Published:Updated:

வெயிலோடு விளையாடிய மியூஸிகல் ஹீரோ! #HBDGVPrakash

உ. சுதர்சன் காந்தி.
வெயிலோடு விளையாடிய மியூஸிகல் ஹீரோ! #HBDGVPrakash
வெயிலோடு விளையாடிய மியூஸிகல் ஹீரோ! #HBDGVPrakash

வ்வோர் இசையமைப்பாளருக்கும் ஒரு ஸ்பெஷல் உண்டு. அந்த யுனிக் ஸ்டைலில் பாடலைக் கேட்டவுடன் `இது இவர் இசையமைத்ததுதான்' எனக் கண்டுபிடித்துவிடலாம். அந்த மாதிரி தனித்துவம்கொண்டது ஜி.வி.பிரகாஷ் குமார் இசை. மெலடி, பேத்தாஸ், கொண்டாட்டம் என விதவிதமாகப் பிரித்து விளையாடிய ஜி.வி.பி-யின் பிறந்தநாள் இன்று. 

ஜி.வி.பி-யின் ஸ்பெஷல் மெலடிதான். `உருகுதே மருகுதே...' ஆரம்பித்து பல மெலடிகள் எல்லோர் ப்ளே லிஸ்ட்டிலும் ரிப்பீட்மோட்தான். இளையராஜா, ரஹ்மான், ஹாரீஸ் ஜெயராஜ், யுவன் என எண்ணற்ற இசையமைப்பாளர்கள் இருந்த தருணத்தில் 2006-ம் ஆண்டில் `வெயில்` படத்தின் மூலம் பளிச்சென என்ட்ரி கொடுத்தார் ஜி.வி. முன்பு சொன்ன இசை ஜித்துகளைத் தாண்டவில்லை என்றாலும், அந்தக் கூட்டத்துக்கு நடுவே `வெயில்' மூலம் அடையாளம் காணப்பட்டார். `வெயிலோடு விளையாடி...', `உருகுதே மருகுதே...', `காதல் நெருப்பின் நடனம்...' என ஆல்பம் முழுவதும் கலக்கல் பாடல்கள் நிறைந்திருக்க, `யாருப்பா இந்தப் பையன்?' எனத் தேடியவர்களுக்கு ஆச்சர்யம். ஆஸ்கர் நாயகன் ரஹ்மானின் அக்கா மகன் என்பது அப்போதுதான் தெரிந்தது. `ஜென்டில்மேன்' படத்தில் `சிக்குபுக்கு ரயிலே...' மூலம் இவரது இசைப் பயணத்தைத் தொடக்கிவைத்ததே ரஹ்மான்தான்.

அன்று அவர் பாடிய பாடல் இன்றளவும் ஹிட். பிறகு, 2006-ம் ஆண்டில் இசையமைப்பாளராகக் களமிறங்கினார். அறிமுகமாகி ஒரு வருடத்துக்குள்ளேயே அஜித் படத்தில் இசையமைக்க வாய்ப்பு. `ஓரம் போ', `இது என்ன மாயம்', `கிரீடம்', `பொல்லாதவன்', `வெள்ளித்திரை'  `ஆனந்த தாண்டவம்' என தன் படங்களில் தொடர்ந்து செம மெலடியைக் கொடுத்து அசத்தினார். 

2008-ம் ஆண்டில் `குசேலன்', `சேவல்' என அந்த வருடத்திலும் தன் முத்திரையைப் பதித்தார். 2009-ம் ஆண்டில் இவருக்கு மேலும் ஓர் அங்கீகாரம் கிடைத்தது என்றால், அது `அங்காடி தெரு`வில். இந்தப் படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் காதலர்களின் ஆல்டைம் ஃபேவரைட். இந்த நேரத்தில் ஜி.வி.பி-க்கு வந்த மிகப்பெரிய வாய்ப்பு, செல்வராகவன் இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்' படம். இதில் பல பரிசோதனை முயற்சிகளைச் செய்துபார்த்தார் ஜி.வி.பி. உற்சாகமாகக் களமிறங்கி, பழைமையான இசைக்கருவிகளைத் தேடி அலைந்து, அதை இசைக்கோப்புக்குப் பயன்படுத்துவது என மிகப்பெரிய உழைப்பு அது. இன்றுவரை எல்லோரின் பாராட்டையும் பெறும் 'தாய் தின்ற மண்ணே...', 'மாலை நேரம்...', செலிப்ரேஷன் ஆஃப் லைஃப்...' ஆகிய ட்ராக்குகள் ஜி.வி.பிரகாஷின் அல்டிமேட் வகை.

2010-ம் ஆண்டில் இரண்டு படங்கள். இரண்டுமே கான்ட்ராஸ்ட்டான படங்கள். `மதராசபட்டினம்` மற்றும் `ஆடுகளம்'. `மதராசபட்டினம்' ஒரு பீரியட் டிராமா என்றால், `ஆடுகளம்' நேட்டிவிட்டியில் களமிறங்கவேண்டிய அவசியம். இரண்டிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார் ஜி.வி. ஒரு பக்கம் `பூக்கள் பூக்கும் தருணம்...', `ஆருயிரே...' என ஒலித்தால், மறுபக்கம் `ஒத்த சொல்லால...', `யாத்தே யாத்தே...' எனத் தரைக்குத்தாக ஒலிக்கும் பாடலும் ஜி.வி.பி-யுடையதாகத்தான் இருக்கும்.

இதே நேரத்தில் வெளியான 'வா' படம் சரியான வரவேற்பைப் பெறாததால் அதன் பாடல்கள் அதிகம் கவனிக்காமலேயே கைவிடப்பட்டன. அது முழுக்கவே செலிப்ரேஷன் மோட் பாடல்களால் (தேடியே தேடியே தவிர) நிறைந்திருக்கும். விஜய் இயக்கத்தில் உருவான `தெய்வத்திருமகள்' படத்திலும் ஜி.வி.பி-யின் இசை குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மெனக்கெடல்கள் நிறைந்திருக்கும். ஒரு தந்தையின் பாச உறவை, தன் இசையின் வாயிலாக நமக்கு அழகாக வெளிப்படுத்தியிருப்பார். அந்தச் சமயத்தில் இவரது `ஆரிரோ...` பாடல்தான் தாலாட்டு. `செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் இணைந்த `மயக்கம் என்ன` பாடல்கள், குறிப்பாக, பின்னணி இசை அவ்வளவு சோல்ஃபுல்' எனப் பாராட்டுகளைக் குவித்த படம். `பிறை தேடும் இரவிலே...` பாடலில் ஜி.வி.-சைந்தவி காம்பினேஷனுக்குக் கிடைத்த லைக்ஸை விவரிக்க முடியாது.

`முப்பொழுதும் உன் கற்பனைகள்', `சகுனி', `தாண்டவம்' எனப் படங்கள் வரிசைகட்டி வர, ஜி.வி.பி பிஸியோ பிஸி! அடுத்ததாக பாலாவின் 'பரதேசி', பாரதிராஜாவின் 'அன்னக்கொடி' என முன்னணி இயக்குநர்கள் ஜி.வி.பி-யைத் தேடி வந்தார்கள். `தலைவா` படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலில் தோன்றியிருப்பார். இந்தப் படத்தில் வரும் `யார் இந்தச் சாலையோரம் பூக்கள் வைத்தது...` பாடல் க்ளாசிக். `ராஜாராணி` படத்தை ரசிக்காதவர்கள், அந்தப் பாடல்களைக் கேட்காதவர்கள் இருக்க முடியுமா? `இமையே இமையே...` என்று நம்மை இமை மூடாமல் ரசிக்கவைத்தார். மிக வெறுமையாக இருக்கும் நேரங்களில் இவர் இசையமைத்த `மயக்கம் என்ன', `ராஜாராணி' படங்களின் பின்னணி இசையைக் கேட்பது அருமையான ஓர் அனுபவமாக இருக்கும். 

நடிகராகவும் களமிறங்கி தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கியிருக்கிறார் ஜி.வி. அடுத்தடுத்து பாலா, ராஜீவ்மேனன் எனப் பெரிய இயக்குநர்களுடன் கைகோத்திருப்பதால், நடிப்பில் இன்னும் முன்னேறுவார் என எதிர்பார்க்கலாம். ஆனால், இப்போது ஜி.வி.பி மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு, `நடிகராகிவிட்டதால், இசை மீது சரியாகக் கவனம் செலுத்துவதில்லை' என்று. அது உண்மையா... பொய்யா என்ற விவாதத்தைவிட, இசையமைப்பாளர் ஜி.வி.பி-க்கு இங்கு ரசிகர்கள் ஏராளம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

ஹேப்பி பர்த்டே ஜி.வி.பிரகாஷ்... ஆல் தி பெஸ்ட்!

உ. சுதர்சன் காந்தி.

Journalist @ Cinema Vikatan