Published:Updated:

சசிகுமாருக்கு செலவு, திருவிழா அதிர்ச்சி! - 'சுப்பிரமணியபுரம்' ஷுட்டிங் கதை சொல்கிறார் 'சித்தன்' #VikatanExclusive

ந.புஹாரி ராஜா
சசிகுமாருக்கு செலவு, திருவிழா அதிர்ச்சி! - 'சுப்பிரமணியபுரம்' ஷுட்டிங் கதை சொல்கிறார் 'சித்தன்' #VikatanExclusive
சசிகுமாருக்கு செலவு, திருவிழா அதிர்ச்சி! - 'சுப்பிரமணியபுரம்' ஷுட்டிங் கதை சொல்கிறார் 'சித்தன்' #VikatanExclusive

'சின்ன வயசுல இருந்தே சினிமா ஆர்வம்தான். மத்தியான சாப்பாட்டு ப்ரேக்ல வெளியே கெளம்பிப் போய் ஏதாவது தியேட்டர்ல மேட்னி ஷோவுல உட்காந்துருப்பேன், அப்படியே சினிமா ஆர்வத்துல மதுரைல சினிப்பிரியா தியேட்டர்ல கேஷியரா வேலை பார்க்க ஆரம்பிச்சேன். சினிமாவுல எனக்கு இது இருபதாவது வருசம். நடிகனா எனக்கு இது பத்தாவது வருசம்' -மதுரை மணம் மாறாத வெள்ளந்தி வார்த்தைகள் தானாக வந்து உட்கார்ந்து கொள்கிறது மோகனுக்கு. சுப்ரமணியபுரத்தில் சித்தனாகத் தொடங்கி 'ஒரு கிடாயின் கருணை மனு'வில் சமையற்கலைஞராக அதகளம் பண்ணியிருக்கும் அசல் தெற்கத்தி கலைஞர்.

நடிகனா மாறுனது ஒரு விபத்துதானே...?

"யப்பா ஏய் முதல் கேள்விலயே ஒடசல குடுக்குறீயப்பா? நிசமாவே விபத்துதான்யா. 97ல பாலா சார் டைரக்சன்ல சேதுலயே கேஷியரா சேர்ந்துட்டேன். அப்ப இருந்தே டைரக்டர் சசிக்குமார் பழக்கம். பாலா சார்கிட்ட இருந்து பிரிஞ்சு அமீர் சொந்த படமா 'ராம்' எடுத்தப்ப கேஷியரா என்னைக் கூப்பிட்டுக்கிட்டாரு. அப்படியே சசிக்குமார் 'சுப்ரமணியபுரம்' பண்றப்போ என்னைக் கூப்பிட்டு வச்சுகிட்டாரு." 

கேஷியர் மோகன் எப்படி சவுண்ட்சர்வீஸ் சித்தன் ஆனாரு?

"சுப்ரமணியபுரம் ஷூட் ஆரம்பிச்சு 'கண்கள் இரண்டால்' பாட்டு எடுத்துக்கிட்டு இருக்கோம். அப்ப வரைக்கும் எனக்குத் தெரியாது நான்தான் சித்தன் கேரக்டர் பண்ண போறேன்னு. ஆர்ட் டைரக்டர் ரேடியோ செட் கடை செட் போடுறப்ப, பீரியட் படம்லனு எனக்கு தெரிஞ்ச ரெண்டு மூணு விசயத்த சொன்னேன். உடனே பக்கத்தில் இருந்த சசிக்குமார் 'உன் கடைன்னதும் இவ்ளோ அக்கறையான்னு நக்கலடிச்சப்பதான் அந்த சித்தனே நான்தான்னு தெரியும். ஆனாலும் ஷூட் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலேயே சசிக்குமார் சொன்னாரேனு தாடியும் முடியும் வளர்க்க ஆரம்பிச்சிருந்தேன். ஏரியாவுக்குள்ள யாராவது, 'என்னாயா வேண்டுதலா'னு கேட்டா, 'ஆமா வேண்டுதல்தான்'னு முடிச்சுருவேன். படம் வந்ததும் ஏரயாவுக்குள்ள செம்ம காப்பராயிருச்சு."

'சுப்ரமணியபுரம்' படத்துல நடிச்சதைப் பத்திச் சொல்லுங்களேன்..?

"சுப்ரமணியபுரத்தில் நடிச்சது மறக்க முடியாத அனுபவம்... கேமரா முன்னால சேது படத்துலயே கூட்டத்துல ஒரு ஆளா நடிச்சுருப்பேன். நடிச்சுருப்பேன்னு சொல்றதவிட நின்னுருப்பேன்னு சொல்றதுதான் சரியா இருக்கும். சுப்ரமணியபுரத்துல நடிக்கப் போறோம்னு முடிவாகிருச்சு. நமக்கு அவ்வளவு அனுபவமும் இல்ல. எங்க என்னால டேக் அதிகமாகி அதிகமாகி ரீல் அதிகமா போயிடுமோனு உள்ளுக்குள்ள பயம் வேற... ஏன்னா படத்துக்கு நாமதானே கேஷியர். அப்போதான் டைரக்டர் சொன்னாரு, படத்துக்கு நான்தான் ப்ரொடியூசர் ரீல் செலவு பத்தி எல்லாம் நீ ஒண்ணும் கவலப்பட வேணாம். இப்ப நீ நடிகன். இந்த சித்தன் மட்டும்தான் ஞாபகத்துல இருக்கணும்னு கண்டிப்பா சொல்லிட்டாரு. இப்படி ஏகப்பட்ட அனுபவம் முதல்படத்துக்குள்ள கிடக்கு."

'ஒரு கிடாயின் கருணை மனு'வில சமையற்காரர் கேரக்டர் இவ்வளவு பேசப்படும்னு நெனச்சீங்களா?

"சொன்னா நம்பமாட்டீங்க, வீட்டுல சமைக்கிறப்ப ஒரு பாத்திரம்கூட எடுத்துக் குடுத்தது இல்ல. கல்யாண வீடுகள்ல பார்த்த சமையல்காரர்கள்தான் இன்ஸ்பிரேசன். கதை எழுதி முடிச்சதுமே நான்தான் பண்ணணும்னு முடிவு பண்ணிருந்தாராம் டைரக்டர். நேர்ல பார்த்ததும் ரெண்டு மூணு டயலாக்கோட செஞ்சு காமிச்சேன். அப்பவே டைரக்டருக்கு கொள்ள சந்தோசம்."

சேவல் கதாபாத்திரம் அனுபவம் எப்படி?

"டயலாக் ரைட்டர் ஆரம்பத்துல என் கேரக்டர் வசனம் எல்லாம் திருநெல்வேலி வட்டார வழக்குலதான் எழுதி இருந்தாரு. இரண்டு நாள் பேசிப் பார்த்துட்டு மதுரை வட்டார வழக்குல பேசிக்காட்டவான்னு கேட்டேன். அவுங்க குடுத்த சுதந்திரம்தான் இது எல்லாமே. அதைத் தவிர ஷூட்டிங் நடந்த நாப்பது நாளுமே ராஜபாளையத்து வெயில்ல கருவாடா காய்ஞ்சு கெடந்தோம். எங்க அம்மாவுக்கே என்னைப் பார்த்து கண் கலங்கிடுச்சுன்னா பாத்துக்கோங்க."

சேது படத்துல நீங்க பார்த்த பாலாவுக்கும் பரதேசி படத்துல நீங்க பார்த்த இயக்குநர் பாலாவுக்கும் என்ன வித்தியாசம்?

"1997-ல ஷூட்டிங் ஆரம்பிக்கிறோம். மறுநாளே சங்கத்துல பிரச்சனை ஆகி ஆறு மாசம் ஷூட்டிங்கே நடக்கல. எல்லாம் சரியாகி ஷூட்டிங் எல்லாம் முடிஞ்சு பார்த்தா படத்தை வாங்க ஒரு விநியோகஸ்தர்கூட வரல. விநியோகஸ்தர்களுக்காகவே ஒரு வருஷம் ப்ரிவியூ ஓடுன படம்னா சேதுவாத்தான் இருக்கும். என்ன ஆனாலும் சரி, படத்தை ரிலீஸ் பண்ணுவோம்னு 1999ல மொத்த தமிழ்நாட்டுக்கும் ஒன்பது பிரிண்ட் மட்டும் போட்டு மதுரைல மினிப்பிரியாவுல நான்தான் முதல் டிக்கெட் குடுக்குறேன். சினிப்பிரியாவுல கன்னட டப்பிங் படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பு கூட சேது படத்துக்கு இல்ல. முதல் ஷோ முடிஞ்சப்ப படம் பார்த்தவுங்க அடுத்த ஷோவுக்கு காத்துகிட்டுருந்த ஆட்கள்கிட்ட எல்லாம் சொல்லச் சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாக சேது டாக் ஆப் தி டவுனா மாறுச்சு. அதே வாரம் சன் டிவி விமர்சனத்துக்குப் பிறகு எங்களுக்கு பிரிண்ட் போட்டுக் குடுக்க டைம் இல்ல. பாலா சார் அப்போ இருந்து இப்ப வரை அதே பெர்பெக்‌ஷனிஸ்ட். பரதேசிக்கு நானா போய், 'உங்க படத்துல நடிக்க வாய்ப்பு குடுங்க'னு கேட்டேன்."

பாலா, சமுத்திரகனி, சசிக்குமார்னு ஒரே வட்டத்துக்குள்ள இருக்குற மாதிரி தோணலையா?

"இதை நானே நிறைய தடவை எனக்குள்ள கேட்டு பார்த்துருக்கேன். அது அப்படித்தான் அமையுது. எல்லார் படங்கள்லயும் நடிக்க நான் ரெடிதான். இப்போ 'கிடாயின் கருணை மனு' படத்தோட டைரக்டர் சுரேஷோட அடுத்த படத்துலயும் நடிக்கிறேன். 'கிடாயின் கருணை மனு' பார்த்துட்டு இதுவரை பண்ணாத காம்பினேசன்ல புதுசா மூணு படத்துக்கு கமிட் ஆகிருக்கேன். நடிக்கத்தானே வந்துருக்கோம்,அந்த கேரக்டர் இந்த கேரக்டர்னு இல்லாம எந்த கேரக்டரா இருந்தாலும் ஆடியன்ஸ் மனசுல உட்காருற மாதிரி பண்ணனும்."

குடும்பம் பற்றி?

"நான் நடிக்கிற எல்லா படத்தையும் குடும்பத்தோட போய் பார்த்துருவோம். ஆனா சுப்ரமணியபுரம் மட்டும் அப்போ இருந்த வேலைகளால பார்க்க முடியல. அம்மாவுக்கு நடிகனா மாறுனதுல ரொம்ப சந்தோசம். படிக்கிற காலத்துல சினிமா சினிமானு அலைஞ்சப்போ அப்பாகிட்ட அடியெல்லாம் கூட வாங்கி இருக்கேன். ஆனா இப்ப நடிகனா என்னைப் பார்க்க அப்பா என் கூட இல்லைங்கிற வருத்தம் மட்டும் எப்போவும் இருக்கும்."

ந.புஹாரி ராஜா

க.விக்னேஷ்வரன்