Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பிக் பாஸ்' ஜூலியின் பெற்றோரை உங்கள் மீம்ஸ், ட்ரோல் என்ன செய்யும் என நினைக்கிறீர்கள்?! #BiggBoss

 

 

மூக ஊடகங்களில் தற்போதைய ஹாட் டாபிக் விஜய் டிவியின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி. அதிலும், அந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவரான, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது தனது துள்ளலான கோஷங்களால் பிரபலமான ஜூலி பற்றிய பேச்சுதான் கடந்த சில நாட்களாக நெட்டிசன்களுக்குத் தீனி. 'வீரத் தமிழச்சி' என்று நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு கண்டனங்கள், சக போட்டியாளர் ஸ்ரீயுடனான காட்சிகளுக்கு ஆபாச ட்ரால்கள், நிகழ்ச்சியில் அவரின் அணுகுமுறைக்கு 'ஃபீலிங் இரிட்டேட்' ஸ்டேட்டஸ்கள் என்று ஜூலியைப் பற்றியே பேசிக்கிடக்கிறார்கள் மக்கள். 

ஜூலி

சொல்லப்போனால், நமீதா முதல் ஓவியா வரை, பார்வையாளர்கள் பார்க்கவும் ரசிக்கவும் நடிகை என்ற ஈர்ப்பு அடையாளத்துடன் பலர் அந்நிகழ்ச்சியில் இருக்கும்போது, ஜூலி பிரபலமானது எப்படி? 'எல்லோரும்தான் போராட்டத்துக்குப் போனோம். ரெண்டு நாள் கோஷம் போட்டதுக்கு, கொஞ்சம் அழகா இருக்கிறதுக்கு இந்த மேடையா?' என்ற  பொறாமை ஒரு தரப்பினருக்கு. 'ஐ... இந்தப் பொண்ணா!' என்று நட்சத்திரங்களுக்கு மத்தியில் நம்மில் இருந்து ஒரு பெண் சென்றிருக்கும் மகிழ்ச்சி ஒரு தரப்பினருக்கு. இதுவரைகூட பிரச்னையில்லை. இந்நிலையில் நிகழ்ச்சியின் அடுத்தடுத்த காட்சிகளில் அந்தப் பெண் தான் நினைத்ததைப் பேச, செய்ய, பெண்களின் நடத்தை பற்றி தங்களின் அழுக்கான பார்வையில் மீம்ஸ், ட்ரோல்ஸ் போட்டு பொழுதுபோக்கும் 'பொறுப்புள்ள' க்ரியேட்டர்கள், ஜூலிக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி கொடுக்கும் வேலையைச் செய்ய ஆரம்பித்தார்கள். அதைப் பார்த்து, சிரித்து, ரசித்து, பகிர்ந்த அனைவருமே அதை ஆமோதிப்பவர்களாக ஆனார்கள்.

ஜூலி மெரினா போராட்டத்தின்போது தனக்குக் கிடைத்த வெளிச்சத்தின் தொடர்ச்சியாக வந்த 'பிக் பாஸ்' வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார். இந்த மீம்கள், ட்ரோல் வீடியோக்கள் க்ரியேட்டர்கள் வருவது தவறு என்று சொல்வதற்கில்லை. இன்றைய யுகத்தில், ட்ரம்ப் முதல் நம் குடும்ப உறுப்பினர்கள் வரை யாராக இருந்தாலும் ட்ரோல்தான் ட்ரெண்ட். ஆனால், என்ன சொல்லி ஒரு பெண்ணைக் கேலி செய்கிறார்கள் என்பது முக்கியம். அதுவே அவரவர் மனதின் லட்சணம். 

'பிக் பாஸ்' நிகழ்ச்சி நடக்கும் இந்த நூறு நாட்களில் ஜூலிக்கு வெளியே நடக்கும் விஷயங்கள் உள்ளே தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால், ஜூலியின் பெற்றோர்களை நினைத்துப் பார்த்தால், கலக்கமாகத்தான் உள்ளது. ஒரு பெரிய சேனல் நிறுவனம், உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சிக்கு, இத்தனை நட்சத்திரங்களுடன் கலந்துகொள்ள தங்கள் பெண்ணையும் அழைத்த மகிழ்ச்சியில் வழியனுப்பிவைத்திருப்பார்கள் அவர்கள். ஏற்கெனவே, ஜல்லிகட்டு போராட்டத்தின் போது அதிக விமர்சனத்திற்கு உள்ளானவர் ஜூலி. அவர் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்று கூட செய்திகள் வெளிவந்தன. இதை அனைத்தையும் ஜூலியே நக்கலாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் சொல்கிறார்,  

'ஆதாயம் இல்லாமலா எல்லாம் நடக்கும்?' என்கிறீர்களா? ஓர் ஆணுக்குக் கிடைக்கும் புகழ் வெளிச்சத்துக்கும், ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் புகழ் வெளிச்சத்துக்கும் நம் சமூகம் காட்டும் பாரபட்சம் பற்றி அறிவோம்தானே? ஒரு பெண் அழகாக இருக்கிறார், அருமையாகப் பேசுகிறார் என்றால் அவரைத் தூக்கிவிடுபவர்கள், அடுத்து அவர் வளர்கிறார் எனும்போது அதை விமர்சிக்கவும் செய்கிறார்கள். ஓர் ஆண் இப்படி திடீரென்று வளர்ந்தால் வெறும் பொறாமை உணர்வோடு பேசுபவர்கள், அதே ஒரு பெண்ணாக இருந்தால் பொறாமையுடன் அவளது ஒழுக்கத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். அதாவது, ஓர் ஆண் வளர்ச்சியடைந்தால், அவனது திறமை மட்டுமே அதற்குக் காரணம். அதுவே ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் வளர்ச்சிக்கு அவள் திறமை மட்டும் காரணமாக இருக்க முடியாது என்கிற கீழ்த்தரமான எண்ணம் புரையோடிய சமூகம் இது.

நடிகைகளைவிட நம்மில் ஒருத்தியாகச் சென்றிருக்கும் அந்தப் பெண்ணின் மீது ஆதிக்கத்தைச் செலுத்துவது என்பது, வீட்டுப் பெண்களின் மீது செலுத்தும் அதிகாரத்தின் நீட்சி தரும் சந்தோஷமாக ஆண்களுக்கு இருக்கிறது. அதனாலேயே அந்த மீம்களை, வீடியோக்களை அவர்கள் பகிர்ந்து பரபரப்பாக்குகிறார்கள். காலம் காலமாக ஒரு பெண் எப்படி பேசவேண்டும், எப்படி நடந்துகொள்ளவேண்டும், எப்படி துணி உடுத்திக்கொள்ளவேண்டும் என்ற மதிப்பீட்டை ஆண்கள்தான் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இவர்களின் 'விதிகளுக்குள்' ஒரு பெண் நடந்துகொண்டால் அவளைப் போற்றுவார்கள். இவர்களின் மதிப்பீட்டை மீறினால் அவளின் ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்குவார்கள். இந்த ஆணாதிக்க மனநிலைதான் இன்றைய நவீன சமூக வலைதளத்திலும் பிரதிபலிக்கிறது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்