Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சச்சின் முதல் பேபி டிரைவர் வரை... மிஸ் பண்ணக் கூடாத பாலிவுட், ஹாலிவுட் படங்கள்!

கவனிக்கும்படியான படங்கள், அறிமுக இயக்குநர்களின் படங்கள் என, கடந்த ஆறுமாதங்களில் தமிழில் பல படங்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழ் போன்றே மற்ற மொழிகளிலும் எக்கச்சக்கப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் எதெல்லம் தவறவிடக்கூடாது என்ற லிஸ்ட் இதோ...

ஹாலிவுட்

ஸ்ப்லிட்:

ஒரே மனிதனுக்குள் இருக்கும் வெவ்வேறு நபர்கள் அல்லது ஆளுமைகள். இந்த பாதிப்பு உள்ளவன்தான் படத்தின் நாயகன் கெவின் வென்டல் க்ரம்ப். பளிச்செனப் புரியும் படி சொன்னால், அந்நியன் விக்ரம் போன்று. அந்நியனில் விக்ரமே மூன்று பேராய் நடந்து கொள்வது போல இதில் கெவின் இருபத்தி மூன்று பேராய் நடந்து கொள்ளும் பாதிப்பு கொண்டவன். இந்த ப்ளாட்டை மையமாக வைத்து வந்த படம் ஸ்ப்லிட். ஜேம்ஸ் மெகாவாயின் நடிப்பு மிரட்டும். படம் புதுவிதமான அனுபவத்தைத் தரும்.

லோகன்:

படங்கள்

வுல்வரின் கதாபாத்திரத்திற்கான செம சென்ட் ஆஃப் படம் லோகன். எக்ஸ் - மேன் சீரிஸில் பலருக்கும் பிடித்தது ஹூ ஜேக்மேன் நடித்த வுல்வரின் பாத்திரம். அவரின் எமோஷனல் பக்கங்களைப் புரட்டும்படியாக அமைக்கப்பட்டிருந்தது படத்தின் கதை. வுல்வரின், அவனது டி.என்.ஏவிலிருந்து உருவாக்கப்பட்ட மியூட்டென்ட்டான லௌரா மற்றும் அவள் போலவே மியூட்டன்ட்களாக உருவாக்கப்பட்ட குழந்தைகளை எப்படி பத்திரமாக ஈடனுக்கு அனுப்புகிறான் என்பதே கதை. படத்தில் ஹூ ஜேக்மேனையே தூக்கி சாப்பிடும் பெர்ஃபாமென்ஸ் தந்து மிரட்டியிருப்பார் லௌராவாக நடித்திருந்த டேஃப்னி கீன். 

ஃபார்ஸ்ட் அண்டு ஃப்யூரியஸ்:

சைஃபர்  என்ற டெக்கி வில்லியின் பிடியில் சிக்குகிறார் டோம்னிக்காக நடித்திருக்கும் வின் டீசல். அவள் சொல்லும் வேலையை முடிக்க வேண்டும் எனக் கட்டளை இடுகிறாள். அவளுக்காக தன் நண்பர்கள், காதலி என அனைவரையும் பகைத்துக் கொண்டு அவர்களிடமே மோதுகிறான். அவள் பேச்சை எதற்காக வின் டீசல் கேட்கிறார், கடைசியில் தன் டீமோடு மீண்டும் இணைந்து எதிரியை பழி வாங்குகிறாரா என்ற சேஸ் ரேஸ் கதைதான். முந்தைய பாகங்கள் போல கார்கள் பறக்கிறது, அதிரடி சேஸிங் நடக்கிறது என பக்கா என்டெர்டெய்னர். 

வொண்டர் வுமன்:

மனிதர்களின் பார்வையில் இருந்து விலகி, தெமிஸ்கீரா தீவில் வாழ்கிறார்கள் அமேசான்ஸ். ஆரீஸை அழிப்பது மட்டுமே, தன் நோக்கமாகக் கொண்டு வளர்கிறாள் இளவரசி டயானா (கேல் கேடாட்). அங்கு இருக்கும் ஆயுதங்களால் தான் ஆரீஸை அழிக்க முடியும் என உறுதியாக நம்புகிறாள். ஜெர்மன் படையிடமிருந்து தப்பிவரும் ஸ்டீவை காப்பாற்றி, ஒருகட்டத்தில் அவனுடன் தெமிஸ்கீரா தீவில் இருந்து கிளம்பி நகரத்துக்குப் போக வேண்டியதாகிறது. பின்பு அவள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? ஆரீஸை அழித்தாளா என்பதுதான் கதை. படம் முழுக்க வொண்டர் வுமனாக அசத்தியிருப்பார் கேல் கேடாட்.

பேபி டிரைவர்:

ஒயிட் காலர் வில்லன் டாக்கிடம் டிரைவராக வேலை செய்கிறார் பேபி. சிறுவயதில் பேபிக்கு ஏற்படும் ஒரு விபத்தால், அவனுக்கு காது இரைச்சல் `டின்னிடஸ்' (tinnitus) ஏற்படுகிறது. ஒவ்வொரு திருட்டுக்கும் தன் டீமை மாற்றிக்கொண்டே வருகிறார் டாக். ஆனால், காரின் டிரைவர் மட்டும் எப்போதுமே பேபிதான். இந்த திருட்டு கும்பலில் போலீஸிடம் யார் சிக்கினார்கள்; யார் தப்பினார்கள் என்பதை அதிரடி வேகத்தில் இசையுடன் சொல்லியிருக்கிறது `பேபி டிரைவர்'. படத்தின் சவுண்ட் டிசைனிங், நரேட்டிவ் ஸ்டைல் என ஹாலிவுட்டே கொண்டாடித்தீர்த்திருக்கிறது படத்தை. 

பாலிவுட்

ட்ராப்டு:

மும்பையில் வசிக்கும் மிடில் க்ளாஸ் இளைஞன் சொரியா. அவனுக்கு உடன் பணிபுரியும் நூருடன் காதல். நமக்குன்னு ஒரு வீடு வேணும் என காதலி கண்டிஷன் போட ஒரு அபார்ட்மென்ட்டில், 35 வது மாடியில் ஒரு பிளாட்டை, ஒரே நாளில் வாடகைக்கு பிடிக்கிறான். மாநகராட்சியின் முழு அனுமதி கிடைக்காததால், அந்த அப்பார்ட்மென்டில் ஒருவர்கூட வசிக்கவில்லை. இவர் மட்டுமே அந்த பிளாட்டில் குடியேறுகிறார். மறுநாள் காலை, வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்ல எத்தனிக்கும் போது, எதிர்பாராத விதமாக காற்றடித்து, சாவியுடன் இருக்கும் கதவு வெளிப்புறமாக மூடிவிட, உள்ளே மாட்டிக் கொள்கிறான் சௌரியா. பிறகு என்ன ஆகிறது சௌரியா வெளியேறினானா என்பதுதான் ட்ராப்டு படத்தின் கதை.

பூர்ணா:

தெலுங்கானா பகுதியில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி பூர்ணா. பூர்ணாவின் திறமை, படிப்பு எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவளின் திருமணத்திற்காக பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறார் பூர்ணாவின் தந்தை. அந்த ஊருக்கு வரும் ஐபிஎஸ் அதிகாரி பூர்ணாவின் மலை ஏறும் திறமையை அடையாளம் கண்டு அதை ஊக்குவிக்கிறார். கிராமம் தாண்டவே சிரமப்படும் சிறுமி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய நிஜ சம்பவத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் ராகுல் போஸ். திரைவிழாக்களிலும், விமர்சன ரீதியிலும் பலப் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது படம்.

இந்தி மீடியம்:

மிட்டா மற்றும் ராஜ் பத்ரா தம்பதி அவர்களது மகள் ப்ரியாயுடன் டெல்லியின் சாந்தினி சௌக் பகுதிக்கு வருகிறார்கள். மகளை இங்லிஷ் மீடியம் பள்ளியில் சேர்ப்பதுதான் தங்கள் நிலையை மேம்படுத்தும் முதல் அடியாக நினைக்கிறார்கள். அவர்கள் செல்லும் அந்தப் பிரபலமான பள்ளியில் இந்தி பேசும் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. அதன் பின் நடக்கும் சட்டையரிகல் காமெடிதான் படம். கல்விமுறையின் குறைபாடுகள் பற்றி பிரம்பால் அடித்தபடி சுட்டிக் காட்டும் படம் பலத்த வரவேற்பு பெற்றது.

எ டெத் இன் த கன்ஜ்:

பீகாரில் இருக்கும் மக்கல்ஸ்கீகஞ் என்ற காட்டுக்குள் உள்ள வீட்டிற்கு, ஒரு குழு செல்கிறது. புது வருடத்தை அங்கு கொண்டாடுவது அவர்கள் திட்டம். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடம், ஒரு கணவன் மனைவி, ஒரு சிறுமி, கணவனின் நண்பர்கள், ஒரு பெண், தந்தையை சமீபத்தில் இழந்த ஒரு இளைஞன், புத்தாண்டு கொண்டாட்டம், ஒரு கொலை இவைதான் படம். நடிகை கம் இயக்குநர் கொங்கனா சென் சர்மாவிடமிருந்து இப்படி ஒரு படமா என பாலிவுட்டே மிரண்டு நின்றது. படம் பேசியிருந்த நுட்பமான உணர்வு சார்ந்த விஷயம் மிக அழுத்தமான ஒன்று.

சச்சின்:

ஆவணப்படம்தான் என்றாலும் தவிர்க்கவே முடியாத பதிவு இந்த 'சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்.’ சச்சின் டெண்டுல்கர் என்ற கிரிக்கெட் ஜாம்பவானின் வாழ்க்கை. பாட்டி சொல்லும் கதைகளைப் போல, 'ஒரு ஊர்ல ஒரு சச்சின்...' பாணியில் தொடங்கும் கதையைக் கேட்க ஸாரி... பார்க்கத் தொடங்கினால், படம் முடியும்போது, 'ஒரு ஊர்ல ஒரு சச்சின்' அல்ல 'ஒரே ஒரு சச்சின்தான்!' என கிரிக்கெட் ரசிகர்களுக்குச் சிலிர்க்கும்!  இது சச்சினின் சுயசரிதை!

மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களின் பட்டியல் நாளை...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்