Published:Updated:

'செத்துச் செத்து விளையாடுற விளையாட்டு இதுதான்..!' - முத்துக்காளை : கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 13

விக்னேஷ் செ
'செத்துச் செத்து விளையாடுற விளையாட்டு இதுதான்..!' - முத்துக்காளை : கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 13
'செத்துச் செத்து விளையாடுற விளையாட்டு இதுதான்..!' - முத்துக்காளை : கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 13

சினிமா என்பது ஒரு கனவுலகம் எனப் பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். திரையுலகை ஒரு ஃபேன்டஸி கனவாகக் காட்டுவதற்குப் பின்னே இருக்கும் உழைப்பு பலபேருடையது. ஐந்து நிமிட சண்டைக் காட்சி வரும்... படத்தின் ஹீரோ ஐம்பது பேரைப் போட்டுப் புரட்டியெடுத்துப் பந்தாடுவார். ஹீரோ எகிறி உதைத்ததில் பலர் அருகில் இருக்கும் காய்கறிக் கடைகளில் புகுந்து விழுவார்கள்... தள்ளுவண்டியில் விழுந்து வண்டியைச் சாய்ப்பார்கள்... சிவனே என நிற்கும் சுமோவின் கண்ணாடியை உடைப்பார்கள்... பறந்து விழுந்து பத்து பிளாஸ்டிக் குடங்களை சல்லிசல்லியாக உடைப்பார்கள். இத்தனை களேபரங்களுக்கும் காரணமான அந்த ஸ்டன்ட் நடிகர்களுக்கு என்னாகுமோ என்கிற பதைபதைப்பு படம் பார்க்கும் எவருக்கும் ஏற்படுவது இல்லை. இப்படிப்பட்ட கலைஞர்களுக்கு பல நேரங்களில் கீறல் விழும்... கை, கால்கள் உடையும்... கண்ணில் கண்ணாடிச் சில்லுகள் தெறிக்கும். அடுத்த படத்திற்கு வேலை செய்யமுடியாத நிலை கூட ஏற்படலாம். ஆனாலும், ஒவ்வொரு சண்டைக்கும் பறக்கிறார்கள். 

இவர்களுக்கு இயற்கையாகவே, அடி தாங்கும் வாழ்வு அமையப்பெற்றிருக்கிறது. இந்த வேலையையும் விரும்பிச் செய்து வருகிறார்கள். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. குழந்தைகள் இருக்கிறார்கள். இன்று நடக்கிற ஒரு அசம்பாவிதத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனத் தெரிந்தே இருக்கிறது. அவருக்கு ராஜபாளையம் பக்கம் திருக்கோவில்புரம் கிராமம்தான் சொந்த ஊர். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே கராத்தேவில் ப்ளாக் பெல்ட். சிலம்பம், ஜிம்னாஸ்டிக், ஸ்கேட்டிங் எனப் பல வித்தைகளையும் கற்றுக்கொண்டுதான் ஸ்டண்ட் ஃபீல்டுக்குத் தயாரானார். பள்ளிக்கூடத்தில் படிப்பில் ஆர்வமில்லாமல் கிளம்பிவிட்டாலும் இப்போது எம்.ஏ படித்துக்கொண்டிருக்கிறார். 

பத்து வயதில் சினிமா ஃபைட்டராக ஆசைப்பட்டவருக்கு முப்பதாவது வயதில்தான் அதன் வாசலைக் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் சினிமாவுக்குப் போகிறவர்களை வாழ்த்தி வழியனுப்பவெல்லாம் மாட்டார்கள். இவருக்கு, சோதனைகள் அதைவிட அதிகம். 'மெட்ராஸுக்குப் போய்ப் பிச்சைதான் எடுக்கப்போற...' எனச் சொல்லாத வாய் இல்லை. அத்தனைகளையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டு 'சென்னைக்கு ஒரு டிக்கெட்' கேட்டார். 

இடையூறுகளுக்கு அஞ்சி பயணத்தைப் பாதியில் நிறுத்திவிடுகிறவர்கள் வரலாற்றில் காணாமல் போகிறார்கள்! 

எம்.ஜி.ஆரின் சிலம்பச் சண்டையைப் பார்த்து வளர்ந்தவருக்கு எங்காவது கம்பைப் பார்த்துவிட்டால் கை கால் நடுங்கத் தொடங்கிவிடுமாம். எடுத்து நாலு சுத்துச் சுத்தினால்தான் அந்தக் காய்ச்சல் விடும். 'மனோகரா' படத்தின் மொத்த வசனத்தையும் அப்படியே பேசுவாராம். அப்போது, சாலிகிராமத்திலிருந்து மெரினாவுக்கு தினமும் சைக்கிளில் வந்து பல்டி அடித்து பிராக்டீஸ் செய்வாராம். இடையில் எப்போதாவது பஞ்சர் ஆனால் பஞ்சர் பார்க்கக் கையில் காசிருக்காது. 12 கிலோமீட்டர் தள்ளிக்கொண்டே பலமுறை வீட்டுக்குப் போயிருக்கிறாராம். 

திரைத்துறைக்குள் தலைகாட்டுவதற்கு முன்பு சின்னச் சின்ன வேலைகள் பார்த்திருக்கிறார். யாருமே அவ்வளவு எளிதில் நுழையமுடியாத ஏ.வி.எம் ஸ்டூடியோவுக்கு உள்ளே செல்ல என்ன வழி என யோசித்தவர் ஏ.வி.எம்மிலேயே மூன்று வருடங்கள் கார்பென்டராகவும் வேலை பார்த்திருக்கிறார். 1990-ல் சென்னைக்கு வந்தவர் ஏழு வருடங்கள் போராட்டத்துக்குப் பிறகு, யூனியனில் ஃபைட்டர் ஆகச் சேர்ந்தார். ஸ்டன்ட் யூனியனில் உறுப்பினராகச் சேருவது சாதாரண விஷயம் இல்லை. அப்போதே ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் கட்டவேண்டுமாம். பல இடங்களிலும் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு எதற்கும் துணிந்தவராக பணத்தைக் கட்டி உறுப்பினரானார். 

பணத்தைக் கட்டி முடித்துவிட்டு வெளியே வரும்போது ஸ்டன்ட் சிவா அழைத்து, 'காதலுக்கு மரியாதை' படத்தில் பணியாற்றச் சேர்த்திருக்கிறார். முதல் படத்திற்கே டெபாஸிட் கட்டியதில் நான்கில் ஒரு பங்கு  சம்பளமாகக் கிடைத்திருக்கிறது. 'பொன்மனம்' படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் நடிக்கவேண்டியிருந்திருக்கிறது. தவிர்க்க இயலாத காரணத்தால் அவர் வர இயலாமல் போக, அந்த இடத்தில் யாராவது ஒரு மாஸ்டர் நடிக்கவேண்டும். டைரக்டர் எஸ்.பி.ராஜ்குமார் என்ன நினைத்தாரோ என்னவோ இவரைத் தேர்ந்தெடுத்தார். மூன்று நாள்கள் ஷூட்டிங் சிறப்பாக முடிந்தது. 

'நீயும் நானும் ஒண்ணா திருப்பரங்குன்றம் மலையில இருந்து குதிச்சு செத்துப்போனோமே... ஞாபகம் இல்ல..? 

'செத்துச் செத்து விளையாடுவோமா...’ என வடிவேலுவோடு சேர்ந்து காமெடி பண்ணியதுதான் இவரது விசிட்டிங் கார்டு.

'என் புருஷன் குழந்தை மாதிரி' படத்தின் இந்த காமெடிக் காட்சியும், அந்த ஊரில் இருக்கும் தெருக்கள் பூராம் விரட்டிக் காதைத் தொடும் காமெடியையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா..? 250 படங்களுக்கு மேல் நடிப்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 100 படங்களுக்கு மேல் ஸ்டன்ட் கலைஞர். ரஜினி முதல் லேட்டஸ்ட் ஹீரோக்கள் வரை உச்ச நட்சத்திரங்களின் படங்களில் வேலைபார்த்து சினிமாச் சண்டை கற்றுக்கொண்டவர். 

'கண்டேன்' படத்தில் ஒரு காட்சியின் படப்பிடிப்பு. சாந்தனுவும் சந்தானமும் முத்துக்காளையைத் துரத்திக்கொண்டு வருவார்கள். அவர்களிடமிருந்து தப்பித்துப் பாலத்திலிருந்து ஒரு குட்டையின் சகதிக்குள் விழுவதுபோல ஒரு காட்சி. செட் போட்டுக் குதிக்கலாம் என இன்னொரு வாய்ப்பு இருந்தாலும் இவர் ரிஸ்க் எடுத்தார். ஆனால், இதில் ஒரே டேக்கில் ஓகே ஆகவேண்டும். இல்லையெனில் சகதியைக் கழுவிவிட்டு மீண்டும் வர அதிக நேரம் பிடிக்கும். யோசிக்காமல் சகதிக்குள் குதித்தார். டேக் ஓகே! அதன்பின் கண்ணில் மண் உறுத்த, பிறகு கண்ணில் ஆபரேஷன் நடந்ததெல்லாம் தனிக்கதை. ஏதோ ஒரு காட்சியிலாவது ஃபைட்டிங் திறமையைக் காட்டி 'ஃபைட் மாஸ்டர்’ ஆகவேண்டும் என்பதுதான் ஆசையாம். 

எவ்வளவு லென்த்தாக டயலாக் கொடுத்தாலும் சரி... அவரிடம் இயக்குநர் எதிர்பார்ப்பதை நடித்துவிட்டுத்தான் ஃப்ரேமை விட்டு வெளியே வருவார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என எல்லோருடனும் நடித்திருக்கிறார். 'பம்மல் கே. சம்மந்தம்' படத்தில் கமல் இவரது வயிற்றில் மிதித்து ஓடியிருக்கிறார். விஜயகாந்த் படத்தில் நடித்தவர் இப்போது அவரது மகன் சண்முகபாண்டியன் உடன் 'சகாப்தம்' வரையிலும் நடித்துவிட்டார். காமெடியனுக்கும், ஸ்டண்ட் மாஸ்டருக்கும் டைமிங் மிக முக்கியம். அது இரண்டிலும் பட்டையைக் கிளப்புவது இவர், மொட்டை ராஜேந்திரன் போன்ற வெகுசிலருக்குத்தான் வாய்த்திருக்கிறது. 

பறக்குறதும், உடைக்கிறதும்தான் வாழ்க்கை என்றானபிறகு, கிருட்டுக் கிருட்டுனு பறந்து சுக்குநூறா உடைச்சு எறிஞ்சுட வேண்டியதுதான். 

- இன்னும் ஓடலாம்...

முந்தைய பாகங்களை வாசிக்க இந்தப் படங்களை க்ளிக் செய்யவும்...

 
 

...

விக்னேஷ் செ

Journalist | Freelance Writer | அடர்வனத்தின் பசுமையை வேர்வரை அப்பிக்கொள்ளப் பிரயத்தனப்படுகிற சிறுசெடி நான்!
சொ.பாலசுப்ரமணியன்