Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

ப்ரொடக்‌ஷன் யூனிட் பழனிச்சாமி டு நடிகர் சிசர் மனோகர்! - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 14

கோடம்பாக்கம் தேடி..! - 14

முந்தைய பாகத்தை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

வ்வொரு சினிமாவும் ரசிகர்களின் ஆரவாரத்தோடு தியேட்டர் ஸ்கிரீனில் வெளியாவதற்குப் பின்னால் இருப்பது ஓரிருவர் மட்டுமல்ல. திரையில் தோன்றுகிற நடிகர்கள் தொடங்கி, இயக்குநர், வசனகர்த்தா, ஒளிப்பதிவாளர், லைட்மேன், மேக்கப்மேன்... ப்ரொடக்‌ஷன் யூனிட்டில் இருப்பவர்கள் என ஒரு பெரிய குழுவின் மகத்தான முயற்சியில்தான் ஒரு கதை முழு சினிமாவாகிறது. சினிமாவின் ஏதாவது ஒரு காட்சிக்கு டயலாக் ஆர்டிஸ்ட் தேவையென்றால்  யூனிட்டில் இருக்கும் யாரையாவது நடிக்க வைப்பார்கள். அப்படி, ப்ரொடக்‌ஷன் யூனிட்டில் இருந்தவர் எதிர்பாராவிதமாகத் தலைகாட்டி, நடிகராக வளர்ந்த கதை இது. 

இவர் சிவகங்கை மாவட்டத்தின் இளையாத்தாங்குடிப் பக்கமிருந்து பதினைந்து ரூபாயோடு சென்னைக்கு வந்தவர். ஆறாவது படிக்கும்போதே மூணு வருஷம் ஃபெயிலானவருக்கு, சுட்டுப்போட்டாலும் படிப்பு ஏறலை. வீட்டுல கூடப்பொறந்தவங்க ஆறு பேரு. அம்மா எப்படியாவது கஷ்டப்பட்டுப் படிக்கச்சொல்ல, அப்பா ஆடு மாடு மேய்க்கச் சொல்லியிருக்கார். ஜல்லிக்கட்டுப் பிரியரான அப்பாவுக்கு, இவர் ஆடு மேய்ச்சிக்கிட்டா ஜல்லிக்கட்டுப் பார்க்கப் போலாம்ங்கிற பிரயாசை. சென்னைக்குப் போன உறவினரோடு சேர்ந்து பஸ் ஏறிவிட்டார். 

தி.நகரில் அண்ணன் சுப்பையா நடத்திய பால் நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்து, வீடு வீடாகப் பால் ஊற்றியிருக்கிறார். அண்ணனின் அறிவுறுத்தலின் பேரில், தெலுங்குப்பட இயக்குநர் ஒருவரின் வீட்டில் வீட்டு வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். மூன்று சட்டை-ட்ரவுசர்களோடு போனவர், அங்கே வேலை பிடிக்காமல் 'அண்ணனைப் பார்த்துட்டு வர்றேன்' எனச் சொல்லிவிட்டு மூன்று உடைகளையும் ஒன்றின்மேல் ஒன்றாக அணிந்துகொண்டு மஞ்சள் பையை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். அண்ணனிடம் வந்து, 'பாத்ரூம் எல்லாம் கழுவச் சொல்றாங்க. அங்க வேணாம்...' எனச் சொல்ல, அவரும், எல்.ஐ.சிக்குப் பக்கத்தில் ஒரு ஓட்டலில் வேலைக்குச் சேர்த்து விட்டிருக்கிறார். ஊரில் இருக்கும்போது ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டுத் தூங்கும் பழக்கம் இருந்ததால் வேலை நேரங்களில் தூக்கம் சொக்க ஆரம்பித்துவிடுமாம். இங்கே, ஏழு மணிக்கு மேல்தான் வியாபாரம் தொடங்கிச் சூடுபிடிக்கும். அசறும் நேரங்களில் முதலாளியிடம் குட்டு வாங்கிக்கொண்டே இலை போட்டுத் தண்ணீர் ஊற்றுவாராம்.

ப்ரொடக்‌ஷன் யூனிட் பழனிச்சாமி

ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு ஒத்துவராமல் மஞ்சள்காமாலை வந்ததால் ஊருக்குப் போகவேண்டிய சூழல். ஊருக்குப் போய் மாதக்கணக்கில் தங்கி மஞ்சள்காமாலையை குணப்படுத்திவிட்டுத் திரும்ப வந்தவர் பாரீஸ் கார்னரில் ஒரு ஜெராக்ஸ் கடையில் ஆபிஸ் பாயாக வேலை பார்த்திருக்கிறார்.  40 ரூபாய் சம்பளம். இப்போதைப் போல அந்தக் காலகட்டத்தில் எல்லா இடங்களிலும் ஜெராக்ஸ் கடைகள் இல்லை. சென்னையிலேயே ஜெராக்ஸ் எடுக்க பாரிமுனைக்குத்தான் போகவேண்டும். அந்த ஜெராக்ஸ் கடையை வைத்திருந்த ராஜஸ்தான் சேட்டுக்குச் சொந்தமாகத் துணிக்கடை ஒன்றும் இருந்தது. அவர் சொன்னதற்காக வீடு வீடாகத் தவணை முறையில் துணி விற்றிருக்கிறார். 300 ரூபாய் கிடைத்திருக்கிறது. 'இது நல்லாருக்கே...' என யோசித்தவர் தீபாவளி நேரத்தில் ஒரு ஐயாயிரம் ரூபாய் மதிப்பிலான துணிகளை வாங்கி இப்படித் தவணை முறையில் விற்க ப்ளான் போட்டிருக்கிறார். 

ரோஹிணி லாட்ஜில் நிறைய சினிமாக்காரர்கள் இருப்பார்கள். அங்கே போனால் விற்றுவிடலாம் என நண்பர் சொன்னதால், அங்கே போய் வியாபாரத்தை ஆரம்பிக்க ஒரே நாளில் துணிகள் விற்றுத் தீர்ந்தன. தீபாவளி முடிந்து பணம் தருவதாகச் சொன்ன யாரும் தீபாவளி முடிந்தும் வரவில்லை. அடுத்தமாதம் பணத்தை வசூல் செய்ய ரோஹிணி லாட்ஜுக்குப் போக, அவர்களால் பணம் கொடுக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் பணத்தை வசூல் செய்வதற்காகவே அவர்களோடு சினிமா யூனிட்டில் பாத்திரம் கழுவும் வேலைக்குப் போயிருக்கிறார். அப்படியே சிலநாள்கள் போனாலும் இன்னும் பணத்தை வசூலித்தபாடில்லை. அதற்குள் சேட் வந்து, 'பணம் போனாலும் பரவாயில்லை; வேலைக்கு ஆள் வேணும்' என இவரைக் கையோடு கூட்டிப் போயிருக்கிறார். 

சிசர் மனோகர்

ஆனாலும் மனசு கேட்காமல், ஒரு இரண்டாயிரம் ரூபாயாவது வசூலித்து விடலாம் என மீண்டும் யூனிட்டுப் போய் வேலை பார்த்திருக்கிறார். குன்னக்குடி வைத்தியநாதன் டைரக்ஷனில் ‘ராக பந்தங்கள்‘ படம் உருவானது. மதுரையில் நடந்த ஷூட்டிங்கிற்குப் போய் பாத்திரம் கழுவும் வேலை பார்த்திருக்கிறார். அந்த நேரத்தில் சேட்டுக்கு ஹார்ட் அட்டாக் வர, உடனே சென்னைக்கு வந்து, அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துப் பார்த்திருக்கிறார். திடீரென ஒருநாள் அவர் இறக்க, கவலையோடு மறுபடியும் பாத்திரம் கழுவும் வேலைக்குப் போயிருக்கிறார். 

1980-ல் 'ஒரு கை ஓசை', 'மௌன கீதங்கள்' படங்களில் ப்ரொடக்‌ஷன் யூனியனில் உறுப்பினர் ஆகாமலேயே வேலை பார்த்திருக்கிறார். இன்னும் சில படங்களிலும் வேலை பார்த்துவிட்டு, பிறகு அலெக்ஸ் பாண்டியன், ‘புதிய வார்ப்புகள்‘ ரதி ஜோடியாக நடித்த ‘கருமையில் ஒரு அழகு‘ படத்தில், ரதிக்குத் தம்பியாக நடித்திருக்கிறார். அந்தப் படம் பாதியில் நின்றுபோக, முதலில் நடிச்ச படமே இப்படி ஊத்திக்கிச்சேன்னு கவலைப்பட்டவர் 1982-ல் ப்ரொடக்‌ஷன் யூனியனில் உறுப்பினராகி, சில படங்களில் ப்ரொடக்‌ஷன் உதவியாளராக வேலை பார்த்திருக்கிறார். பிறகு, 'பாண்டியராஜன் எடுத்த 'கன்னிராசி' படத்தில் ப்ரொடக்‌ஷன் சீஃப் ஆகச் சேர்ந்திருக்கிறார். இதுவரை முப்பது படங்களுக்கும் மேல் ப்ரொடக்‌ஷன் சீஃபாகவும், 150 படங்கள் ப்ரொடக்‌ஷன் உதவியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். 

இளையாத்தாங்குடி பழனிச்சாமி @ சிசர் மனோகர்

ராஜ்கிரண், கே.எஸ்.ரவிகுமாருக்கு நெருக்கமாகிவிட்டவர், ‘என் ராசாவின் மனசிலே‘, 'ராசாவே உன்னை நம்பி', 'எல்லாமே என் ராசாதான்', ‘அரண்மனை கிளி‘, ‘பெரிய குடும்பம்‘, ‘பரம்பரை‘, ‘அவ்வை சண்முகி‘ வரையிலும் எல்லாப் படங்களிலும் ப்ரொடக்‌ஷன் சீஃப் இவர்தான். மேலுரில் இருந்து சேரன் முதன்முதலாகச் சென்னைக்கு வந்ததும், 'ஆண்களை நம்பாதே' படத்தில் ப்ரொடக்‌ஷன் அசிஸ்டென்ட்டாக இவரோடு வேலை பார்த்தாராம். பிறகு பழனிச்சாமி, கே.எஸ்.ரவிக்குமாரிடம் பேசி 'புரியாத புதிர்' படத்தில் உதவி இயக்குநராகச் சேர்த்து விட்டிருக்கிறார். சேரன் இயக்கிய 'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்',  'தேசிய கீதம்' என எல்லாப் படங்களுக்கும் ப்ரொடக்‌ஷன் மேற்பார்வையாளராக பழனிச்சாமியே பணியாற்றியிருக்கிறார். 

அகத்தியன் இயக்கிய 'கோகுலத்தில் சீதை' படத்தில் பணியாற்றிய ப்ரொடக்‌ஷன் சீஃப்புக்கும் யூனிட்டுக்கும் ஒத்து வராததால் ஷூட்டிங் பாதிக்கப்பட, அதே கம்பெனிப் படம் என்பதால், இவர் அங்கே வேலைபார்க்கப் போயிருக்கிறார். இயக்குநர் சொன்னபடி, சுவலெட்சுமியும் கரணும் பேசிக்கொண்டிருக்கும்போது, சிகரெட் பிடித்தபடியே இடையில் புகுந்து 'என்ன ரூம் வேணுமா...' எனக் கேட்டு ஒறண்டையிழுத்துவிட்டு, 'மனோகர்... வெறும் மனோகர் இல்ல... சிசர் மனோகர். கேட்டாண்ட போய்க்கேட்டா எல்லோரும் சொல்லுவாங்க..' என சிகரெட் பாக்கெட்டை தட்டிக் காட்டிச் சொல்வார். அந்த வசனத்திற்கு டப்பிங் பேசியது வேறு ஒருவர். ஆனால், அந்த ஒற்றைக் காட்சிதான் இவரது பெயரை மாற்றியது... இவரது அடையாளத்தை மாற்றியது... வேலையை மாற்றியது. 

மனோகர்

'தர்மச் சக்கரம்' பட ஷூட்டிங்கிற்கு பொள்ளாச்சி போனதும், கே.எஸ்.ரவிகுமார்  'கோகுலத்தில் சீதை' படம் பார்த்துவிட்டு வந்து, பாராட்டிவிட்டு 'என் படத்துல ஒரு வெயிட்டான கேரக்டர் தர்றேன்டா' எனச் சொல்லியிருக்கிறார். தான் டப்பிங்கே பேசாத காட்சியால் ஒரு நடிகனின் பெயரும், அடையாளமும் மாறுகிறது. 1997ல் ‘துள்ளித் திரிந்த காலம்‘ படத்தில் இடம் பெற்ற வசனம் இன்னும் பரபரப்பு ஏற்படுத்தியது. ‘சிரிங்க... நல்லாச் சிரிங்கடா... இன்னும் மூணு வருஷம்... இன்னும் மூணே வருஷம்... பூமாதேவி சிரிக்கப்போறா... எல்லாரும் மண்ணோட மண்ணாகப் போறீங்க... ரெண்டாயிரத்துல உலகம் அழியப்போதுடா...‘ என்று சிங்கிள் ஷாட்டில், மூச்சுவிடாமல் சிசர் மனோகர் பேசிய வசனம், அவரை யாரென்று அடையாளம் காட்டியது.

விவேக் உடன் நடித்த, 'பல்லால மூக்கக் கடிப்பியா...' காமெடி, வடிவேலுவோடு இம்சை அரசன் 23-ஆம் புலிகேசியில் நடித்த  'தட்டாணுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்' வசனம் சொல்லும் காட்சி என காமெடி நடிகர்கள் அனைவரோடும் நினைவுகூரத்தக்க பல வசனங்கள் பேசினார். அதற்கிடையே, சன் டி.வி-யில் ஒரு அரசியல் நையாண்டி நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தியிருக்கிறார். முதல்வன் எடுக்கும்போது ஷங்கர் அழைத்து, 'படத்தில் ஒரு கேரக்டர் இருக்கு.. ஆனா மூணு பொண்ணுங்களுக்கு அப்பாவா நடிக்கணும். வயசு செட்டாகாதே' என இழுக்க, 'ஆஹா... வந்த வாய்ப்பு வாயோட போச்சே' என இவர் நினைக்க, பிறகு அழைத்து வேறொரு கேரக்டர் கொடுத்திருக்கிறார். அதுதான் அந்த பஸ் ட்ரைவர் கேரக்டர். ஒருமுறை சொன்னதே படத்தில் ஹைலைட்டான காட்சியாகத் திரும்பத் திரும்ப வரும். 

'ஏத்திருவியளோ... என்னை ஏத்திக் கொன்னுட்டா என் ஜாதிக்காரன் விட்ருவானா... தமிழ்நாடே பத்தி எரியும்..!'

மனோகர்

‘தேவர் மகன்’ பட ஷூட்டிங்கில் சிவாஜி சாருக்கு இவர்தான் ஹெல்ப்பர். நடுவுல கொஞ்சநாள் வேற வேலையாக இவர் பொள்ளாச்சிப் பக்கம் போய்விட ஷூட்டிங்கில் எரிச்சலான சிவாஜி, ‘பழனிப் பய வந்தாத்தான் சாப்பிடுவேன்’ எனச் சொல்லி அடம்பிடித்திருக்கிறார். அதுதான் 'இந்த சினிமா வாழ்க்கையில நம்ம மனசுக்கு இதமா இருக்குற சங்கதி' என்கிறார் சிசர் மனோகரான பழனிச்சாமி. 'இந்தப் படம் திருப்பமா அமையும், அந்தப் படம் திருப்பமா அமையும்கிற எதிர்பார்ப்பிலேயே வாழ்க்கை கடந்து கரைஞ்சு போய்க்கிட்டு இருக்கு. ஆனா, இதுவும் சுவாரஸ்யமாத்தான் இருக்கு' என்பவருக்கு இப்போதும் ஐந்தாறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துகொண்டுதாம் இருக்கின்றன.

 

"Go as long as you can, and then take another step." 

 

- இன்னும் ஓடலாம்...
 

முந்தைய பாகங்களை வாசிக்க இந்தப் படங்களை க்ளிக் செய்யவும்...

                        

...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement