Published:Updated:

சிவாஜி, ரஜினி, விஜய்க்கு திரைக்கு பின் நடந்த கதை!

தார்மிக் லீ
சிவாஜி, ரஜினி, விஜய்க்கு திரைக்கு பின் நடந்த கதை!
சிவாஜி, ரஜினி, விஜய்க்கு திரைக்கு பின் நடந்த கதை!

சினிமா... அன்றும், இன்றும் மக்களின் பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாகவே இருந்துவருகிறது. 'கடவுள் யாரது, யார் பார்த்தார்... அதைக் கண்ணில் காட்டியது இந்த சினிமாதான்'. சினிமாவை ஒரே வரியில் இப்படித்தான் வர்ணிக்க முடியும். சினிமா ஏன் இப்படி மெச்சப்படுகிறது... தமிழ் சினிமாவின் பெரிய சாதனையாளர்கள் எப்படி உருவானார்கள்... இன்றைய தமிழ் சினிமா எப்படி இருக்கிறது... இவற்றை மூன்று பதிவுகளாகக் காணலாம், முதல் பதிவு இதோ!

சினிமாவில் நுணுக்கமான விஷயங்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. அவை எல்லாமே ஒன்றிணைந்து அழகாய் வெளிவரும்போதுதான் முழுமையான சினிமாவாகிறது. காதலில் ஆரம்பித்து, அண்ணன் தம்பி பாசம், அக்கா தங்கை பாசம், அன்பூட்டும் அம்மா பாசம் என அனைத்தையும் கணநேரத்தில் நினைவுபடுத்தும் சக்தி சினிமாவுக்கு உள்ளது. நிஜ வாழ்க்கையில் அனுபவித்த ஒரு விஷயத்தை சினிமாவில் காணும்பொழுது, நம் உணர்ச்சிகளை மேலும் வலுப்படுத்தும் தன்மையை அது பெற்றிருப்பதை உணரமுடிகிறது. ஏதேனும் நினைவுகள் நமக்கு வந்தால் உடனேயே அது தொடர்பான பாடல்களைக் கேட்டோ, படத்தைப் பார்த்தோ கனெக்ட் செய்துகொள்கிற அளவுக்கு எல்லாவற்றைப் பற்றியும் சினிமாக்கள் வந்திருக்கின்றன.

சினிமா பலருக்கு பொழுதுபோக்காக இருந்தாலும், சிலருக்கு இதுவே லட்சியமாக மாறுகிறது. திரைக்கு முன் கைதட்டி, விசில் அடித்து சினிமாவைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ந்திட, அந்தத் திரைக்குப் பின்னால் இருக்கும் கஷ்டம் ஏராளம். சினிமாவுக்குள் நுழைவது கஷ்டம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால், அந்தக் கஷ்டத்தையும் இஷ்டப்பட்டு அனுபவிக்க வேண்டுமென்று நினைக்கும் பெரும் பட்டாளமே இங்கு உண்டு. எப்படியாவது சினிமாவில் ஜெயித்துவிட வேண்டும் என்று எந்தெந்த ஊர்களில் இருந்தோ சென்னைக்கு ரயில் ஏறி, அதில் ஜெயித்த பல கலைஞர்களை இங்கு கைகாட்டிச் சொல்லலாம். அதேசமயம் நீண்ட நாட்களாக சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் பல கலைஞர்களும் இருக்கவேதான் செய்கிறார்கள். அதற்காக, அவர்கள் சினிமாவை ஒருபோதும் குறைகூறியதே கிடையாது. ஒரு சில நல்ல படங்களைக் கொடுப்பதில் ஒருவருடைய வெற்றி அமைவதில்லை. விடாமுயற்சியோடு, அதில் சிறப்பான முறையில் செயல்பட்டு, அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதில்தான் ஒருவருடைய உண்மையான வெற்றியே அடங்கியிருக்கிறது. ரிட்டயர்மென்ட் இல்லாத ஒரே துறை சினிமாதான். அதை நல்ல விதத்தில் பயன்படுத்திக்கொண்டால் சினிமா ஒரு மனிதனுக்கு நல்ல ப்ளாட்ஃபார்மாக அமையும். 

சினிமாவில் நிறைகள், குறைகள் இரண்டுமே சரிசமமாக இருக்கின்றன. அப்படி, சினிமாவிற்குப் புதிதாக வந்தவர்களைப் பற்றிக் குறை கூறியவர்களையே, பின்னாட்களில் பாராட்ட வைத்த சாதனையாளர்களின் கதைகள்தாம் இவை... 

சிவாஜி :

சினிமாத் துறையில் 'நடிகர் திலகம்' என்று எல்லோராலும் மரியாதையுடன் அழைக்கப்படும் நடிகர் சிவாஜிகணேசனின் முதல் படத்தில், திரைக்குப் பின்னால் நடந்த கதை இது. நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் தயாரிப்பில் வெளியான படம் 'பராசக்தி'. சிவாஜிக்கு இதுதான் முதல் படமும் கூட. படப்பிடிப்புத் தளத்துக்கு வந்த தயாரிப்பாளரின் நண்பர், அறிமுக நடிகரான சிவாஜியைப் பார்த்ததும் 'இந்த குதிரைமூஞ்சிக்காரனையா கதாநாயகனா போட்டிருக்க... வாயை இப்படி பிளக்குறானேயா, படம் விளங்கினாப்லதான்' என்று சிவாஜியின் காதுபடவே பேசியிருக்கிறார். இதைக் கேட்டதும் மனமுடைந்து சோகத்தின் உச்சத்தில் எதையோ பறிகொடுத்ததுபோல் படப்பிடிப்புத் தளத்தில் உட்கார்ந்திருந்தார். தயாரிப்பாளர் அருகே வந்து, 'கவலைப்படாதய்யா...' என்று சொல்லி அவர் சொந்தச் செலவிலேயே சில மாதங்களுக்குச் சுற்றுலாவுக்கு அனுப்பிவைத்தார். பிறகு ஒருமுறை வந்துபார்த்த தயாரிப்பாளரின் நண்பர் 'யாருப்பா இது... புது கதாநாயகனா..' என ஆச்சரியமாகக் கேட்டதற்கு அவரேதான் எனச் சொன்னதும் பிரமித்துப்போய், 'அந்தத் தம்பியா இது...' என வியந்திருக்கிறார். 

ரஜினி :

ஆரம்பத்தில் வில்லனாக நடித்து வந்த ரஜினிகாந்த்துக்கு 'முள்ளும் மலரும்' படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தின் இயக்குநர் மகேந்திரன் தயாரிப்பாளர் வேணு செட்டியாரிடம் கதையைக் கூறியுள்ளார். கதை மிகவும் பிடித்துப்போய் 'யார் கதாநாயகன்?' என்ற கேட்டிருக்கிறார். ரஜினி என்ற பெயரை கேட்டதும் 'என்ன விளையாடுறியா... வில்லனாக நடிக்கும் ஒரு ஆள் எப்படி கதாநாயகனாக நடிப்பார். அதுவும் இல்லாமல் ஆள் கருப்பு வேற... வேணாம் வேற யாரையாவது சொல்லு' என்று சொல்லிவிட்டார். அதற்கு அந்தப் படத்தின் இயக்குநர் மகேந்திரன் 'இல்லை அந்த கதாபாத்திரத்துக்கு இவரின் நடிப்புதான் சிறப்பாக இருக்கும்' என்று கூறியதற்கு 'உன்னுடைய நண்பன் என்பதால் அவனுக்கு சப்போர்ட் பண்றியா?' எனக் கேட்டிருக்கிறார். பிறகு முழுவதுமாக எடுத்துச்சொல்லி அந்தப் படத்தை ஆரம்பித்தனர்.

தனுஷ் :

2002-ல் விக்ரமின் 'ஜெமினி' படம் வெளிவந்த நேரத்தில் எந்த ஒரு பப்ளிசிட்டியும் இல்லாமல் 'துள்ளுவதோ இளமை' என்று ஒரு படம், புதுமுக நடிகரை வைத்து வெளியானது. அந்தப் படத்தின் கதாநாயகன் இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மகனும் கூட. என்னதான் இயக்குநரின் மகனாக இருந்தாலும் சிறப்பான நடிப்பு மட்டுமே, ஒருவருக்குப் பேரும் புகழும் பெற்றுத்தரும். படம் எதிர்பார்ப்புகளைத் தாண்டி ஹிட் அடித்தாலும், அந்தப் படத்தின் கதாநாயகனான தனுஷைப் பார்த்து 'யார்றா இவன் மூஞ்சியும் ஆளும் ச்சே!' என சினிமா விமர்சகர்களும், பொதுமக்களும் வசை பாடினார்கள். அதே தனுஷ் அதற்குப் பின் வெளியான 'காதல் கொண்டேன்' படத்தில் 'திவ்யா... திவ்யா...' என வெறித்தனமாக ஆடி ரசிர்களின் மத்தியில் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றதையும் தற்போது ஆல்ரவுண்டராக அசத்துவதையும் காலம் வேடிக்கை பார்க்கிறது. 

சூர்யா :

இவரது அப்பா சிவகுமாரை சந்திக்க வரும் பல இயக்குநர்களும் இவரை நடிக்க வரும்படி அழைத்தனர். இப்படி அப்பாவின் பெயரைச் சொல்லி நடிக்கக்கூடாது என்று நினைத்த சூர்யா எல்லா வாய்ப்புகளையும் தட்டிக்கழித்துவந்தார். அதற்குப்பின் மணிரத்னம் அழைத்ததால் 'நேருக்கு நேர்' படம் மூலம் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்ததால் அந்தப்படத்தில் சூர்யாவை விட விஜய்தான்  அதிகமாகப் பேசப்பட்டார். இவருக்குச் சரியாக நடிக்கத் தெரியவில்லை, சரியாக டான்ஸ் ஆட வரவில்லை என இவரைப் பற்றிய விமர்சனங்கள் வந்துகொண்டேதான் இருந்தன. அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக நடித்துத் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். 

விஜய் :

இவர் ஹீரோவாகக் களமிறங்கும் முன்பே ஆறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் ஹீரோவாகத் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த படம் 'நாளைய தீர்ப்பு'. அந்தப் படம் மக்களிடையே பெரிதாகப் பேசப்படவில்லை. படம் சுமாராக இருந்ததாலோ... என்னவோ... ஆளையும் குறைவாக எடை போட்டுவிட்டார்கள். விஜய் மீது அப்போது எழுந்த விமர்சனங்கள் என்ன? அதற்கு விஜய் என்ன எதிர்வினையாற்றினார்? அடுத்த பதிவில் காணலாம்!    

சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு கலைஞர்களின் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கும். அடுத்த கட்டுரையில் அந்தக்காலத்தில் நம் தமிழ் சினிமா எப்படி இருந்தது என்பதையும் காணலாம். 

தார்மிக் லீ