"போலீஸாரை வழக்குப் பதியவிடாமல் தடுக்கிறார் என் கணவர்!” - பாலாஜி மனைவி நித்யா குற்றச்சாட்டு

‘‘பாலாஜி மீது வழக்கு போடாமல் மாதவரம் போலீஸார் இழுத்தடிக்கிறார்கள்'’ என்று அவரின் மனைவி நித்யா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்.

பாலாஜி மனைவி நித்யாநடிகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான பாலாஜி, தன்னை சாதியைக் குறிப்பிட்டுத் திட்டுவதாக சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் அவரின் மனைவி நித்யா கடந்த மே மாதம் புகார் அளித்திருந்தார். இதற்கிடையில் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த நித்யா, `பாலாஜி மீது வழக்கு பதிவுசெய்ய மாதவரம் போலீஸார் மறுக்கிறார்கள்; அவர் மீதான என் புகாரை இங்கு பதிவுசெய்ய வேண்டும்' என்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். 

இதுகுறித்து நித்யாவிடம் பேசும்போது அவர் கூறியதாவது... 

‘‘பாலாஜி என்னைத் தாக்கியது, சாதியைக் குறிப்பிட்டுத் திட்டியது தொடர்பாக அவர்மீது நான் ஏற்கெனவே மாதவரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்திருந்தேன். அந்தப் புகாரை மையமாக வைத்து வழக்கு பதிவுசெய்யாமல் மாதவரம் போலீஸார் இழுத்தடிக்கிறார்கள். பாலாஜி என்னை அடித்ததற்கான ஹாஸ்பிடல் ரெக்கார்ட்ஸ், ஸ்கேன் ரிப்போர்ட்ஸ் அனைத்தும் இருக்கின்றன. ஆனால், எஃப்.ஐ.ஆர் போட மறுக்கிறார்கள்.

மாதவரம் போலீஸாரை, பாலாஜி தனக்கு சாதகமாகவே செயல்படவைக்கிறார். என் வழக்கறிஞர்களைக்கூட அவர் பக்கம் இழுத்துக்கொண்டார். இதனால் இதுவரை இரண்டு வழக்கறிஞர்களை மாற்றிவிட்டேன். ஹாஸ்பிடலில் உள்ள ஆவணங்களைக்கூட தன் பிரபல்யத்தைப் பயன்படுத்தி மாற்றியிருக்கிறார். மேலும், குண்டர்களையும் அரசியல்வாதிகளையும் வைத்து என்னை மிரட்டுகிறார். இப்படி ஆரம்பம் முதல் இன்று வரை அனைத்து தரப்பினரையும் அவருக்குச் சாதகமாகவே செயல்படவைக்கிறார். 

அவ்வளவு ஏன், என் காரை எடுத்துச் சென்றுவிட்டார். என் பாஸ்போர்ட், நாய்க்குட்டியைத் தூக்கிச் சென்றுவிட்டார். தவிர, என் கேரக்டரைப் பற்றி வெளியே தவறாகச் சித்திரிக்கிறார். இப்படி என்னை விவாகரத்துக்குப் போகவிடாமல் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு பிரச்னை கொடுத்துகொண்டே இருக்கிறார். 

இப்பவும் சொல்கிறேன், அவரைப் பழிவாங்க வேண்டும்; அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஆனால், ஒரு பிரபலமாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? எவ்வளவு பெரிய தவறையும் செய்துவிட்டு தப்பித்துக்கொள்வீர்களா? `நான் ஏற்கெனவே விவாகரத்து ஆனவன். நான் எல்லாத்தையும் பார்த்துட்டேன். இந்தப் பிரச்னையை எப்படி டீல் பண்றதுனு எனக்குத் தெரியும். நீ என்ன மூவ் பண்றியோ பண்ணு. நான் உன்கூட இருக்கிறதுக்கு எந்த லெவலுக்குப் போவேன்’ என்கிறார். நாங்கள் பிரிந்து கிட்டத்தட்ட 50 நாள்கள் ஆகின்றன. ஆனால், இன்னமும் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கிறார். 

நித்யா

அவர் தன் சோஷியல் இமேஜைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே எங்களுடன் சேர்ந்திருக்க நினைக்கிறார். இந்த எட்டு வருஷங்களில் எங்களுக்குள் எந்த அன்யோன்யமும் இல்லை. என்னையும் என் குழந்தையையும் வைத்து செயற்கையான வாழ்க்கைதான் வாழ்ந்தார். குடும்ப உறவில் கொஞ்சமாவது நேர்மை இருக்க வேண்டாமா? பணக்கார, போலியான வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. நிம்மதியான வாழ்க்கைதான் தேவை. அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். அதை நோக்கியே நான் செயல்படுகிறேன். 

ஆனால், மாதவரம் போலீஸாரோ, ‘உங்க மேலயும் வழக்கு போடுவோம்’ என்கிறார்கள். சாதாரண ஒரு குடும்பப் பெண்ணை, பாலாஜி தன் நடவடிக்கையால் வீதிக்கு இழுத்துவந்துவிட்டார். நீதி கேட்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றால், அவர்கள் பாலாஜியுடன் சேர்ந்துகொண்டு பாதிக்கப்பட்ட எனக்கு எதிராகவே பேசுகிறார்கள். அதனால்தான் நான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்தேன். அவர்கள் மாதவரம் போலீஸாருக்கு போன் செய்து மாலை 4.30 மணிக்குள் எஃப்.ஐ.ஆர் போடச் சொல்லியிருக்கிறார்கள். அதற்குப் பிறகும் அவர்கள் எஃப்.ஐ.ஆர் போடவில்லை என்றால், என் புகாரை பத்திரிகைகளுக்கு அளித்துவிட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் செய்யலாம் என இருக்கிறேன்’’ இவ்வாறு நித்யா கூறினார். 

நித்யாவின் புகார் குறித்து நடிகர் பாலாஜியிடம் கேட்டப்போது, ‘’மாதவரம் போலீஸ் ஸ்டேஷன்ல நித்யா புகார் கொடுத்ததில் இருந்து இப்போ வரை ஸ்டேஷனில் இருந்து போன் பண்ணும் போதெல்லாம் போய் நின்னுருகேன். என் மேல எதுக்கு புகார் கொடுக்கணும், நான் தப்பே பண்ணலையே. அப்பறம், அவங்க காரை நான் எடுத்துட்டு போயிட்டதா சொல்றாங்க. அது நான் வாங்கி கொடுத்த கார். அதுனால அதை எடுத்துட்டு வந்தேன். அவங்க திரும்ப கேட்டதும் போய் கொடுத்துட்டேன். நான் அவங்களுக்காக எவ்வளவு தூரம் இறங்கி போனாலும், அவங்க வழக்கம் போல மீடியாகிட்ட பேட்டி கொடுக்கிறது, போலீஸ் ஸ்டேஷனின் புகார் கொடுக்கிறதுனு எனக்கு எதிரா எதையாவது பண்ணிட்டே இருக்காங்க. இதையெல்லாம் பார்க்கும் போதுதான், அவங்களுக்கு பின்னால இருந்து யாரோ இயக்குற மாதிரி தெரியிது. நானும் அவங்களை மாதிரி பேட்டி, புகார்னு கொடுக்கலாம். ஆனால், என் பொண்ணோட எதிர்காலத்துக்காக நான் அமைதியா இருக்கேன்’’ என்றார் விரக்தியாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!