'மெர்சல்' ஃபர்ஸ்ட்லுக்கில் இந்த விஷயங்களை எல்லாம் கவனிச்சீங்களா..?

சமீபமாக, வெளியாகும் படங்களின் போஸ்டரை வைத்தே பாதி கதையைக் கணித்துவிடுகிறார்கள். அந்த வரிசையில் 'காலா' பட போஸ்டரைத் தொடர்ந்து விஜய்யின் 'மெர்சல்' பட போஸ்டர்களுக்கும் இந்தக் கண்டுபிடிப்புகள் எதிரொலிக்கின்றன. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அப்படி என்ன சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன வாங்க பார்ப்போம்!

மெர்சல்

மெர்சல் ஸ்டைல் :

மெர்சல்

படத்தின் டைட்டில் 'மெர்சல்' எழுதப் பயன்படுத்திய டிசைனை உற்றுக் கவனித்தால் சிலபல விஷயங்கள் எல்லாம் தெரிய வரும். சரி போஸ்டரில் விஜய்க்கு பின்னால் மட்டும்தான் காளைகள் ஆக்ரோஷமாக ஓடி வருகின்றனவா என்று உற்றுக் கவனித்தால், டைட்டிலில் பயன்படுத்திய ஃபான்டிலும் காளையின் உருவம் குறியீடாகத் தெரிகிறது. 'மெ' என்ற வார்த்தையில் காளையின் கொம்பும், 'ல்' என்ற வார்த்தையில் காளைமாட்டின் வாலும் தெரிகிறது. விஜய் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை ஆதரித்துப் பேசிய வீடியோவும் செம வைரலானது. ஆக, படத்தில் ஜல்லிக்கட்டு சம்பந்தமாக ஏதோ ஒரு டச் இருக்கலாம்.  

திருப்பி போட்டா விஜய் :

விஜய்

அதே டைட்டிலில் மேலும் ஒரு அடடே போட வைக்கும் விஷயமும் இருக்கிறது. அந்த டைட்டிலை அப்படியே திருப்பிப் போட்டால் ஆங்கிலத்தில் 'விஜய்' என்ற வார்த்தையைக் காணலாம். அட்லி இயக்கிய 'தெறி' படத்தில் இருந்தே இருவருக்கும் ஒரு பிணைப்பு ஏற்பட்டுவிட்டது. தெறி பட வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பு தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. அந்தப் பாசத்தின் அடிப்படையிலும் விஜய்யின் மேல் இருக்கும் ஈர்ப்பின் காரணத்தாலும் அவ்வாறு இடம்பெற்றிருக்கலாம். மேலே இருக்கும் படத்தை நீங்களே இன்னொருமுறை பாருங்க. 

இளையதளபதி :   

தளபதி

இவர் நடித்த 'செந்தூர பாண்டி'' படத்தில் 'இளைய நட்சத்திரம் விஜய்' என்பதுதான் இவருக்குக் கிடைத்த முதல் பட்டம். அதன்பின்னர் வெளியான 'ரசிகன்' என்ற படத்தில் ஆரம்பித்து 'பைரவா' படம் வரை டைட்டில் கார்டில் 'இளையதளபதி விஜய்' என்றுதான் போட்டார்கள். ஆனால், இந்தப் பட போஸ்டரில் வெறும் 'தளபதி விஜய்' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாவதாக வெளியிடப்பட்ட போஸ்டரில் இன்னொரு ஸ்டைல் விஜய் இருப்பதால் அதிலாவது இளையதளபதி பட்டம் இருக்கலாம் என எதிர்பார்த்தோம். ஆனால், அதிலும் 'தளபதி விஜய்' என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒருவேளை அரசியல் குறியீடா இருக்குமோ? 

விஜய் 61 :

அதே டைட்டில் கார்டில் மூன்றாவதாக இடம்பெற்ற குறியீடு... 'நாளைய தீர்ப்பு' படத்தில் ஆரம்பித்து 'பைரவா' படம் முதல் 60 படங்களில் நடித்துவிட்டார் விஜய். அட்லி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்த 'மெர்சல்' படம்தான் இவரது 61-வது படம் என்பது ஊரறிந்த உண்மை. ஆனால் இந்தச் செய்தியும் டைட்டிலிலேயே இடம்பெற்றிருக்கிறது. போஸ்டரில் 'மெர்சல்' என்ற வார்த்தையில் 'மெ' எனும் எழுத்தை ஒரு பூதக் கண்ணாடியை வெச்சுப் பாருங்க. '61' என்ற எண்ணைக் காணலாம். ஒரு டைட்டில்ல எத்தனை குறியீடு?!

ரெண்டு கெட்டப் : 

முதலில் வெளியான போஸ்டரை ஒப்பிடும் போது இரண்டாவதாக வெளியான போஸ்டரில் அவ்வளவாகக் குறியீடுகள் இல்லை. சராசரி படத்தின் போஸ்டர் எப்படி இருக்குமோ அது மாதிரிதான் இருந்தது. இரண்டாவது போஸ்டரின் மூலம் விஜய் இரு கதாபாத்திரங்களிலும் எந்த கெட்டப்பில் வருவார் என்பது மட்டும் தெளிவாகிவிட்டது. எப்படியோ படம் எதிர்பார்ப்பைச் சரிக்கட்டினால் சிறப்பு.

பிறந்தநாள் வாழ்த்துகள் 'இளையதளபதி' ஸாரி, ஸாரி... 'தளபதி' விஜய்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!