Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாளை திரையரங்கள் மூடப்படுவது உறுதி.. ஆனால் ஜி.எஸ்.டிக்காக அல்ல - அபிராமி ராமநாதன் விளக்கம்!

ஜி.எஸ்டி. வரி தற்போது இந்தியா முழுவதும் அமலுக்கு வந்துவிட்டது. தமிழ் திரையரங்குகளுக்கு உள்ளாட்சி வரி என தமிழக அரசு திடீரென்று விதித்துள்ளது.  ஆக, ஜி.எஸ்.டி 28 சதவீதமும் உள்ளாட்சி வரி 30 சதவீதமும் சேர்த்து மொத்தம் 58 சதவீதம் செலுத்த வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. இதனை கண்டித்து, இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், ‘உள்ளாட்சி வரியை ரத்து செய்யக்கோரியும் டிக்கெட் விலை அதிகரிக்கக்கோரியும் வலியுறுத்தி ஜூலை 3 முதல் தமிழ் நாடு முழுவதும் அனைத்து திரையரங்குகளும் காலவரையின்றி மூடப்படும்’ என்று அறிவித்தார்.

அபிராமி ராமநாதன்

இது தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து பேசுவதாகவும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மேலும், கடந்த வாரம்  வெளிவந்த `இவன் தந்திரன்` பட இயக்குநர் ஆர்.கண்ணனின் ஆடியோ ஒன்று நேற்று இணையத்தில் வைரலானது. படத்திற்காக இரண்டு வருடம் உழைத்து எடுத்திருக்கிறோம். நிறைய கடன்கள் வாங்கி படத்தை வெளியிட்டோம். படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், இவ்வாறு திறையறங்குகள் மூடப்படுவது எங்களை மிகவும் பாதிக்கப்படும் என்று உடைந்த குரலில் பேசியிருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘இவ்வாறு முடிவெடுப்பதாக இருந்தால் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தெரிவிக்க வேண்டுமல்லவா’ என்று கேள்வியெழுப்பியதுடன் ஒரு வாரமாவது படங்கள் ஓட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்நிலையில், நாளை திரையரங்குகள் மூடப்படுவது உறுதியா என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருந்து வந்தது.

இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அபிராமி ராமநாதன், `என்னுடைய தலைமையில் நேற்று ஒரு குழு தமிழக முதல்வரை சந்தித்து பேசினோம் . அப்போது, உள்ளாட்சி கேளிக்கை வரியை அறவே நீக்க வேண்டுமென்றும், டிக்கெட் விலை 10 வருடங்களாக ஏற்றாமல் இருக்கிறது. அதனை உயர்த்தித் தர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டோம்.  அவர்கள் எங்கள் நிலைமையை புரிந்துகொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இதுவரை தமிழக அரசு கேளிக்கை வரிவிலக்கு அளித்து எங்களை பாதுகாத்து வந்தது. ஆனால், இப்போது மத்திய அரசு மாநில அரசு என மொத்தம் 58 % வரி என்பது எங்களால் இயலாத ஒன்று. மேலும், டிக்கெட் விலையையும் உயர்த்தித் தரவில்லை. ஆக, இன்று நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து மாவட்ட திரையரங்கு நிர்வாகிகள், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு வர்த்தக சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில், ‘எங்களால் இரட்டை வரி செலுத்தி திரையரங்குகள் நடத்த இயலாது. ஏனைய தொழில்களை போல் `ஒரு தேசம் ஒரு வரி` என்று ஒரு வரி மட்டும் செலுத்த அனுமதி வழங்கவும், டிக்கெட் விலையை நியாயமான முறையில் உயர்த்தி தரும்படியும் கேட்டுக்கொள்கிறோம். வேறு வழியில்லாமல், நாலை முதல் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் காலவரையின்றி மூடப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார்.   

தியேட்டர்  

மேலும், `தமிழக அரசிடம் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தான் தகவல் வருகிறது. உடனே அமலுக்கும் வந்துவிட்டது. இவ்வாறு இருக்கும் சூழலில் நாங்கள் திரையரங்குகள் நடத்தினால் இரட்டைவரி கட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். ஜி.எஸ்.டி வரியை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இந்த மாநில அரசின் வரியை எங்களால் ஏற்றுக்கொள்ள இயலாது. இந்த வாரங்களில் வெளிவந்த படங்களின் விநியோகஸ்தர்களை அழைத்துப்பேசி வருகிறோம். அவர்களுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்கிறோம்` என்றும் அவர் கூறியுள்ளார். ஆக, நாளை முதல் தமிழ் நாடு முழுவதும் அனைத்து திரையரங்குகளும் மூடப்படுவது உறுதி என தெரியவருகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!