வெளியிடப்பட்ட நேரம்: 08:55 (31/05/2017)

கடைசி தொடர்பு:08:54 (31/05/2017)

பாலிவுட் படங்களின் சக்சஸ் சீக்ரெட் இதுதான்!

மிழ் சினிமாவில் நடிகர்களாக இருந்து நொடிந்துபோனவர்கள் பட்டியலைவிட, தயாரிப்பாளராக இருந்து காணாமல் போனவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். காலம் காலமாக தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே ஏன் நஷ்டமும் தோல்வியும் வருகிறது என்பதற்கு ஆயிரம் காரணங்களை அடுக்கலாம். அதில், சரியான 'திட்டமிடல்' இல்லாத தயாரிப்பையும், 'திட்டமிடலு'க்கு முக்கியத்துவம் கொடுக்காத நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்களையும் முதல் காரணமாக முன்னிறுத்தலாம். முன்னிறுத்த வேண்டும். 

இந்தியாவிலேயே அதிக படங்களைத் தயாரிப்பது தமிழ் திரைத்துறைதான். வாரத்திற்குப் பத்து படங்கள் ரிலீஸ் ஆகிக்கொண்டிருக்கும் சூழலிலும், பலநூறு படங்கள் ரிலீஸுக்கு வழியில்லாமல் முடங்கிக்கிடக்கிறது. ஆனால், பாலிவுட்டில் இருக்கும் 'ஃபெர்பெக்ட்' தமிழ்சினிமாக்களுக்கு இருக்கிறதா? என்றால்... வேறு வழியில்லாமல், விரல் விட்டுதான் எண்ணவேண்டும். முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்பு எப்படியோ... பாலிவுட்டின் சமீபகாலப் படங்களுக்கும், அந்தப் படங்களின் தயாரிப்புகளுக்கும் நிறையவே மாற்றம் இருக்கிறது. இந்த மாற்றம்தான் படத்தின் வெற்றியை மட்டுமல்ல, நஷ்டமில்லாத லாபத்தையும் கொடுக்கிறது. 

தயாரிப்பில் இருக்கும் இந்த தெளிவான திட்டமிடல்தான், பாலிவுட் படங்களின் தற்போதையை நேர்த்திக்கும் அப்படங்களின் வெற்றிக்கும் காரணம் என்கிறார் ஒளிப்பதிவாளர் ஞானம் சுப்பிரமணியன். சமீபத்திய பாலிவுட் படங்கள் எப்படித் தயாராகின்றன என்பது குறித்து, 'தமிழ் ஸ்டூடியோ' திரைப்பட அமைப்பிற்காகப் பேசியிருக்கிறார் இவர். சென்னை திரைப்படக் கல்லூரியில் படித்த ஞானம் சுப்பிரமணியன், கடந்த 15 ஆண்டுகளாக திரைப்படங்கள், ஆவணப்படங்கள், விளம்பரப் படங்கள் எனப் பாலிவுட்டில் இயங்கிக்கொண்டிருப்பவர். 

ஞானம் சுப்பிரமணியன்

* கடந்த பத்து, பதினைந்து வருடங்களாக பாலிவுட்டின் படத் தயாரிப்பு ஒழுங்கு நிலையில் இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்குப் பின்பற்றப்படும் திட்டமிடல் பாலிவுட்டில் தொடர்கிறது. 

* ஷூட்டிங்கில் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும் 'ரெக்கீ' (recce) செய்வார்கள். ரெக்கீ என்பது, ஷூட்டிங்கிற்கு முந்தையை தெளிவான திட்டமிடலுக்கான பெயர். இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் மூவரும் இணைந்து படப்பிடிப்பு நடத்தவிருக்கும் இடத்திற்குச் சென்று காட்சியமைப்பு குறித்து திட்டமிடுவார்கள். லைட்டிங், செட், ஆங்கிள், பேக்ரவுண்ட் வொர்க்ஸ்... என எல்லா திட்டமிடலும் இதில் இடம்பெறும். 

* ஒளிப்பதிவாளர், லொக்கேஷனில் இருக்கும் பருவநிலை, இயற்கை வெளிச்சம், காட்சிக்குத் தேவையான கலரிங் போன்ற விஷயங்களை எப்படி அமைக்கலாம் என உள்வாங்கிக்கொண்டால், இயக்குநர் காட்சி அமைப்பை எப்படித் தீர்மானிக்கலாம் என யோசித்துக்கொண்டிருப்பார். கலை இயக்குநரோ, சம்பந்தப்பட்ட லொக்கேஷனை இயக்குநரின் காட்சி அமைப்பிற்கு எப்படிப் பொருத்தலாம்? என தீர்மானித்துக்கொண்டிருப்பார். 

* முக்கியமான கேரக்டரில் நடிக்கவிருக்கும் நடிகருக்குப் பொறுத்தமான துணை நடிகரையும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச்சென்று லைட்டிங், ஷாட் உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்களைச் சரிபார்த்துக்கொள்வார்கள்.

* இயக்குநர் 'வியூ ஃபைன்டர்' உதவியுடன் காட்சி அமைப்பை உறுதி செய்துகொள்வார். படப்பிடிப்பு நடக்கவிருக்கும் இடத்திலேயே காட்சி அமைப்பிற்கான, கேமரா கோணத்திற்கான காட்சிகளை அனைத்தும் புகைப்படமாக எடுத்துக்கொள்ளப்படும். இயக்குநர் உறுதி செய்த ஃபிரேமிற்குத் தேவையான பொருள்களைக் கலை இயக்குநர் குறித்துக்கொள்வார். தேவைப்பட்டால், அனைத்து நடிகர், நடிகைகளுக்குமான காஸ்டியூம்களும் ஷூட்டிங்கிற்கு முன்பே தீர்மானிக்கப்படும். இதன்மூலம், ஷூட்டிங்கிள் அடிக்கடி முடிவுகளை மாற்றும் சூழல் வராது. 

