Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

'முன்னாடி பின்னாடி' காமெடிக்குப் பின்னாடி நடந்த அந்தக் கதை! - க்ரேஸி மோகன் கல கல #15YearsOfPanchathanthiram

த்தனை ஜெனரேஷன் வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் பிடிக்கும் ரகமான படத்தை எடுப்பதுதான் இயக்குநர்களுக்குச் சவாலான காரியம். அந்தச் சவாலான விஷயத்தில் அசால்ட் செய்த படம்தான் 'பஞ்சதந்திரம்'. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கமல் நடித்த இந்தப் படத்திற்கு கிரேஸி மோகன் வசனம் எழுதினார். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத இந்தத் திரைப்படம் வெளிவந்து ஜூன் 28ஆம் தேதியோடு பதினைந்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. 

பஞ்சதந்திரம்

எல்லாத் தலைமுறையினரும் கொண்டாடும் படங்கள் லிஸ்ட்டில் இந்தப் படத்துக்கு எப்போதுமே இடமுண்டு. மாடர்னான ஃப்ரேமில் எடுக்கப்பட்ட எக்காலத்துக்கும் ஏற்ற மாடர்னான திரைப்படம்தான் 'பஞ்சதந்திரம்'. படத்தின் கதையே பெங்களூரு சென்றபிறகுதான் ஆரம்பிக்கும். போகும் நோக்கத்தில் வல்காரிட்டி நிறைந்திருந்தாலும் அந்த விஷயம் ஒரு காட்சியில் கூட பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்காமல் அந்த ஐவருடன் சேர்த்து நம்மையும் பயணிக்க வைக்கும் இந்தப்படம். 'அட இதுதானா இந்தப் படத்தின் கதை?' என்ற எண்ணம் நமக்குள் தோன்றலாம். ஹீரோவுக்கு கல்யாணம் நடந்த பிறகும் பிரச்னை வந்து பிரிஞ்சு வாழ்றாங்க... ஹீரோவின் நான்கு நண்பர்கள் சேர்ந்து, மனைவியோடு மனஸ்தாபத்தில் இருக்கிற ஹீரோவை எப்படி மீட்டெடுக்குறாங்க... ஒரு பெண்ணை மறக்க இன்னொரு பெண்தான் உதவணும்ங்கிற இவங்களோட கான்செப்ட்... அதுக்காக இவங்க பெங்களூரு போறாங்க... அங்க இவங்க மாட்டுற பிரச்னையில இருந்து எப்படித் தப்பிச்சு எப்படி ஹீரோயினோட டூயட் பாடுறாங்க... அட போங்க பாஸ் இதெல்லாம் பாகவதர் காலத்து கதைனு யோசித்தால் கரெக்டான விஷயம்தான். ஆனால் அதே கதையை எப்படி ருசிகரமாக ரசிகர்களுக்குக் காட்டுவது? காட்சிகள் ஒவ்வொன்றையும் எப்படி அழகாகக் காட்டுவது? நட்பில் நடக்கும் இயல்பான காமெடி கலாட்டாவை எப்படி ரசிகர்களுக்குக் கொண்டு சேர்ப்பது? இதுபோன்ற ஏராளமான கதைகளுக்கு அழகான ஒரு எடுத்துக்காட்டுதான் இந்தத் திரைப்படம். அந்தப் படத்தின் இயக்குநரே நினைத்தாலும் இனி 'பஞ்சதந்திரம்' போன்ற ஒரு படத்தை எடுப்பதென்பது கஷ்டமான காரியம். அந்த அளவுக்கு ஒரு மேஜிக் நிறைந்த படம்தான் இது. அந்தப் படத்தின் வசனகர்த்தா கிரேஸி மோகன் பகிர்ந்த சில சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ...  

''கமலுக்கும் உங்களுக்கும் இருக்குற வேவ் லென்த் இந்தப் படத்துல எப்படி..?''

''இந்தப் படம் டிஸ்கஸ் பண்ணின சமயத்தில் கமல் சார் ஹாங்காங்ல இருந்தார். வழக்கமா ஒரு படத்தைப் பத்தி பேசணும்னா ஏதாவது ஒரு ஹோட்டல், இல்லேன்னா யாரோட ஆபீஸ்லேயாவது டீம் மொத்தமும் சேர்ந்து டிஸ்கஸ் பண்ணுவோம். கமல் சார் எனக்கு ஹாங்காங்ல இருந்து ஸ்க்ரிப்ட் அனுப்பினார். அந்தப் படம் தொடர்பாக நாங்க வீடியோ சாட்லதான் டிஸ்கஸ் பண்ணினோம். மானிட்டர்ல அவரைப் பார்த்து நான் டயலாக் சொல்லுவேன். அவரும் கேட்டுட்டு ஏதாவது மாற்றம் இருந்தா சொல்லுவார். நானும் என்னோட விருப்பத்தைச் சொல்லுவேன். பொதுவா எல்லா ஆணோட வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு பெண் இருப்பாங்கன்னு சொல்லுவாங்க. எனக்கும் அதே மாதிரி, வெற்றிக்குப் பின்னாடி ஒரு பெண்தான். என்ன கொஞ்சம் வித்தியாசமாக அவர் ஒரு பெண் வேடம் போட்ட ஆண்... அது வேற யாரும் இல்ல நம்ம அவ்வை சண்முகி.'' 

க்ரேஸி மோகன்

'' 'முன்னாடி பின்னாடி' காமெடிக்கு பின்னாடி இந்த அளவுக்கு ரீச் ஆகும்னு முன்னாடியே எதிர்பார்த்தீங்களா?''

''படத்துல எல்லா காமெடிகளுமே நல்லா வந்துருந்தது. குறிப்பா அந்த 'முன்னாடி, பின்னாடி' காமெடிதான் எல்லாரோட ஃபேவரைட்டா இருக்கும். அந்தக் காமெடிக்கு பின்னாடி நடந்த கதையை இப்போ உங்க முன்னாடி சொல்றேன். அதைப் பின்னாடி நீங்க எப்படி எழுதணுமோ அப்படி எழுதிக்கோங்க. எனக்கு ராம்நாத்னு ஒரு நண்பன் இருக்கான். செம ஹ்யூமர் சென்ஸ் அவனுக்கு. அவன் ஒரு நாள், நான் காருக்கு முன்னாடி நின்னுட்டு இருக்கும் போது 'ஏன்டா எலுமிச்சம் பழம் மாதிரி முன்னாடி நிக்குற... காரை விட்டு ஏத்திறப் போறேன்டா நகரு'ன்னு சொன்னான். எனக்கு அப்போ சிரிப்புத் தாங்க முடியல. அதை இன்ஸ்பிரேஷனா வெச்சுத்தான் அந்த 'முன்னாடி பின்னாடி' காமெடியைப் படத்துல சேர்த்தேன். முன்னாடி அந்த சீன்ல நான்தான் நடிக்க வேண்டியதா இருந்தது. பின்னாடி எனக்கு ஒரு முக்கியமான வேலை வந்துருச்சு. அதனால அதுக்குப் பின்னாடி விக்ரம் வாசு அந்த காமெடியில நடிச்சிருந்தார். பின்னாடி அதை நெனச்சு நான் ரொம்ப ஃபீல் பண்ணேன். இன்னமும் கே.எஸ்.ரவிகுமார் சார் என்கிட்ட சொல்லுவார். அந்த ரோலை மிஸ் பண்ணிட்ட... நீயே அதைப் பண்ணியிருக்கலாம். கமல் - கே.எஸ்.ரவிகுமார் படத்துல நடிக்காமப் போனது என்னோட காஸ்ட்லி மிஸ்தான். பின்னாடிதான் எனக்கு இது புரிஞ்சது.'' 

''மூஞ்சியில துப்பிட்டான்னா?'ங்கிற டயலாக் எப்படி 'துப்பில மூஞ்சிட்டான்னா?'னு மாறுச்சு?''

''அது வழக்கமா எங்களுக்குள்ள நடக்குற காமெடிதான். எங்க ட்ரூப்ல ஒரு பையன் இருக்கான். அவன் பேசுற டயலாக்கை எல்லாமே மாத்தி மாத்தித்தான் சொல்லுவான். 'பிறவியிலே குருடா?'னு கேட்குறதுக்குப் பதில் 'குறவியிலே பிருடா?'ன்னு கேட்பான். அந்த முறையை எல்லா படத்துலயுமே அங்கங்க வெச்சுருப்பேன். 'அவ்வை சண்முகி' படத்துல கூட 'ஜானகி அம்மா வீட்டுக்கு போறேன்'னு சொல்றதுக்கு பதில் 'மானகி ஜம்மா வீட்டுக்கு போறேன்'னு கமல் சார் ஒரு டயலாக் சொல்லுவார். இந்த மாதிரி எல்லா படங்களிலேயுமே டச் வெச்சுகிட்டேதான் இருப்பேன். இது ஒரு நிமிஷம் நிறுத்தி கவனிச்சுக் கேட்டாதான் புரியும். சிம்பிளா இதுல ஹ்யூமர் பண்ணிட்டு போயிடலாம்.''

க்ரேஸி மோகன்

''படத்துக்குத் தேவையான ஹ்யூமர் கன்டென்ட் எல்லாம் எங்க இருந்து எடுக்குறீங்க?''

''நம்ம வாழ்க்கையே பெரிய ஹ்யூமர்தான் தம்பி. இதை விட கன்டென்ட்டுக்கு எங்க தேடி அலையச் சொல்றீங்க. எனக்கு மௌலி ராம்பத்திரம்னு ஒருத்தர் நல்ல பழக்கம். ஆனால் இப்போ காலமாகிட்டார். அவர் கடைசிக்காலத்துல பாத்ரூம் போகும்போது 'துணைக்கு நான் வேணும்னா வரவா?'னு கேட்டேன். அதுக்கு அவர் '60 வருஷமா நான் தனியாதான போயிட்டு இருக்கேன் திடீர்ன்னு என்ன துணை?'னு கேட்டார் அதையே நான் நாகேஷ் சார் காமெடியில டயலாக்கா வெச்சேன். இதே மாதிரிதான் முன்னாடி, பின்னாடிங்கிற வார்த்தை விளையாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும் அதுவும் இந்தப் படத்துல இடம்பெற்றது. இது ஆடியன்ஸ் மத்தியிலயும் எதிர்பாராத ஹிட் அடிக்கும். ஷூட் டைம்ல அதை நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கல. என் பெயருக்கு முன்னாடி இருக்குற கிரேஸிக்கு பின்னாடி பெயர் வாங்கிக் கொடுத்தது பஞ்சதந்திரம்தான். எனக்கு எப்பவுமே ரொம்ப ஸ்பெஷலான ஒரு படம் இது'' என்று நெகிழ்ந்தார் கிரேஸி மோகன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement