Published:Updated:

“ஸாரி டியர்... ஒரு ஹீரோயின்கிட்ட எதிர்பார்க்கறது என்கிட்ட இல்லை!” - ஜாலி நிக்கி கல்ராணி

ஆர்.வைதேகி
“ஸாரி டியர்... ஒரு ஹீரோயின்கிட்ட எதிர்பார்க்கறது என்கிட்ட இல்லை!” - ஜாலி நிக்கி கல்ராணி
“ஸாரி டியர்... ஒரு ஹீரோயின்கிட்ட எதிர்பார்க்கறது என்கிட்ட இல்லை!” - ஜாலி நிக்கி கல்ராணி

கோலிவுட்டில் ஹாலிவுட் ரேஞ்சில் நடித்து, தனக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் சமத்துப் பொண்ணு நிக்கி கல்ராணி. தமிழ் திரையுலகில் தன் தனிப்பட்ட நடிப்பாலும் வித்தியாசமான நடன அசைவுகளாலும் இள நெஞ்சங்களைக் கவர்ந்து, தற்போது முன்னணி தமிழ் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து ஆடிவரும் நிக்கி, ட்ரெண்ட் நாயகிகளில் அதிமுக்கியமானவர். எந்தப் படத்தில் யாருடன் ஜோடி சேர்வது, எப்படி நடிக்க வேண்டும், நமக்கு போட்டி யார், தன்னுடைய ஸ்பெஷல் அப்பீரியன்ஸ் என்ன... போன்ற பல விஷங்களில் செம தெளிவு. அந்தத் தெளிவு அவரின் பேச்சிலும் தெறித்தது. தமிழ் திரைப்படக் களத்தைத் தன்வசப்படுத்தியுள்ள அவரிடம் ஜாலி, கேலி பேட்டி கண்டோம்...

“ஒரு நடிகையா உங்களைத் தெரியும். வீட்டுல நீங்க எப்படி?”

“வீட்டுல நான் வேற லெவல்ல இருப்பேன். கிண்டல், கேலி, காமெடி, அரட்டை, அதிரடின்னு என்னோட உலகமே அதிரிபுதியா இருக்கும். அதே ஷூட்டிங்னா க்யூட் குயின். எங்கே இருந்தாலும் எனக்கான வேலைகளை நான் கரெக்டா முடிச்சுடுவேன். இன்னிக்கு என்ன கமிட்மென்ட், எவ்வளவு நேரம் வேலை செய்யணும்னு திட்டம் போட்டு வேலை செய்றதுதான் என் ஸ்பெஷல்.''

“உங்களின் சகோதரி சஞ்சனா கல்ராணியைப் பற்றி...”

“நடிப்புல அவங்கதான் எனக்கு சீனியர். வீட்டுக்குள்ள நாங்க ரெண்டு பேரும் எல்லா அக்கா, தங்கச்சிங்களை மாதிரிதான். அடிச்சுப்போம், பிடிச்சுப்போம். கொட்டிப்போம், கொண்டாடுவோம், விளையாடுவோம். எனக்கு எது பிடிக்கும்னு தெரிஞ்சு, என்னை ரொம்ப அக்கறையோடு கைடு பண்ற பெஸ்ட் சோல் அவங்க.''

“உங்களோடு நடித்த ஹீரோக்கள் பற்றி...''

“ஜி.வி.பிரகாஷ், என் முதல் பட ஹீரோ. செம ஹார்டு வொர்க்கர். முதல் படத்துலேருந்து லேட்டஸ்ட் படம் வரைக்கும் பயங்கரமா டெவலப் ஆகியிருக்கார். ரொம்ப டெடிக்கேட்டட் பெர்சன். விஷ்ணு விஷால், ரொம்ப ஃப்ரெண்ட்லி. அவர் செலெக்ட் பண்ற கதைகள் ரொம்ப வித்தியாசமா இருக்கும். விக்ரம் பிரபு, அவ்வளவு பெரிய பின்னணி உள்ள குடும்பத்துலேருந்து வந்த தலைகனம் கொஞ்சமும் இல்லாத இயல்பான நடிகர். பிரபு அங்கிளும் அவ்வளவு ஸ்வீட், சோ ஸ்மார்ட். ராகவா லாரன்ஸ் மாஸ்டரை `ஆல் இன் ஆல் அழகுராஜா'னு சொல்லலாம். ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு நிமிஷம்கூட அவர் சும்மா இருந்து நான் பார்த்ததில்லை. அடுத்து... அடுத்து... அடுத்துன்னு ஓடிக்கிட்டே இருக்கும் சூப்பர் ஹீரோ.”

“வாய்ப்பு வந்து தவறிய அனுபவம் ஏதேனும்...”

“ஜீவாகூட மூணு படங்கள் பண்ண வாய்ப்பு வந்தது. சிலபல காரணங்களால பண்ண முடியாமப்போச்சு. படுபயங்கர முயற்சிகளுக்குப் பிறகு இப்போ `கீ' படத்துல நாங்க நடிக்கிறோம். தன்னுடைய வேலை என்ன, எந்த சீன்ல எப்படி நடிக்கணும், எவ்வளவு நடிக்கணும், ஸ்க்ரீன் எந்த அளவுக்கு ரீச் ஆகும், ரசிகர்களுக்கு எது பிடிக்கும்/பிடிக்காது, அவங்க எதிர்பார்க்கிறது என்னன்னு க்ளியர் டேட்டாவோடு நடிக்கும் சைலென்ட் ஹீரோ. அவர்கூட வொர்க் பண்றது செம ஜாலி எக்ஸ்பீரியன்ஸ்.”

“விஷால்கூட ரொம்ப க்ளோஸா இருக்கீங்களாமே!”

“அப்படியா சொல்றீங்க? இது எனக்கே புது தகவலா இருக்கே. படத்துக்கான பாடல் வெளியீட்டு விழாவில் பக்கத்துப் பக்கத்துல உட்கார்ந்தா, அவங்களோடு க்ளோஸ்னு அர்த்தமா? கிசுக்கிசுச்சாலும் கொஞ்சம் லாஜிக்கோடு கிசுகிசுங்கப்பா, நானும் ரசிப்பேன்ல.
ஷூட்டிங், படவிழா, ஆடியோ லாஞ்ச், விருது விழான்னு எங்கே போனாலும் நமக்கு என்ன ஒதுக்கப்பட்டிருக்கோ அதை கரெக்டா செய்துட்டு வந்துடுவேன். ஷூட்டிங் முடிஞ்சதும் நேரா வீட்டுக்குப் போயிடுவேன். எனக்கு சினிமா ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ஜாஸ்தி கிடையாது. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஸ்கூல், காலேஜ் டைம்லேருந்து என்கூட இருக்கிறவங்க மட்டும்தான். அதனால எந்த விதத்துலயும் என்னைப் பற்றி கான்ட்ரவெர்சி வர வாய்ப்பே இல்லை. ஸாரி மை டியர், நீங்க எதிர்பார்த்த தகவல் கிடைக்காது!”

நிக்கி என்றாலே பட் படாபட். வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான். அந்த அளவுக்கு சிந்தனையில் முதிர்ச்சி, செயலில் தேர்ச்சி.  இந்தத் தெளிவுடன் கோலிவுட்டில் தொடர்ந்து ஹிட்டடிக்க வாழ்த்துகள் நிக்கி!

ஆர்.வைதேகி

23 ஆண்டுகளாக பத்திரிகையாளர். இப்போது விகடனில்..