ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

``என் இசை வாழ்வைத் தொடங்கிவைத்தவர் கண்ணதாசன்'' - `கண்ணதாசன் 90' விழாவில் இளையராஜா நெகிழ்ச்சி!

வியரசு கண்ணதாசனின் 90-வது பிறந்த நாள் விழாவைச் சிறப்பிக்கும்விதமாக, சென்னையில் `கவி விழா'  நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக ஒய்.ஜி.மகேந்திராவின் மெலடி மேக்கர்ஸ் இசைக் குழுவினர் `காற்றுள்ள வரை கண்ணதாசன்' என்ற பெயரில்  காலத்தால் அழியாத கண்ணதாசனின் பாடல்களைப் பாடினர்.  இசைஞானி இளையராஜா, நல்லி குப்புசாமி, நடிகர் சிவகுமார், கவிஞர் பழநிபாரதி, இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மற்றும் சுப்பு பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். காந்தி கண்ணதாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்கள் அனைவரும், கவியரசர் கண்ணதாசனின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விழாவைத் தொடங்கிவைத்தனர்.

கண்ணதாசன்

அங்கே வந்திருந்த பெரும்பாலான ரசிகர்கள் அதில் வரும் வரிகளை அனுபவித்துப் பாடிக்கொண்டிருந்தனர். இடையிடையே கண்ணதாசன் பற்றிய தகவல்களைக் கூறிய ஒய்.ஜி.மகேந்திரா, இளையராஜா வந்து அமர்ந்ததைப் பார்த்ததும் ``நாற்பது வருடங்களுக்கு முன் இதே அரங்கில் இளையராஜாவின் கச்சேரியில் இசைக்கருவிகள் வாசிப்பவர்களில் ஒருவனாக இருந்தேன். இப்போது காலமும் மாறிவிட்டது... அரங்கமும் மாறிவிட்டது. எதிர்காலத்தில் நாம் இருவரும் இணைந்து  ஒரு கச்சேரி நடத்த வேண்டும்'' என்று இளையராஜாவிடம் தன் ஆசையைக் கூறினார்.

அடுத்ததாக கண்ணதாசன் எழுத்துருவை அறிமுகம்செய்யும் நிகழ்வு நடைபெற்றது. எழுத்துருவை வடிவமைத்த ஓவியர் நாணா பேசியபோது ``எழுத்தாளர் சுஜாதாவின் கையெழுத்தை எழுத்துருவாக நான் மாற்றியிருக்கிறேன்.  அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. ஆனால், கண்ணதாசனின் கையெழுத்து மற்றவர்களின் கையெழுத்துபோல இல்லாமல் அவர் எழுதிய ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு மாதிரி  இருந்தது. அதைப் புரிந்துகொண்டு அவரின் கையெழுத்தை எழுத்துருவாக மாற்றினேன். கவியரசரின் எழுத்தை, இனி கணினியிலும் காணலாம்” என்றார். கண்ணதாசன் எழுத்துருவை, இளையராஜா வெளியிட மற்றவர் பெற்றுக்கொண்டனர்.

இளையராஜா

நல்லி குப்புசாமி, இயக்குநர் சி.வி.ராஜேந்திரன், சுப்பு பஞ்சு ஆகியோர் கவியரசு கண்ணதாசனின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களையும் தங்களின் அனுபவங்களையும் கூற, அடுத்ததாகப் பேசிய கவிஞர் பழநிபாரதி ``என் தந்தை சாமி பழனியப்பனும் கவியரசரும் நெருங்கிய நண்பர்கள். என் தந்தையை சென்னைக்கு அழைத்துவந்தது கவியரசர்தான். அவர் நடத்திய `தென்றல்' பத்திரிகையில் பணிபுரிய அழைத்து வந்தார். வேறுசில காரணங்களால் அங்கே பணிபுரிய இயலாமல்போக, சிறிது காலத்துக்குப் பிறகு ஒருநாள் கவியரசரும் என் தந்தையும் தற்போது அண்ணா மேம்பாலம் இருக்கும் இடத்தில் தற்செயலாகச் சந்தித்தனர். என் அப்பாவைப் பார்த்த கவியரசர், `என்ன பழனியப்பா... எப்படி இருக்க?' என்று கேட்க, என் அப்பா பட்டணத்துக்கு வந்து பட்ட கஷ்டத்தையெல்லாம் கவியரசரிடம் விவரிக்கிறார். அன்று மாலை `பெரிய இடத்து பெண்' என்ற படத்துக்காக, `பாரப்பா பழனியப்பா...' என்று பாட்டு எழுதுகிறார் கவியரசர். அன்றைக்கு அவர் எழுதிய பாடலில் இன்றைக்கும் என் தந்தையின் நினைவு வாழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு கவிஞனின் வரிகள், ஒவ்வொருவனின் வாழ்விலும் விளக்கேற்றி வைக்க வேண்டும்; மனதில் நம்பிக்கை விதைக்க வேண்டும்.

ஒருமுறை கவியரசரிடம் `தற்கொலை செய்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். `தற்கொலை செய்துகொள்ள எவ்வளவு துணிச்சல் வேண்டும். அதையே மூலதனமாக வைத்து வாழ்ந்துபார்த்தால் என்ன?' என்று அற்புதமான ஒரு பதிலைக் கூறினார் கண்ணதாசன். அவர் பாடலை நாம் பாடினோம், இனிமேல் நம் பிள்ளைகள் பாடுவார்கள், அவர்களின் பிள்ளைகளும் நிச்சயம் பாடுவார்கள்'' என்று கூறினார்.

அடுத்து பேச அழைக்கப்பட்டார் இசைஞானி இளையராஜா. “நேரு இறந்த சமயத்தில், அவருக்கு இரங்கல் பாடல் ஒன்றை எழுதியிருந்தார் கவியரசர். அப்போது நாங்கள் நடத்துவதாக இருந்த கச்சேரியை ரத்துசெய்துவிடலாம் என எண்ணியிருந்தோம். இருந்தாலும் நேருவுக்கு அஞ்சலி செலுத்தும்விதத்தில் பாடல் பாடலாம் என எங்கள் முடிவை மாற்றினோம். அப்போது கவியரசரின் இரங்கல் பாடலை வைத்து விளையாட்டாக இசையமைத்துக்கொண்டிருந்தேன். அது எப்படியோ அண்ணனின் காதுகளில் விழுந்திருக்கிறது. அன்று மாலை அந்த இரங்கல் தெரிவிக்கும் பாடலைப் பாடுவதற்காக மேடையில் அமர்ந்திருந்தபோது, அண்ணண் அந்தப் பாடலைப் பாடச் சொல்லிவிட்டார். அதுதான் நான் முதன்முதலில் கம்போஸ் செய்த பாடல். என்  இசை வாழ்வைத் தொடங்கிவைத்தவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள்தான்'' என்று அரங்கத்தைக் கலகலப்பாக்கினார் இசைஞானி.

அடுத்ததாகப் பேசிய நடிகர் சிவகுமார், ``ஒரு மனிதன் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வநிலை அடையும் வரை, `அர்த்தமுள்ள இந்துமதம்' புத்தகத்தில் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். எனவே, அனைவரும் அதில் உள்ள `இந்து'  என்ற வார்த்தையை விட்டுவிடுங்கள். அதைப் பார்க்காதீர்கள். வேறு எந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கிறீர்களோ இல்லையோ, இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்'' என்றார். அதன் பிறகு நடத்தப்பட்ட வெவ்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி முடியும் வரை எவரும் கலைந்து செல்லாதது, கவியரசரின் மீதான மரியாதையை உணர்த்தியது. அவர் கூறியதுபோல `நான் நிரந்தரமானவன்' என்பது, மறுபடியும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதோ அடுத்ததாக நம் கணினிகளில் கையெழுத்தாக வலம்வரத் தொடங்கிவிட்டார் கவியரசர்!
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!