* தமிழ்சினிமாவில் வாய்வழி உத்தரவாகவே இருக்கிறது கால்ஷீட். பாலிவுட்டில் அப்படி இல்லை. ஷூட்டிங் நடக்கவிருக்கும் இடம், கால்ஷீட் நாட்களின் எண்ணிக்கை, நடிக்கவேண்டிய காட்சியின் விளக்கம், ஷூட்டிங்கில் பங்கு பெறும் நடிகர் - நடிகைகள், ஜூனியர் - சீனியர் நடிகர்களின் விபரம், வரவேண்டிய நேரம், தங்கவேண்டிய இடம், கேமரா தவிர வேறு என்ன கருவிகள் பயன்படுத்தப்பட இருக்கிறது, இன்றைய காஸ்ட்யூம்... என ஏ டூ இஸட் விபரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அத்தனை நடிகர், நடிகைகள், டெக்னீசியன்கள் அனைவருக்கும் கொடுக்கப்படும்.

* மேற்சொன்ன விஷயங்களை எல்லாம் படத்தின் தயாரிப்பு நிர்வாகியும், படத்தின் முதன்மை உதவி இயக்குநரும் இணைந்து, அனைத்துத் துறைகளைச் சார்ந்தவர்களோடு கலந்துபேசி முடிவு எடுப்பார்கள். 

* படப்பிடிப்பில் பங்கு பெரும் அனைவருக்கும் தண்ணீர் கொடுப்பவர், சாப்பாடு பறிமாறுபவர் உள்பட அனைவருக்கும் ஒரு தெளிவான 'முன் தயாரிப்பு' கொடுக்கப்பட்டிருக்கும். ஷூட்டிங்கிற்கு எந்த வகையிலும் பாதிக்காத இடத்தில் உணவு பறிமாறப்படும், லொக்கேஷனை எந்தவகையிலும் தொந்தரவு செய்யாத இடத்தில் ஜெனரேட்டர் வண்டி, கேரவன் போன்றவை நிற்க வைக்கப்படும்.

* ஒரேநாளில் இரு இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது எனில், முதலில் ஷூட்டிங் நடத்தப்படும் இடத்தில் இருந்து அடுத்த இடத்திற்கு விரைந்து சென்று ஷூட்டிங் நடத்தும் வகையில் இருக்கும் திட்டமிடல். இதுபோன்ற சூழலில், 'இந்த இடத்தில் மட்டுமே கேரவன் நிறுத்தப்படவேண்டும்', 'இந்த இடத்தில் ஜெனரேட்டர் இருக்கவேண்டும்' என்ற வகையில் தெளிவான திட்டமிடல் இருக்கும்.  

* முன் தயாரிப்பு, படப்பிடிப்பு, போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள்... இந்த மூன்றும் மட்டுமல்ல, பெரும்பாலான படங்களின் ரிலீஸ் தேதிகூட முன்கூட்டியே திட்டமிடப்பட்டுதான் பாலிவுட் படங்கள் தயாராகிறது.

ஞானம் சுப்பிரமணியன் - பாலிவுட்

இன்னும் பல தெளிவான வரைமுறைகள் பாலிவுட்டில் பின்பற்றப்படுகின்றன என்பதை விளக்கும் ஞானம் சுப்பிரமணியன்,சமீபத்தில், தான் பணியாற்றிய 'தங்கல்' படம் குறித்து, ''கமர்ஷியலாகப் பெரும் வெற்றி பெற்ற 'தங்கல்' படத்தின் படப்பிடிப்பு 110 நாட்கள் திட்டமிட்டுப் படமாக்கப்பட்டது. முதல் ஆறுமாத ஷூட்டிங்கில் ஒரு பகுதியும், ஐந்துமாத இடைவெளிக்குப் பிறகு அமீர்கானின் இளவயது காட்சிகளும் படமாக்கப்பட்டது. 110 நாட்களில் ஒருநாள் கூடவும் இல்லை, குறையவும் இல்லை. அந்தளவுக்கு நுணுக்கமான திட்டமிடல் அப்படத்தில் இருந்தது. படம் எதார்த்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களையே அமீர்கான் மனைவி சமைக்கும் பாத்திரங்களாகப் பயன்படுத்தினோம். படத்தில் இடம்பெற்ற பெரும்பாலான கேரக்டர்களின் உடைகள் தினமும் துவைத்து மடித்துவைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இவை அனைத்துமே ஷூட்டிங்கிற்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை.'' என்கிறார். 

தவிர, ''சினிமா என்பது கிரியேட்டிவிட்டிதான். ஆனால், திரைப்படத் தயாரிப்பு என்பது இன்னொரு நபருடைய பணம். அதுக்கு ஒரு படைப்பாளியாகப் பொறுப்பாக இருக்கவேண்டியது கடமை. திரைப்படத் தயாரிப்பைப் பொறுத்தவரை நேரம் மிகவும் முக்கியம். நேரத்தை எவ்வளவு மிச்சப்படுத்துகிறோமோ, அந்த அளவுக்குப் பணம் மிச்சம் ஆகும். திரைப்படத் தயாரிப்பில் பாலிவுட்டின் தற்போதைய ரகசியம் இதுதான். முன்கூட்டிய திட்டமிடலுடன் உருவாகும் படங்களின் படப்பிடிப்பு விரைவாக முடிவதுடன், தரமான படமாகவும் உருவாகும்!'' என்று முடிக்கிறார், ஞானம் சுப்பிரமணியன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்