மகிழ்ச்சியைத் தகர்க்க வரும் எதிரிகளை எளிதில் சமாளிக்கலாம்! #Trolls

trolls

மகிழ்ச்சி, இன்பம் போன்ற உணர்ச்சிகளை வெளியில் தேடத் தேவையில்லை. அவை நம்முள் இருந்துதான் உற்பத்தியாகின்றன, நாம்தான் அவற்றிற்கு காரணமாக இருக்கிறோம் என்கிற ஆதாரமான செய்தியை இவ்வளவு சுவாரசியமாக சொல்ல முடியுமா என ஆச்சர்யமாக இருக்கிறது. இந்தச் செய்தியை வண்ணமயமான அற்புதக் காட்சிகளுடன் விரிக்கிறது Trolls (டிரோல்ஸ்) அனிமேஷன் திரைப்படம்.

Trolls எனப்படும் மிகச்சிறிய உருவங்கள் எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பவை. பாடிக் கொண்டும், நடனமாடிக் கொண்டும் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டும் ஒவ்வொரு கணத்தையும் இன்பமாக்கிக் கொண்டு வாழ்க்கையைக் கொண்டாடுபவை. வெள்ளந்தித்தனமான இவர்களுக்கு பயங்கரமான எதிரியுண்டு.

அவை Bergens. பெரிய, கோரமான உருவத்தை உடையவை. இவை டிரோல்களுக்கு எதிர்திசையில் இயங்குபவை. எப்போதும் துக்கமும் சலிப்புமாக வாழ்க்கையை நகர்த்துபவை. மகிழ்ச்சி என்பதே அவர்களின் அகராதியில் இல்லை. டிரோல்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு எரிச்சல்படும் Bergen ஒன்று ஒரு டிரோலை எடுத்து விழுங்கி விடுகிறது. விழுங்கியவுடன் தான் சந்தோஷமாக இருப்பதாக உணர்கிறது.

அன்று முதல் அதன் குழுவில் ஒரு சம்பிரதாயம் உருவாகி விடுகிறது. மகிழ்ச்சியே இல்லாத தங்கள் சமூகத்தில் மகிழ்ச்சியை உணர வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளை விழாவாக்கி அன்று டிரோல்களைத் தேடிப்பிடித்து சமைத்து உண்பது. அந்தத் திருவிழா நாளின் பெயர் Trollstice. உணவுத் திருவிழா போல. பல வருடங்கள் இது போல் கழிகின்றன.

trolls

இதே போன்றதொரு திருவிழா நாளில் Bergens கொலைவெறியுடன் டிரோல்களை உண்பதற்காக ஆவலுடன் காத்திருக்கும்போது எல்லா டிரோல்களும் தப்பிச் சென்று விட்டதை உணர்கின்றன. Bergens குட்டி இளவரசன் இதுவரை ஒரு டிரோலைக்கூட உண்டதில்லை. அதன் ஆவல் பொய்யாகிப் போவதால் மிகுந்த ஏமாற்றத்தை அடைகிறது.

டிரோல்களின் ராஜாவாக இருக்கிறவர் தங்கள் சமூகத்தின் எல்லா குடிமக்களையும் அழைத்துக்கொண்டு பத்திரமாக ஓரிடத்தில் குடியேறிவிடுகிறார். குடிமக்களைக் காத்ததால் அவருக்கு வரலாற்றுப் பெருமை ஏற்படுகிறது. ஒட்டுமொத்தமாக தப்பித்துப் போன டிரோல்களின் மீது Bergens கொலைவெறியுடன் இருக்கின்றன.

மேலும் பல வருடங்கள் கடக்கின்றன. புதிய தலைமுறை டிரோல்களுக்கு  தங்களுக்கு Bergens என்கிற எதிரி இருக்கிறது என்பதைப் பற்றியே அதிகம் தெரிவதிலலை. அப்படியோர் ஆபத்தை அவர்கள் அதுவரை சந்தித்ததில்லை. எனவே தங்களின் இயல்பு படி பாட்டும் கொண்டாட்டமுமாக கழிக்கின்றன. டிரோல்களின் இளவரசியான பாப்பி எப்போதும் கொண்ட்டாட்டமாக இருக்கிறாள்.

ஆனால், பிரான்ச் என்கிற டிரோலுக்கு மட்டும் Bergen-கள் எப்போது வேண்டுமானாலும் தங்களைக் கண்டுபிடித்து தாக்குதல் நடத்தக்கூடும் என்கிற பாதுகாப்பின்மை உணர்வு இருக்கிறது. எனவே மற்ற டிரோல்களைப் போல மகிழ்ச்சியாக இல்லாமல் எப்போதும் அச்சத்துடன் இருக்கிறது. பல வருடங்களுக்கான உணவைச் சேகரித்து ஒரு பதுங்கு குழியைத் தயார் செய்து வைத்திருக்கிறது.

டிரோல்கள் வழக்கம் போல் ஒரு கொண்டாட்டத்திற்குத் தயார் ஆகிக் கொண்டிருக்கும் போது பிரான்ச் எச்சரிக்கிறது. 'நீங்கள் இப்படி அதிக சத்தத்துடன் கொண்டாடுவது Bergen-களின் கவனத்தை ஈர்க்கலாம். அதனால் ஆபத்து ஏற்படலாம்' என்கிறது.

ஆனால், அந்த எச்சரிக்கையை இடது கையால் புறந்தள்ளும் பாப்பி உள்ளிட்ட இதர டிரோல்கள் வெகு விமரிசையாக தங்களின் கொண்டாட்டத்தை நிகழ்த்துகின்றன. பிரான்ச் பயந்தது போல தூரத்திலிருக்கும் ஒரு Bergen-க்கு இவைகளின் கொண்டாட்ட சத்தம் காதில் விழுகிறது. Bergen-களின் குழுவில் இருக்கும் தலைமைச் சமையல்காரன் அது.

பல வருடங்களுக்கு முன் தப்பித்துச் சென்ற டிரோல்களின் இருப்பிடம் பற்றி அறிந்தவுடன் அது மகிழ்ச்சி கொள்கிறது. அந்த இடத்திற்கு விரைந்து வந்து கையில் கிடைக்கும் டிரோல்களையெல்லாம் தம் பைக்குள் நிரப்பிக் கொள்ள முயற்சிக்கிறது. அலறியடித்துக் கொள்ளும் ஓடும் சில டிரோல்கள் தப்பிக்கின்றன. ஆனால் சில டிரோல்கள் மாட்டிக் கொள்கின்றன. இளவரசியான பாப்பியும் அதிர்ஷ்டவசமாக தப்பிக்கிறாள்.

trolls

தங்களின் நண்பர்களில் சிலரை Bergen-கள் தன் கண் முன்னாலேயே தூக்கிச் சென்றது குறித்து பாப்பி மிகுந்த துயரம் அடைகிறது. அந்தப் பிரிவை அதனால் தாங்க முடியவில்லை. பல வருடங்களுக்கு முன்பு தன்னுடைய தந்தை பல டிரோல்களைக் காப்பாற்றி வரலாற்றில் இடம் பிடித்ததைப் போல தன் சமூகத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை தனக்கு இருக்கிறது என்பதை உணர்கிறது.

எனவே Bergen-களிடமிருந்து தன் நண்பர்களை மீட்பதற்காக கிளம்புகிறது. அதனுடைய தந்தை 'இது ஆபத்தான பயணமாயிற்றே' என்று எச்சரிக்கிறது. என்றாலும் பாப்பியின் மன உறுதியை எவராலும் தடுக்க முடியவில்லை. ஒட்டுமொத்த டிரோல்ஸ்களும் கூடி நின்று வாழ்த்துச் சொல்லி அனுப்புகிறார்கள்.

மிக குட்டி உருவமான டிரோல்ஸ் சமூகத்தைச் சேர்ந்த இளவரசியான பாப்பியால், அத்தனை பெரிய உருவங்களான Bergen-களின் இடத்திற்குச் சென்று எப்படி நண்பர்களை மீட்க முடியும்?

அசாதாரணமான இந்தப் பயணத்தில் நிகழும் சம்பவங்களை மிக சுவாரஸ்யமான திரைக்கதையின் மூலம் விவரித்திருக்கிறார்கள்.

கைப்பிடி அளவில் விதவிதமான தோற்றங்களுடன் இருக்கும் டிரோல்கள் பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டாக இருக்கின்றன. 'வில்லு' திரைப்படத்தில் வடிவேலுவின் சிகையலங்காரம் கோபுரமாக பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருப்பது போல டிரோல்களின் தலைமுடி விதம்விதமான ஸ்டைல்களில் நட்டுக்கொண்டிருப்பது சிரிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த தலைமுடியை வைத்துக் கொண்டு அவை செய்யும் சாகசங்கள் வியப்பையும் ஏற்படுத்துகின்றன.

trools

பார்ப்பதற்கு கோரமாக இருக்கும் Bergen-கள் அச்சத்தை ஏற்படுத்தினாலும் மகிழ்ச்சி என்பது அறியாத அவர்களின் வாழ்வியல் பரிதாபத்தையும் ஏற்படுத்துகிறது. Bergen கூட்டத்தில் பணிப்பெண்ணாக இருக்கும் Bridget, தனது நிலையை நினைத்து தாழ்வுஉணர்வுடன் இருக்கிறது. அந்தக் குழுவின் இளவரசன் மீது உண்டாகும் காதலை எவருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்கிறது.

Bridget-ன் காதலுக்கு உதவி செய்வதின் மூலம் பாப்பி அதனுடைய அன்பையும் தம் நண்பர்களைக் காப்பாற்றுவதற்கான வழியையும் பெறுவது சுவாரஸ்யமான காட்சிகள். தன்னுடைய ஒரு நண்பனைக் கூட மீ்ட்காமல் திரும்ப மாட்டேன் என்று பாப்பி சொல்வது அதன் மனஉறுதியையும் தலைமைப் பண்பையும் காட்டுகிறது. மட்டுமல்லாமல் தன் நண்பர்களின் மீது வைத்திருக்கும் அன்பையும்.

டிரோல்களை உண்பதின் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும் என்பது மூடநம்பிக்கை. மகிழ்ச்சி என்பதை நாம்தான் உருவாக்க முடியும் என்று Bergen கூட்டத்திற்கு பாப்பி உணர்த்தும் உச்சக்காட்சி அற்புதமானது. ஒருவகையில் இது நமக்கான படிப்பினையும் கூட.

Erica Rivinoja எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தத் திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருப்பவர் Mike Mitchell. இணை இயக்கம் - Walt Dohrn. இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்துமே அற்புதமானவை எனலாம். கேட்பதற்கு இனிமையானவை. பல சர்வதேச விருதுகளின் போட்டி வரிசையில் இந்தப் பாடல்கள் தேர்வாகியிருந்தன. இவை சுவாரஸ்யமான கற்பனையுடன் காட்சிப்படுத்தியிருப்பது கூடுதல் சுவை.

பாப்பி என்கிற குட்டி இளவரசியின் குறும்பும் சாகசமும், தோழனான பிரான்ச், அதனுடைய பாதுகாப்பு உணர்வும் உதவியும், இளவரசன் மீது Bridget கொண்டிருக்கும் ரகசியக் காதல், அதன் பின்னுள்ள பரிதாபம், அத்தனை டிரோல்களும் இணைந்து காதலுக்கு உதவும் சுவாரஸ்யம், டிரோல்களின் இளவரசன் Gristle செய்யும் அலப்பறைகள், ஒப்பனையுடன் வரும் Bridget-ஐ பார்த்து ஜொள் விடுவது போன்றவை நகைச்சுவை உணர்வுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள் இந்தப் பாத்திரங்களுக்காக குரல் தந்திருக்கிறார்கள். DreamWorks Animation நிறுவனத்தின்  பிரமிக்கத்தக்க வரைகலை நுட்பங்களும் இதன் பின்னுள்ள கற்பனையும் இந்தப் படத்தின் காண்பனுபவத்தை சுவாரசியமாக்குகின்றன.

குழந்தைகளுடன் இணைந்து கண்டு களிக்க வேண்டிய அனிமேஷன் திரைப்படம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!