Published:Updated:

“படத்துல நடிக்கிறியானு கேட்டதுக்கு எகத்தாளமா பார்த்தேன்!” - ‘சுப்ரமணியபுரம்’ டும்கான் கலகல

தார்மிக் லீ
“படத்துல நடிக்கிறியானு கேட்டதுக்கு எகத்தாளமா பார்த்தேன்!” - ‘சுப்ரமணியபுரம்’ டும்கான் கலகல
“படத்துல நடிக்கிறியானு கேட்டதுக்கு எகத்தாளமா பார்த்தேன்!” - ‘சுப்ரமணியபுரம்’ டும்கான் கலகல

தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத படங்களின் பட்டியலில் ‘சுப்ரமணியபுரம்' படத்துக்கு எப்போதுமே முக்கிய இடமுண்டு. அந்தப் படம் வெளிவந்து 9 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. அதே படத்தில், கதையின் போக்கைச் சொல்கிற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் மாரி. அவர் 'டுமுக்கான்' என்ற ரோலை ஏற்று நடித்திருந்தார். படத்தைப் பற்றிப் பேசியதும், சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்தார்.

''வழக்கம்போல நான் டீக்கடைக்கு டீ குடிக்கப் போயிருந்தேன். அப்ப மூணு பேர் என்கிட்ட வந்து 'என்ன தம்பி பண்ற?'னு கேட்டாங்க. நான் 'செல்லூர்ல இருக்குற மைக்செட் கடையில வேலை பாக்குறேன், என்ன விஷயம்'னு கொஞ்சம் எகத்தாளமா கேட்டேன். 'இல்லப்பா ஒரு படத்துல நடிக்குறதுக்கு ஆள் தேடிட்டு இருக்கோம், நீ நடிக்க வர்றியா?'னு கேட்டாங்க. எனக்கு இது புதுசாவும், பயமாவும் இருந்துச்சு. 'என்னடா இது... நாம படத்தைப் பார்த்து கை தானே தட்டுவோம்'னு நெனைச்சுக்கிட்டு கொஞ்சம் தயக்கத்தோட 'சரி பண்றேன்'னு சொல்லிட்டேன். ரெண்டு, மூணு போட்டோ எடுத்தாங்க. 'போன் பண்ணி உனக்கு சொல்றேன் தம்பி'னு போயிட்டாங்க. நானும் என் வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். ஒருநாள் திடீர்னு போன் பண்ணி நடிக்கக் கூப்பிட்டாங்க, திண்டுக்கல்லுலதான் ஷூட்டிங் ஆரம்பிச்சது. 

எனக்கு ரொம்பச் சின்ன ரோலாதான் இருக்கும்னு நெனைச்சுக்கிட்டு நானும் நடிக்க ஆரம்பிச்சேன். அதுல ஒரு பெட்டிக்கடை பக்கத்துல ஒரு சண்டைக்காட்சி வரும். அதுக்காக நான், சசி அண்ணன், ஜெய் அண்ணன் மூணு பேரும் பேசிக்கிட்டு இருந்தோம். அன்னைக்கு கஞ்சா கருப்பு சார் ஏதோ வேலைன்னு வரலை. சசி அண்ணன் என்கிட்ட யதார்த்தமா, 'என்ன மாரி நம்ம மூணு பேர்தான் இருக்கோம். ஒரு பத்துப் பேர் நம்மள அடிக்கப் போறாங்க, அடிச்சுருவோமா?'னு கேட்டார். நான் 'அட விடுண்ணே பாத்துக்குவோம், எத்தனை பேர் வந்தாலும் அடிச்சு நொறுக்கிவிடுவோம்... நீ எதுக்கும் பயப்படாதண்ணே'னு சொன்னேன். சசி அண்ணே சிரிச்சுக்கிட்டே போய் தினேஷ் மாஸ்டர்கிட்ட தம்பி 'என்ன இப்படி சொல்றாரு... என்ன பண்ணலாம்னு கேட்டார்.' என்கிட்ட 'என்னடா தம்பி அப்படியா சொன்ன?'னு தினேஷ் மாஸ்டர் கேட்டார். 'ஆமாண்ணே யார் வந்தா என்ன பார்த்துக்கலாம்'னு சொன்னேன். எனக்கு அந்த அனுபவம் ரொம்ப புதுசா இருந்துச்சு. அப்புறம்தான் அந்த ஃபைட் சீன் ஷூட்டிங் நடந்துச்சு.

அப்புறம் கஞ்சா கருப்பு சாரோட ''ஒன்னய நம்பி ஒத்த பீடி கடன் கொடுப்பானா'ங்கிற காமெடி டயலாக் எல்லாருக்குமே பிடிக்கும். எனக்கும் அது ரொம்பப் பிடிச்ச காமெடி. பொதுவா நான் படங்கள்ல நடிக்கிறதுக்கு முன்னாடி வீட்ல பேசும்போதே கோவம் வந்துட்டா 'இந்தக் கால வெச்சுக்கிட்டு நானே சம்பாதிக்கனும்னு நினைக்கிறேன்... உங்களுக்கு எல்லாம் என்னடா கேடு?', 'எனக்கெல்லாம் கால் நல்லாயிருந்தா உங்களையெல்லாம் உட்கார வெச்சுச் சோறு போடுவேன்'னு நிறையவாட்டி சொல்லியிருக்கேன். இதையெல்லாம் சசி அண்ணன் கிட்ட சும்மா ஜாலியா பேசிக்கிட்டு இருக்கும்போது சொல்லியிருக்கேன். நான் பேசுனது எல்லாம் படத்துலேயும் வந்துச்சு. அது எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. 

படம் வெளிவந்ததுக்கு அப்புறம் எனக்குக் கொஞ்சம் பயமா இருந்துச்சு. சரி, ஒரு ரெண்டு சீன்ல வருவேன்னு நினைச்சேன். ஆனா படத்தைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. ஏன்னா படத்தோட க்ளைமாக்ஸ்ல கிட்டத்தட்ட என்னையத்தான் ஹீரோ மாதிரி காட்டியிருப்பாங்க. எனக்கு அந்த சீன்கள்ல நடிக்கும்போது எதுவுமே தெரியாது. ஷூட்டிங்குக்கு முன்னாடி என்கிட்ட 'நீ இதை மட்டும் பண்ணு மாரி... இந்த சீன்தான் உன்னை எங்கயோ கொண்டு போக போகுது'னு சொல்லி நடிக்க வெச்சாங்க. ஆனா அதையெல்லாம் படமா பார்க்கும்போது என்னால நம்பவே முடியல. அந்த அளவுக்கு சிறப்பா வந்துச்சு. இந்த அளவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்த சசி அண்ணனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. அவர் பெயரைத்தான் நான் பச்சை குத்தியிருக்கேன்.

சினிமாவுல காசு பார்க்க நான் நடிக்க வரலை. இதை நான் ஒரு கலையாதான் பார்க்குறேன். 'கொடிவீரன்', 'பொதுவாக என் மனசு தங்கம்', 'திட்டமிட்டபடி', 'கண்டுபிடி கண்டுபிடி'னு இப்போ சில படங்கள்ல நடிச்சிக்கிட்டு இருக்கேன். நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன்.'' எனப் பரவசத்தோடு சொல்லி முடித்தார் டுமுக்கான்.

தார்மிக் லீ