இந்த விஷயங்கள் எல்லாம் இருந்தால்தான் அது பாலா படம்! #HBDBala | These Things to be noted in Bala movies

வெளியிடப்பட்ட நேரம்: 13:42 (11/07/2017)

கடைசி தொடர்பு:13:42 (11/07/2017)

இந்த விஷயங்கள் எல்லாம் இருந்தால்தான் அது பாலா படம்! #HBDBala

பொதுவாக பாலா படங்கள் என்றாலே சோகத்தில்தான் முடியும் என்ற கருத்து ஏற்பட்டுள்ளது. ஒரு சினிமா என்றால் எல்லாவற்றையும் சரிசமமாகக் காட்ட வேண்டும் என்றுதான் பாலா படம் இயக்குவார். பாலா படங்களுக்கே உரிய சில தனித்துவங்கள் இருக்கின்றன. அதைப் பற்றிப் பார்க்கலாம்...

இயல்பான காமெடிகள் :

பாலா பட காமெடிகள்

'அடப்போய்யா பாலா படம்னாலே பகீர் பகீர்ன்னு இருக்கும், அவர் படத்தை எல்லாம் நான் பார்க்கவே மாட்டேன்' என்று அலறும் கூட்டம் ஏராளம். இதுவே ஒரு இயக்குநராக அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றிதான். ஆனால் காமெடிப் படங்களை மிஞ்சும் காமெடிகள் அவர் படங்களில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. படத்தின் கதைக்கரு நம் மனதில் பதிந்து போவதால் அவர் படங்களில் இடம்பெற்றிருக்கும் காமெடிகள் பெரிதாக நம் கண்களுக்கு அகப்படுவதில்லை. வீட்டிலிருப்பவர்களின் பேச்சைக் கேட்காமல் காலேஜில் கெத்து காட்டும் ஒரு ஹீரோவின் வாழ்க்கையில் காதலோடு கலந்து என்னென்ன காமெடிகள் இடம்பெற்றிருக்குமோ அவை அனைத்தும் இடம்பெற்ற படம்தான் 'சேது'. கிறுக்குத்தனமான ஒரு ஆள் செய்யும் லூட்டிகள்தான் 'நந்தா' படத்தில் இடம்பெற்ற லொடுக்குப் பாண்டி காமெடிகள். அன்றாடம் பிச்சை எடுக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் அப்படி என்ன காமெடி நடக்கப் போகிறது என்று நினைத்தால் அது தவறு. அதற்கு 'நான் கடவுள்' படத்தில் இடம்பெற்ற காமெடிகளே சாட்சி. மனதில் ரணத்தை வைத்துக்கொண்டு இருக்கும் பிச்சைக்காரர்கள், வளர்ச்சி இல்லாத ஊனமுற்றவர்கள், கண் தெரியாத பெண் என அவர்கள் வாழ்வில் நடக்கும் இயல்பான நகைச்சுவைத் தருணங்களை அந்தப் படத்தில் அழகாகக் காட்டியிருப்பார் பாலா. அப்படியே 'அவன் இவன்' பக்கம் வந்தால் அதில் மாறுபட்ட காமெடி காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இரண்டு மனைவிகள் இருப்பவன் வாழ்க்கையில் நடக்கும் கலாட்டாவை வக்கிரம் இல்லாமல் ஜாலியாகக் காட்டியிருப்பார். பாலா வலியைச் சொல்வதில் மட்டுமல்ல, காமெடியிலும் கிங்தான்.

ஹீரோவுக்கு மேல் :

Special Characters in Bala Movies

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களில் ஹீரோவைத்தான் மிகைப்படுத்திக் காட்டுவார்கள். அந்த பிம்பமானது பாலா படங்களில் இடம்பெறும் சில கதாபாத்திரங்களால் உடையும். அவர் இயக்கியதில் இரண்டாவது படம் 'நந்தா'. அதில் ராஜ்கிரணின் கதாபாத்திரம் வேற லெவலில் இருக்கும். 'பெரிய சண்டியரோ... நந்தான்னா எல்லாருக்கும் ஒரு பயம் இருக்கணுமோ' என்று கூறி ஒரு வாய் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு 'அப்படித்தான் இருக்கணும்' என்று எதிர்பாராத டயலாக் அவரிடமிருந்து வரும். இந்த விஷயங்கள் எல்லாம் பாலா படங்களில்தான் நடக்கும். 'பிதாமகன்' படத்தில் ஆரம்பத்திலிருந்து கெத்தாகவே காட்டியிருக்கும் மகாதேவன் கதாபாத்திரம். 'நான் கடவுள்' படத்தில் படம் முழுக்கத் தன்னைத்தானே ஆர்யா கடவுள் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் அவருக்கு மேல் இருக்கும் அந்த சாமியின் பேச்சைக் கேட்டுதான் நடப்பார். தன்னுடைய வேலை அனைத்தையும் முடித்துவிட்டுக் கடைசியில் அந்த சாமியைத் தேடித்தான் வருவார். 'அவன் இவன்' படத்தில் ஆர்யாவையும் விஷாலையும் ஹீரோவாக டைட்டில் கார்டில் போட்டாலும், அந்த இருவரையும் அடித்துத் துவைப்பவர் ஐனஸ்தான். இருவரும் அவரின் மீது மிகுந்த மரியாதையோடும் பாசத்தோடும் நடந்து கொள்வார்கள். ஹீரோக்களை மிஞ்சும் கதாபாத்திரங்கள் பாலா படத்தில் கண்டிப்பாக இருக்கும். 

எதிர்பாராத ட்விஸ்ட்டுகள் :

Unexpected scenes in Bala movies

நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் படத்தில் சில எதிர்பாராத திருப்பு முனைகள் வரும் என்று சமீபத்தில் வெளியான அவரது படங்களை வைத்து முடிவு செய்திருக்கலாம். ஆனால் இது எதுவுமே பார்வையாளர்களுக்குத் தெரியாதபோது அவர் இயக்கத்தில் வெளியான முதல் படம் 'சேது'. ஜாலியாக ஹீரோவின் வாழ்க்கை, காலேஜ் நண்பர்கள், வீடு, காதல் என நகர்ந்து கொண்டிருக்கும்போது, அதுவும் ஹீரோ ஹீரோயினிடம் காதல் சொல்லிவிட்டு டூயட் பாடல் பாடிக் கொண்டிருக்கும்போது அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று படம் பார்ப்பவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். விக்ரம் அந்தப் படத்தில் வாங்கிய அடி நம் மண்டையிலும் சேர்ந்து விழுவதுபோல் இருக்கும். அதற்குப் பிறகு அவரது மூளையில் ஏற்படும் மாற்றங்களைக் காணும்போது நமக்கும் அல்லையைப் பிடிக்கும். தற்பொழுது அந்தக் காட்சியைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினாலும் நம்மை நிலை குலைய வைக்கும். அதற்குப் பின் வெளிவந்த 'நந்தா' படத்தில் சூர்யாவின் அம்மாவே முடிவில் அவருக்கு விஷம் வைப்பது, 'பிதாமகன்' படத்தில் சூர்யாவின் இறப்பு, 'நான் கடவுள்' படத்தில் பூஜாவின் இறப்பு, 'அவன் இவன்' படத்தில் ஐனஸின் இறப்பு என எல்லாப் படங்களிலும் எதிர்பாராத ட்விஸ்ட்டுகள் இருக்கும்.

யாரா இருந்தாலும் மாறத்தான் வேணும் :

Heroes in Bala movies

பாலா படங்களில் நடிப்பதற்கு முன் ஹீரோ சாக்லேட் பாயாக இருந்தாலும் சரி, ஸ்ட்ராபெரி ஹீரோயினாக இருந்தாலும் சரி, பாலா படத்தின் ஃப்ரேமில் இடம்பெறும் எல்லோருமே சில விதிமுறைகளை எல்லாம் கடைபிடிக்கத்தான் வேண்டும். நடிப்பிற்காகத் தன்னைத் தானே மாற்றிக் கொள்பவர் சீயான் விக்ரம். அந்தப் பழக்கத்தையே விக்ரமுக்கு பாலாதான் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அதற்குக் காரணம் 'சேது' படமும் 'பிதாமகன்' படமுமாகத்தான் இருந்திருக்கும். அது போக லேசுபாசாக தாடியையும், மீசையையும் ட்ரிம் செய்து நடித்துக் கொண்டிருந்த ஆர்யாவை முழுமையாக மாற்றி 'நான் கடவுள்' படத்தில் வேறு மாதிரி காட்டியிருந்தார். அந்தக் கேரக்டரை அஜித் நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படித் தன்னுடைய எல்லாப் படங்களிலும் நடிக்கும் ஹீரோக்களையும் திரைக்கதைக்கு ஏற்ப மாற்றிவிடுவார் பாலா. 

எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்பவர்களுக்கு மத்தியில் பாலா ஒரு தனித்துவம் கொண்டவர். தன் மீது வரும் விமர்சனங்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் எண்ணத்தை வண்ணமாக சில வன்முறை கலந்துதான் திரையில் காட்டுவார். அந்தத் தாக்கத்தை எதிர்கொள்பவனே பாலா எடுக்கும் படங்களுக்கு ரசிகனாக இருக்க முடியும். பிறந்தநாள் வாழ்த்துகள் பாலா சார்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close