பிக் பாஸ் நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பு ரீ- என்ட்ரி கொடுப்பாரா? #BiggBossTamil

ganja karuppu

100 நாள்கள், 14 பிரபலங்கள், 30 கேமராக்கள். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என கமலை வைத்து விஜய் டிவி விளம்பரம் செய்யத் தொடங்கியதில் இருந்து, இந்த ஷோ எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், ‘அந்த கலாசாரம் நமக்கு ஒத்து வராது, பின்ன எப்படி இதை தமிழில் எடுக்கமுடியும்’ என கேள்வி எழுப்பினர். அதற்கு விஜய் டிவி தரப்பு, ‘இந்த நிகழ்ச்சி எந்த விதத்திலும் நம் கலாசாரத்திற்கு எதிராக இருக்காது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐடியாவை மட்டும்தான் தமிழுக்கு கொண்டுவருகிறோம்’ என்றார்கள். 

நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே பல சர்ச்சைகளை சந்தித்த பிக் பாஸ், ஒளிபரப்பு ஆனதில் இருந்தும் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. 14 பிரபலங்கள் என்று சொல்லிவிட்டு 15 பிரபலங்களை அழைத்து வந்தது, அதில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட ஜூலியையும் ஒரு பிரபலமாக அழைத்து வந்தது, ஸ்ரீ - ஜூலி மீம்ஸ், கஞ்சா கருப்பு - பரணி சண்டை என அனைத்துமே வைரல் ஆனது. 

ganja karuppu

100 நாள்களில் 15 நாள்கள் முடித்திருக்கும் நிலையில், இதுவரை 4 நபர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஸ்ரீ உடல் நலம் சரியில்லாத காரணத்தாலும், பரணி போட்டியின் விதிமுறையை மீறியதாலும் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அனுயாவும், கஞ்சா கருப்பு மட்டும்தான் முறையாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். சரி, இது எல்லாம் உங்களுக்கு தெரிந்தது தான். இனி தெரியாததை சொல்கிறேன். பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஸ்ரீ,அனுயா இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்றிருக்கும் நிலையில், கஞ்சா கருப்புவை மட்டும் விஜய் டிவியினர் சென்னையிலேயே ரூம் எடுத்து தங்கவைத்துள்ளனர். அது ஏன்? நேற்றைய நிகழ்ச்சி பார்த்த பலருக்கும் இதற்காக விடையை யூகிக்க முடியும்.

போட்டியின் விதிமுறையை மீறியதால் பரணி வெளியேற்றப்படும் விஷயம் 2 நாள்களுக்கு முன்பே பிக் பாஸ் டீமுக்கு தெரியும். அதனால்தான் கஞ்சா கருப்பை சென்னையிலேயே தங்க வைத்துள்ளனர். வாரம் ஒரு நபர் என வெளியேற்றுவது தான் நிகழ்ச்சியின் விதிமுறை. ஆனால், இரண்டு வாரங்களில் 4 நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதால், கண்டிப்பாக இன்னும் ஆட்கள் இருந்தால்தான் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும். அதற்காக புதிதாக ஆட்களை எடுக்க முடியாது. அதனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர்களில் யாரையாவது தான் மறுபடியும் அழைக்க வேண்டும். அப்படிப்பார்த்தால், தற்போது வீட்டிற்குள் இருக்கும் 11 நபர்களுக்கும் கஞ்சா கருப்பை பிடித்திருக்கிறது. அவரின் வெளியேற்றம் அவர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்துள்ளது. எனவே, அவர்களின் விருப்பப்படி மீண்டும் கஞ்சா கருப்பு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அழைக்கப்படலாம். அதுமட்டுமில்லாமல், கஞ்சா கருப்பு வெளியேறும் போது கமலிடம், ’என்னை மறுபடியும் நிகழ்ச்சிக்குள் அனுப்பமுடிந்தால் அனுப்புங்கணே’ என்று சொல்லி விட்டு தான் சென்றார். இதை எல்லாம் வைத்து பார்த்தால் கஞ்சா கருப்பு, மக்களின் ஓட்டிங் இல்லாமல் விரைவில் பிக் பாஸ் வீட்டுக்கு  ரீ-என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கலாம். 

இதை உறுதிசெய்ய விஜய் டிவியினரை தொடர்பு கொண்டபோது, “கஞ்சா கருப்பு மக்களின் ஓட்டுகள் மூலமாகத்தான் ரீ-என்ட்ரி கொடுக்க முடியும். அதுவும் உடனே செய்ய முரியாது, சில வாரங்கள் ஆகலாம்’ என்றனர். விஜய் டிவியினர் ஏற்பாடு செய்து கொடுத்த அறையில்தான் கஞ்சா கருப்பு இன்னும் இருக்கிறாரா என தெரிந்துக்கொள்ள அவரை தொடர்பு கொண்டால், “ஆச்சி இறந்துபோச்சுணே, அதுனால ஊருக்கு வந்திட்டேன்’’ என்றார். இன்னும் சில வாரங்களில் கஞ்சா கருப்பின் ரீ-என்ட்ரிக்காக ஓட்டிங் நடத்தப்பட்டு அவர் பிக் பாஸ் வீட்டிற்கும் ரீ-எண்ட்ரி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!