Published:Updated:

வைரமுத்து.. ஒரு காதல்.. ஒரு பதில்.. ஓர் உதாரணம்! #HBDVairamuthu

இளம்பரிதி கல்யாணகுமார்
வைரமுத்து.. ஒரு காதல்.. ஒரு பதில்.. ஓர் உதாரணம்! #HBDVairamuthu
வைரமுத்து.. ஒரு காதல்.. ஒரு பதில்.. ஓர் உதாரணம்! #HBDVairamuthu

லைப்பிரசவத்துக்காக மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, விடுமுறை விண்ணப்பம் எழுதிக் கொடுக்க அலுவலகம் சென்ற அந்தக் கவிஞருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. தொலைபேசியில் பேசிய  இயக்குநர் ``யோவ்... அட்லான்ட்டிக் ஹோட்டல் ரூம் நம்பர் 410-க்கு உடனே கிளம்பி வா" என்று அணைகிறது அந்தக் குரல். அம்மாவிடம் மனைவியைப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு விரைகிறார் அந்தக் கவிஞர்.

“இவர்தான் நான் சொன்ன கவிஞர்'' என இசையமைப்பாளரிடம் அறிமுகம் செய்துவைக்கிறார் இயக்குநர். `மாலை நேரத்தில் ஒரு லட்சியவாதி பாடும் பாட்டு' எனக் காட்சியைச் சொல்லி, ``மெட்டுக்கு  எழுதுவீங்களா?'' என்று நம்பிக்கையின்றி கவிஞரிடம் கேட்கிறார் இசையமைப்பாளர். கவிச்செருக்குடன்கூடிய தமிழ்த் திமிரில் ``மெட்டைச் சொல்லுங்க, முயற்சி செய்வோம்'' என்று பதிலளிக்கிறார் கவிஞர். மெட்டு வாசிக்கப்படுகிறது. கவிஞர் யோசிக்கிறார். அவர் யோசிப்பதைப் பார்த்த இசையமைப்பாளர் ``நாளை சந்திக்கலாம். போயிட்டு வாங்க'' என்று சொல்கிறார். சிறிதும் நேரம் கொடுக்காமல் ``கொஞ்சம் பொறுங்கள். பல்லவி வந்துவிட்டது,  சொல்லட்டுமா... பாடட்டுமா" என்று கேட்கிறார் கவிஞர். ஆச்சர்யத்துடன் பாடச் சொல்ல,  மனதில் உதித்த வரிகள் ஒலியில் பதிவுசெய்யும் முன் கவிஞரின் குரலிலேயே பாடலாக ஒலிக்கிறது. முழு பாடலையும் எழுதிக் கொடுத்ததும் அந்த இளம் கவிஞனை அணைத்துக்கொள்கிறார் இசையமைப்பாளர்.

அந்த அறையில் ஒலித்த பாடல் `பொன்மாலைப் பொழுது... இது ஒரு பொன்மாலைப் பொழுது'. மேலே சொன்ன இயக்குநர், இசையமைப்பாளர், கவிஞர் யாரெனச் சொல்லித் தெரிய தேவையில்லை. ஒரு வரலாற்றின் முதல் அத்தியாயத்தின் கதை மாந்தர்கள் இவர்கள். பாரதிராஜாவின் இயலுக்கும் இளையராஜாவின் இசைக்கும் வைரமுத்துவின் பேனா எழுதத் தொடங்கிய நாள் அது.

வைரமுத்து - ஒரு காதல்

“நான் விதைத்தேன். அது உயர்ந்த விருட்சமானது'' என்று அறிமுகம் செய்துவைத்த இயக்குநர் பாரதிராஜா சொல்வார். அந்த விதையின் வீரியம்தான் தமிழ் சினிமாவின் பாடல்களில் கவிதைத் தரத்தை உயர்த்தியது எனச் சொன்னால் அது மிகையல்ல. வைரமுத்து மிகச்சிறந்த கவிஞர், நாவலாசிரியர், பாடலாசிரியர் என்பதையெல்லாம் தாண்டி, அவர் ஓர் ஆகச்சிறந்த ரசிகர். மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு ரசிக்கிறானோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவன் இளமையாகிறான். கபிலனும் கார்க்கியும் எழுதிக்கொண்டிருக்கும் இந்நாளில் `கள்ளக் காமுகனே...' என்று அவரால் எழுத முடிகிறதென்றால், அதுதான் அவருடைய ரசனையின் உச்சம்.

வைரமுத்துவின் கல்லூரிக் காலத்தில் ஒரு மாணவி, தான் வரைந்த ஓவியத்தை வைரமுத்துவிடம் காண்பித்து கருத்துக் கேட்டிருக்கிறார். அந்த ஓவியத்தின் கீழே ஒரு கவிதை எழுத்தி, கையெழுத்திட்டிருக்கிறார் வைரமுத்து.


`நீ
இனிமேல் நெருப்பை ஓவியமாய் வரையாதே.
தூரிகை தீப்பிடித்துவிடப்போகிறது.'

இந்தக் கவிதைதான் ‘அன்பே சிவம்’ படத்தின் `பூவாசம் புறப்படும் பெண்ணே...' பாடலில் பல்லவியாக மாறியது.

`பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்...'

அந்த ஓவியம் வரைந்த பொன்மணி என்கிற மாணவிதான் கவிஞருக்கு மனைவியானார்.

வைரமுத்து - ஒரு பதில்

தமிழ், ஒவ்வொருவரையும் கேள்வி கேட்கச் சொல்லும்; கேட்ட கேள்விக்கு இலகுவாகப் பதிலும் சொல்லச் செய்யும். வைரமுத்துவின் தமிழும் கேள்வி-பதில்களைக் கண்டிருக்கிறது. ‘வசந்தி’  திரைப்படத்தில் ‘ரவிவர்மன் எழுதாத கலையோ...' என்ற பாடலில் வைரமுத்து இப்படி ஒரு வரி எழுதியிருக்கிறார்... 

`பூமாலையே உன்னை மணப்பேன்
புதுச்சேலை கசங்காமல்  அணைப்பேன்...'

‘முதல் இரவில், புதுச்சேலை கசங்காமல் அணைப்பதெல்லாம் அணைப்பா?' என்ற கேள்வி எழுந்திருக்கிறது. உடனே அதற்குப் பதிலாக ‘முதல் இரவில் புடவைக்கு விடுமுறை' என்று ரசனையைப் பதிலளித்திருக்கிறார்.

இதேபோல ‘ராவணன்' படத்தில் `உசுரே போகுதே...' என எழுதியதற்கு, `காதலின் உச்சத்தில் ஏன் உயிர் போவதாய் எழுதியிருக்கிறீர்கள்?' எனக் கேட்டதற்கு “மாற்றான் மனைவியை நேசித்தால், இறுதியில் உயிர் போய்விடும்" என்று சொல்கிறார். அந்தப் படத்தின் இறுதியில் விக்ரம் இறந்துபோவார்.

வைரமுத்து - ஓர் உதாரணம்

பாலசந்தர், பாரதிராஜா, இளையராஜா என எத்தனை ஆளுமைகளோடு இணைத்து வைரமுத்துவை எழுதினாலும் மணிரத்னம்-வைரமுத்து கூட்டணிதான் தமிழ் சினிமாவின் கவிதை கூடிய பாடல்களின் கூடாரம். “நான் மணிரத்னத்தோடு சேர்ந்த பிறகுதான் என் பாடல்களில் கவிதை கூடியது'' என்று வைரமுத்து ஒருமுறை சிலாகித்தார். வைரமுத்துவின் எழுத்துகளுக்கு முதல் ரசிகர்கள் மணிரத்னமும் ரஹ்மானும்தான். வைரமுத்துவின் பேனா படித்து முடித்ததும் இவர்கள்தான் முதலில் படிக்கிறார்கள். இவர்கள் மூவருமே ஒருவருக்கொருவர் ரசித்துக்கொள்கிறார்கள். ஒரே அலைவரிசையில் தமிழை ரசிக்கிறார்கள். வைரமுத்துவின் கவி வரிகளை ரஹ்மான் இசைக் குறிப்புகளோடு மெருகேற்றி மணிரத்னத்தின் கதாபாத்திரங்களுக்கு உணர்வளிக்கிறார்.

பாடல்களின் புதுமைக்காக இசையில் லாகவமாக அமரும் சொற்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி ஒருமுறை வைரமுத்து எடுத்துரைத்தார். ‘பம்பாய்' படத்தின் ‘கண்ணாளனே...' பாடலில் பல்லவிக்காக ரஹ்மான் கொடுத்த இசை அளவுக்கு ஏற்றதுபோல `என் நண்பனே...', ‘என் அன்பனே...', `என் தேவனே...' என பல வார்த்தைகள் எழுதி, இறுதியில் `கண்ணாளனே...' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த `கண்ணாளனே...' பாடலை இப்போது கேட்டால்கூட புதுமையாகத் தெரிகிறது. இதை உள்ளார்ந்து கவனித்தால் வைரமுத்து முதலில் எழுதிய `என் நண்பனே...', `என் அன்பனே...' போன்ற சொற்களைவிட `கண்ணாளனே...'தான் பழைமையான சொல். பழைய திரைப்படங்களில் சரளமாகக் கேட்கும் சொல். புதுமை என்பது புதுப்பித்தல்தான் என்ற உண்மையை நன்கு அறிந்தவர் வைரமுத்து. இந்தப் பாடலின் மொத்த ஜீவனும் பாடலின் முதல் சொல்லான `கண்ணாள'னில் இருக்கிறது. காரணம், இந்தப் பாடலின் போக்கு முழுவதும் கதாநாயகனின் கண்களையும் கதாநாயகனின் பார்வையையுமே மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும்.

`பம்பாய்' படத்தின் முதல் காட்சியே கதாநாயகனும் கதாநாயகியும் ஒருவரையொருவர் முதன்முதலாகச் சந்தித்துக்கொள்ளும் காட்சிதான்.  இருவரும் பார்த்துக்கொள்ள, பெய்யும் மழையில் நனைந்துகொள்ளும் அவர்களின் முதல் பார்வை. பர்தா விலகிய நொடியில் கதாநாயகனும் கதாநயாகியும் பார்த்துக்கொண்டதைத்தான் சரணத்தில் வைரமுத்து இப்படி எழுதுகிறார்.

‘எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்'
அந்த முதல் பார்வை அங்கேயே முடிந்துவிட, மீண்டும் ஒரு திருமணச் சடங்கில் அதேபோல இருவரும் யதேச்சையாகப் பார்த்துக்கொள்ள வாய்ப்பு அமைகிறது. அந்தப் பார்வையின் தொடர்தலில், கதாநாயகியின் குரலில் தொடங்குகிறது பாடல்.

‘கண்ணாளனே
எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை'
முதல் நாள் பார்த்துக்கொண்டபோதே அவளின் கண்களை அந்தப் பார்வைக்குப் பறிகொடுத்ததுதான் `எனது கண்ணை நேற்றோடு காணவில்லை' என்ற வரியின் பொருள். மேலும், அவனின் பார்வைகளை  வைரமுத்து கீழ்க்காணுமாறு குறிப்பிட்டு தொடர்கிறார்.

`உந்தன் கண் ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்
தறிக்கெட்டுத் தளும்புது நெஞ்சம்'

`ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்'

சதாசர்வகாலமாக ஒரு பெண்ணின் பார்வையை வைத்து மட்டுமே எழுதப்பட்டு வந்த பாடல்களில், ஓர் ஆணின் பார்வையைச் சொல்லியது இந்தப் பாடலின் மற்றுமோர் அழகு. ‘கண்ணாளன்'  என்றால் `கண் + ஆளன்' - `கண்களால் ஆள்பவன்' அல்லது `கண்களை ஆள்பவன்' என்று இரு பொருள்களில் விளங்கிக்கொள்ளலாம். இந்தப் பொருள்களைத்தான் மேலே சொன்ன வரிகளைக்கொண்டு விளக்குகிறார் வைரமுத்து.

`கண்களை ஆள்பவன்' என்ற பொருள் `என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை' என்ற வரிகள் பொருந்தி நிற்கின்றன.  அதே போல, `கண்களால் ஆள்பவன்' என்ற அர்த்தத்துக்குக் கீழுள்ள வரிகளும் பொருத்தமாக இருக்கின்றன.

`உந்தன் கண் ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்
தறிக்கெட்டுத் தளும்புது நெஞ்சம்'
`ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம் உன்னோடு நான் கண்டுகொண்டேன்'
`உன்னைப் பார்தெந்தன் தாய்மொழி மறந்தேன்'

இப்படி அடுத்தடுத்த சந்திப்புகள் இருவருக்குமான பரிட்சயங்களை, ஆசைகளைத்  துளிர்விடவைக்கின்றன. பெண்ணாகப்பட்டவள் வெளிக்காட்ட தயங்கும் ஆசைகளில் இந்தக் காதலும் ஒன்று. அந்த ஆசையைக் காதலாக முன்னெடுக்கும் நாயகன்,  `நான் உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வருவேன். நீ எனக்காக வருவியா. நாளைக்கு உனக்காகக் கோட்டையில காத்திருப்பேன். ப்ரியம் இருந்தா வா' என்று நாயகியிடம் ஒரு விண்ணப்பத்தை முன்வைக்கிறான்.

தனக்காகக் காத்திருப்பவனிடம் வீடு, உறவு, சார்ந்திருக்கும் சமுதாயம் என அனைத்தையும் துறந்து சேர்வதற்கு ஓடிவரும் அவள், மீண்டும் அவனை `கண்ணாளனே...'என்றுதான் அழைக்கிறாள்.

`நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே'

அவளின் பார்வையில் பாடும்போது கண்ணாளனுக்காகப் பார்வையைச் சுற்றியே பாடுகிறாள்.

`ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்தபோது
மறு கண்ணும் தூங்கிடுமா'

வைரமுத்துவின் காதலும் ரசனையும் கடைசி தமிழ் ரசிகனும் இசை ரசிகனும் இருக்கும்வரை கொண்டாடப்பட்டுக்கொண்டே இருக்கும். வைரமுத்து எப்போது பேசினாலும் அவரின் உரையில் ஒரு வரி வரும். அது `உங்களுக்கு ஒரு வார்த்தை'.

கவிப்பேரரசு வைரமுத்து
உங்களுக்கு ஒரு வார்த்தை
‘வாழ்க.’

இளம்பரிதி கல்யாணகுமார்