Published:Updated:

'ஜட்டி ஜகன்நாதன்னு கூப்பிட்டா திரும்பிப் பார்க்கிறான்' கிங்ஸ் ஆஃப் காமெடி ஆத்தீஷின் சேட்டை!

வி.எஸ்.சரவணன்
'ஜட்டி ஜகன்நாதன்னு கூப்பிட்டா திரும்பிப் பார்க்கிறான்' கிங்ஸ் ஆஃப் காமெடி ஆத்தீஷின் சேட்டை!
'ஜட்டி ஜகன்நாதன்னு கூப்பிட்டா திரும்பிப் பார்க்கிறான்' கிங்ஸ் ஆஃப் காமெடி ஆத்தீஷின் சேட்டை!

விஜய் டிவியின் 'கிங்ஸ் ஆஃப் காமெடி' நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் மத்தியில் 'ஜட்டி ஜகன்நாதன்' ரொம்ப ஃபேமஸ். அவனின் உண்மையான பெயர் என்னவென்று பலருக்குத் தெரியாது. ஜட்டி ஜகன்நாதன் எனும் ஆத்தீஷ் மழலைத் தமிழில் பேசி, சிரிக்க வைப்பதில் கில்லாடி. சென்னை, திருவொற்றியூர், ஶ்ரீ சங்கரா வித்யா கேந்திராலயா பள்ளியில் முதல் வகுப்புப் படிக்கிறார். படப்பிடிப்பின்போது யார் நடித்துகொண்டிருந்தாலும் விசிலடித்து உற்சாகப்படுத்துவது ஆத்திஷின் இயல்பு.  ஊரே கொண்டாடும் ஆத்தீஷின் அம்மா வசந்தியிடம் பேசினோம்.

 "வீட்டுல ஒரு நிமிஷம்கூடச் சும்மா இருக்க மாட்டான். துறுதுறுனு ஏதாச்சும் செஞ்சிட்டே இருப்பான். டி.வியில வரும் பாட்டுல ஆடுறவங்க மாதிரியே ஆடுவான். சொந்தகாரங்க வீட்டுக்குப் போனாலும் ஆட்டம் பாட்டம்தான். அவங்க ஏதாச்சும் ஒரு பாட்டச் சொல்லி ஆடச் சொன்னா, கூச்சப்படாம ஆடுவான். அதுவும் டி.ராஜேந்தர் மாதிரி ஆடுறதுன்னா ரொம்பப் பிடிக்கும் அவனுக்கு. போன வருஷம் அக்டோபர் மாசம் விஜய் டிவியில ஆடிஷன் நடக்குதுனு கேள்விபட்டோம். சரி, சும்மாதான் போய்ப் பார்ப்போமேனு வந்தோம்.

ஆடிசனுக்கு நிறையப் பேரு வந்திருந்தாங்க. அவங்ககூடப் போட்டிப்போட்டு செலக்ட் ஆயிட்டான். அதுக்கப்பறம் அந்த நிகழ்ச்சியோடு உதவி இயக்குநருங்க பார்த்துகிட்டாங்க. ஜட்ஜஸ் கொடுக்குற மார்க், கமென்ட் பத்தியெல்லாம் அவனுக்கு எதுவும் தெரியல. குழந்தை மனசைக் கலைக்க வேணாம்னு நானும் அதையெல்லாம் விளக்கமா சொல்றது இல்ல. என்ன செய்யச் சொல்றாங்களோ அதைக் குறையில்லாம செஞ்சுடுவான். என்னைக்காவது டயலாக்கை மறந்துட்டான்னா வீட்டுக்கு வந்து அதைச் சொல்லிப் பார்ப்பான்.

ஷூட்டிங் போறதுன்னா குஷியா கிளம்பிடுவான். எலிமனேசன்னா என்னனு தெரியல. ஒழுங்க நடிக்கலன்னா, அடுத்த வாரம் கூப்பிட்ட மாட்டாங்கனு சொல்வேன். இல்லம்மா நான் நல்லா பண்ணுவேனு சொல்வான். செட்ல எல்லோருக்கும் செல்லம். டிரெஸ்ஸிங் ரூம்ல எப்பவுமே ஆட்டம்தான். பொண்ணுங்க கூட ஆடுறதைப் பார்த்தா, 'ஏய் நாங்கலெல்லாம் இருக்கோம், எங்ககூட ஆட மாட்டியா'னு மத்த பசங்க எல்லாம் கிண்டல் செய்வாங்க.

இப்பெல்லாம் எங்காவது வெளியே போனால், அடையாளம் கண்டுபிடிச்சு நிறையப் பேரு பேசறாங்க, சூப்பரா பண்றனு பாராட்டுறாங்க, செல்ஃபி எடுத்துக்கிறாங்க. இதையெல்லாம் பார்க்கிறப்ப சந்தோஷமா இருக்கு. ஸ்கூல்ல ஆத்தீஷ்க்கு தனி மரியாதைதான். அவனோட ஃப்ரெண்ட்ஸ்ங்க அப்பா, அம்மாவெல்லாம் பாராட்டி, உற்சாகப்படுத்துவாங்க. அதுல பல பேருக்கு இவன் உண்மையான பேரே தெரியாது. ஜட்டி, ஜட்டினுதான் கூப்பிடுவாங்க. அப்படிக் கூப்பிடறதைப் பத்தி கவலைப் பட மாட்டான். நாம நடிச்சதுக்கான பாராட்டத்தான் நினைக்கிறான். ஆத்தீஷ்னு கூப்பிட்டால் எப்படி டக்னு ரிப்ளைப் பண்ணுவானோ அதுபோலவே ஜட்டி ஜகன்நாதன்னு கூப்பிட்டாலும் திரும்பிப் பார்க்கிறான்.

எல்லோருக்கும் விதவிதமா ட்ரெஸ் கொடுக்கிறாங்க. எனக்கு மட்டும் ஏன் அப்படி டிரெஸ் கொடுக்க மாட்டேங்கிறாங்க? ஆத்தீஷ் இந்த விஷயத்தை மட்டும் அடிக்கடி கேட்பான். நானும் அடுத்த வாரம் கொடுப்பாங்கடானு சொல்லிட்டே இருக்கேன். ஆனா, இந்த ஸ்டைலே  அவனோட அடையாளமாயிடுச்சு. அதுதான் சினிமா சான்ஸூம் வாங்கித் தந்திருக்கு.

அன்னைக்கு வழக்கம்போல, ஆத்தீஷ் பெர்மான்ஸ் முடிச்சதும் கமென்ட் சொன்ன ரோபோ சங்கர் சார், ஆத்திஷ்க்கு சினிமா சான்ஸ் கிடைச்சிருக்கிறதை அறிவிச்சப்ப, என்னோட சந்தோஷத்துக்கு அளவே இல்ல. என்ன படம், யார் கூட நடிக்கணும்... அவங்ககிட்ட எதையுமே நான் கேட்கல. இப்படி ஒரு சான்ஸ் வாங்கித்தந்ததே பெரிய விஷயம். அவங்க சொல்லும்போது கேட்டுக்கலாம்னு இருக்கேன். வீட்டுக்குள்ள அவன் பண்ணுன சேட்டைங்கள, இப்ப உலகமே ரசிக்குது" என்று மகிழ்ச்சிப் பொங்க சொல்கிறார் வசந்தி.

கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சி நடுவர்கள், ரசிகர்கள் பாராட்டைப் பெற்ற 'ஜட்டி ஜகன்நாதன்' ஆத்தீஷின் பயணம் இன்னும் சிறப்பாக அமையட்டும்.
 

வி.எஸ்.சரவணன்