Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு ஜார்ஜ், ஒரு மலர் டீச்சர், ஒரே ஒரு பிரேமம்! #2YearsOfPremam

"ஐந்து பெரிய நிறுவனங்களில் இருந்து பிரேமம் படத்தின் இந்தி ரீமேக்கிற்காக அணுகினார்கள். அதில் இரண்டு நிறுவனங்கள் 'எங்களிடம் திறமையான இயக்குநர்கள் இருக்கிறார்கள். உங்களையும் விட அவர்கள் பர்ஃபெக்ட்டாக படத்தை எடுப்பார்கள்' என்றார்கள். பிரேமம் படத்தின் அழகே, அதன் குறைகள் தான். எனவே படத்தை ரீமேக் செய்ய விரும்புபவர்கள்  ஃபர்ஃபெக்ட் ஷாட்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்." சில தினங்களுக்கு முன் அல்போன்ஸ் புத்திரன் முகநூலில் பதிந்திருந்த ட்வீட் இது. அல்போன்ஸ் சொன்னதுதான் உண்மையும் கூட. வழக்கமான சினிமா ஃபார்மெட்டுக்குள் அடக்காமல், அது போக்கிலேயே போய் பிரேமத்தை படம் பிடித்திருந்ததுதான் படத்தின் அழகும்! அந்த பிரேமம் வெளியாகி இரண்டு வருடம் நிறைவடைகிறது. இன்னுமும் பிரேமம் படம் பார்க்காதவர்கள் இருக்கலாம், ஆனால் படம் பற்றி கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. அதனால்தான் பிரேமம் அவ்வளவு ஸ்பெஷல்.

பிரேமம்

ஒரு சினிமா மொழிகளைக் கடந்து எல்லோரையும் சென்று சேர்வது, எப்போதாவது நிகழும் மேஜிக். அந்த மேஜிக்கை செய்ய படத்தின் இயக்குநர் ராஜமௌலி போல வித்தைக்காரராக இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. அல்போன்ஸ் புத்ரன் போல நண்பர்களுடன் இணைந்து ஜாலியாக ஒரு படத்தை எடுத்து அந்த கொண்டாட்ட உணர்வை ஆடியன்ஸுக்குக் கடத்துபவராகக் கூட இருக்கலாம். கேரளாவை விட அல்லது கேரளாவுக்கு சமமாக இந்தப் படம் மற்ற மொழிகளிலும் கொண்டாடப்பட்டது. சென்னையில் மட்டும் 200 நாட்கள் ஓடியது. காரணம் என்ன? மலர் டீச்சர் மட்டும் தானா? நிச்சயமாக இல்லை. அதைத் தாண்டி இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன.

 

இதே காதலை அழுத்தமாக ஆட்டோகிராஃபிலும், ஜாலியாக அட்டகத்தியிலும் நாம் பார்த்ததுதான். ஆனால், பிரேமத்தில் இரண்டையும் நாம் பார்க்க முடிந்தது ஒரு ஸ்பெஷல் காரணம்.

Letter

"என்டே சொந்தம் மேரிக்கி, 

நான் உன்ன முதல் முதல்ல சர்ச்சில் பார்த்தேன். அன்னைக்கி நீ ஆரஞ்ச் கலர் சுடிதார் போட்டிருந்த. இல்ல நான் சொல்ல வந்தது சிவப்பு போல இருந்த ஆரஞ்ச் கலர் சுடிதார்..." என அடித்தலும் திருத்தலுமாக காதல் கடிதம் எழுதி பின்பு "ச்சே இவ ஒரு நீலக் கலர் சுடிதார் போட்டுட்டு வந்திருக்கக் கூடாதா" என சலிப்போடு வேறு ஒரு பேப்பரை எடுத்து "என்டே சொந்தம் மேரிக்கி" இப்படி ஆரம்பிக்கும் படத்தின் முதல் காட்சி. இந்த கேன்டிட் உணர்வை படம் முழுக்க தருவதும், அதன் மூலமாகவே காமெடியோ, காதலோ, ஃபீலிங்கையோ கடத்துவது படத்தின் மிகப் பெரிய ப்ளஸ். ஹீரோவான ஜார்ஜின் மூன்று காலகட்டங்கள், அந்த காலகட்டத்தில் அவனின் காதல்தான் படத்தின் கதை. அதுகூடவே மேரி, மலர், செலின், சாம்பு, கோயா, ஆலுவா, ரெட் வெல்வட் கேக், ஜாவா இஸ் சிம்பிளானு, தாடி, கருப்பு சட்டை, வேஷ்டி, கூலர்ஸ், கண்ணு சுவக்கனு, மலரே நின்னே காணாதிருந்தால் என நினைத்து சிலிர்க்கப் பல விஷயங்களை உள்ளே வைத்துக் கொடுத்திருப்பார் இயக்குநர் அல்போன்ஸ். 

Malar

மேரியுடனான காதல் தோல்விக்குப் பிறகு இறுக்கமான முகத்துடனேயே அலையும் ஜார்ஜ் மறுபடி ஒரு காதல் வந்ததும் சகஜமாவார், மலர் டீச்சர் தன்னை மறந்த பின் மறுபடி இறுக்கம், மீண்டும் செலின் மீது காதல் வந்ததும் சகஜமாவார் ஜார்ஜ். இப்படி ரிலேஷன்ஷிப் வைத்து சுவாரஸ்யமான ஆட்டத்தை ஆட படம் முழுக்க ஃப்ரெஷ்ஷான சீன்களைக் கொடுத்து அசத்தியிருப்பார். படத்தின் மற்ற சிறப்புகள் படத்தின் இசை, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங். இயக்குநரானா அல்போன்ஸ் தான் படத்தின் எடிட்டரும் என்பதால் எந்த இடமும் நம்மை உறுத்தாமல் தொந்தரவு செய்யாமல் அடுத்த காட்சிக்கு நகர வைக்கும். படத்தின் பின்னணி இசையோ, பாடல்களோ லேசாக முணுமுணுத்தால் கூட பக்கத்திலிருப்பவரை உரக்கப் பாட வைக்கும் அளவுக்கு கவர்ந்திருந்தது, ராஜேஷ் முருகேசனின் இசை. படம் முழுவதும் இருந்த கேண்டிட் ஃபீல், செலின் கேக் சாப்பிடும் சீனோ, சகதியில் நிவின் சண்டை போடும் சீனோ அத்தனையும் அவ்வளவு அழகு.

Premam

நிறைய சிரிக்க வைத்து கொஞ்சம் கலங்க வைத்து, இது மொத்தத்தையும் ரசிக்க வைத்த விதத்தில் பிரேமம் மலையாள சினிமா மட்டும் அல்ல மறக்க முடியாத சினிமா. தெலுங்கில் பிரேமம் ரீமேக் ஆன போது அதற்கு இணையத்தில் அத்தனை எதிர்ப்புகள். குறிப்பாக மலர் டீச்சர் ரோலில் நடித்த ஸ்ருதிக்கு எதிராக அத்தனை மீம்கள். இவ்வளவுக்கும் தெலுங்கு பிரேமம் அத்தனை மோசமும் கிடையாது. ஆனால், பிரேமம் என்றால் அது ஒன்றுதான் இருக்க வேண்டும் என ரசிகர்களின் விருப்பமாக இருந்தது. ஆரம்பத்தில் சொன்னதுபோல பிரேமம் வேறு மொழியில் ரீமேக் செய்து, பிரேமத்தை விட பெட்டரான படத்தைக் கொடுக்க முடியும். ஆனால், அதன் மீது அக்கறைப்பட ஆட்கள் கிடையாது. தவிர இங்கு பிரேமத்தின் பெட்டர் வெர்ஷனை யாரும் விரும்பவும் இல்லை. இங்கு ஒரு ஜார்ஜ், ஒரு மலர் டீச்சர், ஒரே ஒரு பிரேமம்தான்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement