Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

'அறிவுரை சொல்ல அருகதை இல்லை..!' சல்மானுக்கு விழுந்த குட்டு

ஜூன் 5-ம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினம். ஆனால், நடிகர் சல்மான்கானுக்கு அது திட்டுச்சூழல் தினமாகிவிட்டது. விஷயம் இதுதான். சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார பைக்குகளை அறிமுகப்படுத்திப் பேசிய சல்மான்கான், ‘‘வேகமாப் போகாதீங்க... சிக்னலை மதிங்க.. சாலை ஒன்றும் ரேஸ் ட்ராக் கிடையாது. உங்களுக்கு ஆபத்து என்றால் பரவாயில்லை. உங்களால் அடுத்தவர்களுக்குச் சிக்கல் வராமல் பார்த்துக்கோங்க!’’ என்று அட்வைஸ் மழை பொழிய, விஷயம் அறிந்த நெட்டிசன்கள் சோஷியல் மீடியாக்களில் பொங்கி எழுந்துவிட்டதுதான் இப்போது வைரல் மழை.

சல்மான்

 

மான் வேட்டை, பாதசாரியை காரில் ஏற்றிக் கொன்ற வழக்கு என்று சில வழக்குகளில் சிக்கியிருக்கும் சல்மான்கானுக்கு, சமூக நலத்தில் ஆர்வம் அதிகம்!!! இதற்காகவே ‘பீயிங் ஹ்யூமன்’ எனும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2007-ல் தொடங்கப்பட்ட இந்தத் தொண்டு நிறுவனம் மூலம், ஆதரவற்றோருக்குக் கல்வி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, ஏழை கிராமங்களுக்கு சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தருவது என்று சில நல்ல காரியங்களைச் செய்து வந்தார்.

சுற்றுச்சூழல் தினத்தைச் சும்மா விடமுடியாதே! அதனால், ஒரு மிகப் பெரிய விழாவுக்கு ஏற்பாடு செய்தது ‘பீயிங் ஹ்யூமன்’ தொண்டு நிறுவனம். இதில்தான் கறும்புகை கக்காத, காற்றை மாசுபடுத்தாத எலெக்ட்ரிக் சைக்கிள்களை அறிமுகம் செய்து ‘குளோபல் வார்மிங்’ பற்றிப் பேசி, பலரது வார்னிங்குகளுக்கு ஆளாகிவிட்டார் சல்மான்.

‘‘சுற்றுச்சூழல்தான் உலகைக் காக்கும் முக்கிய அம்சம். சாலைகளில் வாகனங்கள் ஏற்படுத்தும் மாசு பற்றி உங்களுக்கே தெரியும். சுற்றுச்சூழல் மாசுவைவிட, வாகனம் ஓட்டும்போது சிலர் கடைப்பிடிக்கும் மோசமான விஷயங்கள் பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கிவிடும். சாலையை சிலர் ரேஸ் ட்ராக்போல் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் ரேஸ் ஓட்ட வேண்டுமென்றால், ரேஸ் ட்ராக்குக்குச் செல்லுங்கள். உங்களால் அடுத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.’’ என்று அட்வைஸ் மழை பொழிய, நெட்டிசன்கள் விழித்துக் கொண்டார்கள்.

 

சல்மான்

 

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்: 2002-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி மும்பை பாந்த்ரா மலைச் சாலையில் வேகமாக கார் ஓட்டி வந்த சல்மான்கான், நிலைதடுமாறி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் என்னும் பேக்கரிக்குள் காரை பார்க் செய்தார். இதில், நடைபாதையில் படுத்திருந்த ஒருவர் பரிதாபமாக இறந்து போனார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். ‘‘குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டியதால்தான் இந்த விபத்து’’ என்று சல்மான்கான் மேல் வழக்கு போடப்பட்டது. இதில் சல்மானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு சொல்லியது உள்ளூர் கோர்ட். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த சல்மான்கான், போதிய ஆதாரங்கள் இல்லை என்று இந்த வழக்கில் இருந்து வெற்றிகரமாக விடுதலையானார்.

இந்த ஃப்ளாஷ்பேக்கை ஓட்டிப் பார்த்த நெட்டிசன்கள், ட்விட்டரில் கடுப்பாகிவிட்டார்கள். ‘‘குடிச்சுட்டு ஸ்பீடா வண்டி ஓட்டிய உங்களுக்கெல்லாம் சாலைப் பாதுகாப்பு பற்றிப் பேச அருகதையே இல்லை!’’ என்கிற ரீதியில் விமர்சனங்கள் வந்து குவிந்தன.

 

salman tweet

 

‘‘ஹிட்லர், உலக அமைதியைப் பற்றிப் பேசுவதுபோல் இருக்கிறது சல்மான்கானின் அறிவுரை!’’
‘‘வனவிலங்குப் பாதுகாப்பு குறித்து சல்மான் அறிவுரை கூறுவதுபோல் இருக்கிறது, அவரின் சாலைப் பாதுகாப்பு விழிப்பு உணர்வு!’’
‘‘வங்கிகளுக்குக் கடனைத் திரும்பச் சரியாகச் செலுத்துவது எப்படி என்று விஜய் மல்லையா பாடம் நடத்துவதுபோல் இருக்கிறது உங்கள் அறிவுரை!’’
- இப்படித்தான் வந்து விழுந்தன விமர்சனங்கள்.

 

tweet

உச்சகட்டமாக ஒருவர், ‘‘சல்மான்கான் கருத்துச் சொல்லவில்லை. அவர் நடிப்பு கற்றுத் தந்தார்!’’ என்று கிண்டலாகக் கூறிய ட்வீட்டைப் பார்த்து, 'என்னடா இது மும்பைக்காரனுக்கு வந்த சோதனை' என்று நூடுல்ஸாகிக் கிடக்கிறாராம் சல்லுபாய்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement