Published:Updated:

“கிங்ஸ் ஆஃப் காமெடியின் ‘இளைய தளபதி’ நீதான்டா?” சுசீல் ஹேப்பி அண்ணாச்சி!

வி.எஸ்.சரவணன்
“கிங்ஸ் ஆஃப் காமெடியின் ‘இளைய தளபதி’ நீதான்டா?” சுசீல் ஹேப்பி அண்ணாச்சி!
“கிங்ஸ் ஆஃப் காமெடியின் ‘இளைய தளபதி’ நீதான்டா?” சுசீல் ஹேப்பி அண்ணாச்சி!

விஜய் டிவியின் 'கிங்ஸ் ஆஃப் காமெடி'யில் ஹீரோ கெட்டப்பில் வந்து கலக்கிக்கொண்டிருப்பவர் சுசீல். விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ், 'டைட்டானிக்' ஜாக், ''ரெமோ' நர்ஸ், 'சரவணன் மீனாட்சி' சரவணன், அவதார் எனப் பல்வேறு கேரக்டரில், அதற்கு ஏற்ற கெட்டப்பிலும் வந்து ஒவ்வொரு வாரமும் அசத்தி வரும் சுசீல் ஜோஸப் முதல் வகுப்பு படிக்கிறார். சுசீலின் அப்பா பாஸ்கரனோடு பேசினோம்.

“கிங்ஸ் ஆஃப் காமெடிக்கு முன் சுசீல் பற்றிச் சொல்லுங்க?”

“சுசீலுக்கு நடிக்கிறதுனா ரொம்பப் பிடிக்கும். 300-க்கும் அதிகமான டப்ஸ்மாஷ் பண்ணியிருக்கான். சினிமா பார்க்கிறதுனா சாப்பாடு, தூக்கத்தையே மறந்துடுவான். எல்லாத்தையும் உன்னிப்பா கவனிப்பான். ஜல்லிக்கட்டுப் போராட்டம் திருச்சியில நடந்தப்ப, தினமும் குடும்பத்தோடு அங்க போயிடுவோம். ஒரு சிலநாள் எங்களுக்கு டயர்டா இருக்குனு சொன்னாலும் சுசீல் போயே ஆகணும்னு சொல்லுவான். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்களை பேனரில் எழுதிப் பிடிச்சிருந்தான்.

விஜய் டிவியில காமெடி நிகழ்ச்சிக்காக ஆடிசன் நடக்குதுனு கேள்விப்பட்டுச் சுசீலை அழைச்சிட்டுப் போனோம். ஐந்தாறு முறை பெர்ஃபாமன்ஸ் பண்ணச் சொல்லிப் பார்த்தாங்க. சுசீல் டயலாக்கை மனப்பாடமாகப் பேசிடுவான். ஆனால், மாடுலேசனில்தான் கொஞ்சம் பிரச்னை இருந்துச்சு. உதவி இயக்குநருங்க சொல்லிக் கொடுத்ததை டக்னு பிடிச்சுகிட்டான்"

"நடிச்சா ஹீரோவாத்தான் நடிப்பேனு சுசீல் சொல்றாரா?"

"அப்படியெல்லாம் இல்ல. ஏதாச்சும் வித்தியாசமாகச் செய்யணும். ஹீரோவா நடிச்சப்ப ஜட்ஜஸ் சூப்பரா இருக்குனு பாராட்டினாங்க. அதனால அதையே தொடர்ந்து பண்றான். ஆத்தீஷோடு செய்யும் இன்னும் சூப்பரா நடிச்சான். ரெமோ படத்துல நர்ஸ் வேஷம் போட்டுட்டு வந்தப்பா நிறையப் பேரு பாராட்டினாங்க. இப்பக்கூட அவதார் கெட்டப்ல வந்தான். அந்த வாரம் ஸ்பெஷல் எபிஸோடு. அதனால, கலக்கப்போவது யாரு, 'சரவணன் மீனாட்சி' டீம்லேருந்து எல்லோரும் வந்திருந்தாங்க. நடிச்சி முடித்ததும் எல்லாரும் மேடைக்கு வந்து பாராட்டினாங்க. ஜட்ஜஸூம் எழுந்து நின்று கைத்தட்டினாங்க. ஈரோடு மகேஷ் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வாழ்த்தினாரு"

"நிகழ்ச்சியோட நடுவர்களுக்குச் சுசீல் ரொம்பவே ஸ்பெஷலாமே?"

"ஆமா, ரோபா சங்கர் சார் தர்ற 500 ரூபாய் கிஃப்ட் பணத்தை 10 முறை வாங்கியிருக்கான். துப்பாக்கி பட விஜய் மாதிரி நடிப்ப, 'இதுவரைக்கும் ஹீரோவா இருந்த சுசீல் இப்ப மாஸ் ஹீரோவாயிட்டான். அதுமட்டுமல்ல, நம்ம ஷோவோட இளைய தளபதி சுசீல்தான்'னு ரோபோ சங்கர் சொன்னப்ப, சுசீல் செம ஹேப்பியாயிட்டான். அன்னிக்கு வீட்டுக்கு வந்தப்பறம்கூட அதையே சொல்லிட்டு இருந்தான்"

"சுசீலுக்கு கிஃப்ட்டா கிடைக்கிற பணத்தை என்ன செய்வார்?"

"அன்னிக்கே டாய்ஸ் வாங்கணும்னு அடம்பிடிப்பான். ஆனா, சூட்டிங் முடியறதுக்குள்ள எல்லாக் கடைகளையும் சாத்திடுவாங்க இல்லையா. அடுத்த நாள் எழுந்தவுடனே கடைக்குக் கூப்பிடுவான். அவனுக்கு ஸ்பைடர் மேன்னா அவ்ளோ பிடிக்கும். அவன் உயரத்துக்கு ஒரு ஸ்பைடர் மேன் பொம்மை வெச்சிருக்கான்."

"நீங்க இருப்பது திருச்சி, எப்படி வாரந்தோறும் வந்துட்டு போறீங்க?"

"அதுல மட்டும்தான் சின்னச் சிக்கல். வாரத்துல மூணு நாள் சென்னையில இருக்கணும். அதனால சென்னையிலேயே வீடு ஒண்ணு வாடகைக்கு எடுத்துட்டோம். நான் கொண்டுபோய் விட்டுட்டு திருச்சிக்கு வந்துடுவேன். செட்டுக்கு அழைச்சிட்டு போறதுலேருந்து டயலாக் சொல்லிக்கொடுக்கிறது வரை எல்லாமே என் வொய்ஃப்தான்"

"சுசீலுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததா?"

"நிறையப் பேர் கூப்பிடுறாங்க. குறும்படங்களில் நடிச்ச அனுபவமும் இருக்கு. ஆனா, ஒரு மாசம் தொடர்ந்து சூட்டிங் வரணும்னு சொல்றாங்க. கிங்ஸ் ஆஃப் காமெடி சூட்டிங் இருக்கு, ஸ்கூலுக்கும் ஒரு மாசம் போகாமல் இருக்க முடியாதுங்கறதால வேணாம் சொல்லிடுறோம். இந்த நிகழ்ச்சி முடியட்டும் பிறகு பார்ப்போம்"

சுசீல் நடித்து, சுட்டி விகடனின் சீனியர் சுட்டி ஸ்டார் ராஜ கணேஷ் இயக்கிய 'மனித நேயம்' குறும்படம்:

வி.எஸ்.சரவணன்