும் சினிமா வரலாற்றில் நிற்கும். பிறந்தநாள் வாழ்த்துகள் ஆச்சி!


டிரெண்டிங் @ விகடன்