வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (14/07/2017)

கடைசி தொடர்பு:11:55 (14/07/2017)

''பிரச்னைக்குப் பிறகு தோழி என் வீட்டில்தான் இருந்தார்!" - கேரள நடிகை பற்றிச் சொல்கிறார் ரம்யா நம்பீசன்

நடிகை ரம்யா நம்பீசன்

கேரள நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளான பல்சர் சுனில் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்தப் பிரச்னையில் சந்தேகத்தின் அடிப்படையில் மலையாள முன்னணி நடிகர், சமீபத்தில் கைது செய்யப்பட்டார். மலையாள நடிகர் சங்கம் மற்றும் சினிமா சார்ந்த சங்கங்களிலிருந்தும் நீக்கப்பட்டார். கேரள நடிகைக்கு நடந்த சம்பவத்துக்குப் பிறகு அவர், நடிகை ரம்யா நம்பீசன் வீட்டில்தான் தங்கியிருந்தார். இது தொடர்பாக ரம்யா நம்பீசனிடம் பேசினோம்.

"என் தோழிக்கு எதிராக நடந்த அந்தக் கொடிய சம்பவத்துக்குப் பிறகு, அவர் பல நாள்கள் என் வீட்டில்தான் தங்கியிருந்தார். ஒரு பெண்ணாக, தோழியாக, சக மனுஷியாக அவரது வலியையும் உணர்வையும் என்னால் நன்றாக உணரமுடிந்தது. அந்தத் தருணத்தில் என் தோழிக்கு ஆதரவாக இருந்து என்னாலான உதவிகளைச் செய்தேன். இதுபோன்ற பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்கள் அந்தக் கசப்பான அனுபவத்திலிருந்து மீண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், என் தோழி மிக விரைவாக மீண்டுவந்ததுடன், துணிச்சலுடன் படப்பிடிப்புக்கும் வந்து நடிக்கவும் ஆரம்பித்தார். குடும்பத்தார், நண்பர்கள் எனப் பலரிடமும் சகஜமாகப் பேச ஆரம்பித்தார். 

நடிகை பாவனாவின் தோழி நடிகை ரம்யா நம்பீசன்

என் தோழியின் இந்த மேம்பட்ட அனுபவங்களைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஏற்றுக்கொள்ளவே முடியாத, மன்னிக்கவே முடியாத இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும், தண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுப்பதில் நாம் அனைவரும் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும். அந்தக் குற்றவாளிகளுக்குக் கிடைக்கும் தண்டனை, இனி இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடாத வகையில் பாடமாக அமைய வேண்டும். பெண்கள் பயமில்லாத வாழ்க்கையை வாழ வழிவகை ஏற்பட வேண்டும். அதற்காக, எந்த அளவுக்கும் போராடத் தயாராக இருக்கிறோம். 

தற்போது, காவல்துறையினரின் அறிவுரைப்படி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். தவறு செய்தவர் என்பதற்காக, முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட அந்த நடிகரை, மலையாள நடிகர் சங்கம் அதிரடியாக நீக்கியது. அனைத்து நடிகர்களும் ஒன்றிணைந்து இரண்டு தினங்களுக்கு முன்னர் மம்முக்கா (நடிகர் மம்முட்டி) வீட்டில் ஆலோசனை செய்தோம். அதில், நடிகர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சினிமா சார்ந்த சங்கங்களிலிருந்து அந்த நடிகரை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த விஷயத்தில் கேரள அரசும் நடிகர் சங்கமும் துணிச்சலுடன் செயல்பட்டதுக்கு என் மனமார்ந்த நன்றி. கேரள மக்கள் கொடுக்கும் ஆதரவுக்கும் நன்றி. மேலும், உண்மையான குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அதேசமயம் குற்றமற்றவர்கள் யாரும் தண்டிக்கப்படக்கூடாது" என்ற ரம்யா நம்பீசன், அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார். 

''இந்த விவகாரத்தில் என் தோழியின் பெயரும் புகைப்படமும் தொடர்ந்து செய்தி சேனல்களில், பத்திரிகைகளில், சமூக வலைதளங்களில் வெளியாகிவருகிறது. என் தோழி பற்றிய பேச்சுகள் பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதனால், பாதிக்கப்பட்டவர் அந்த விஷயத்திலிருந்து முழுமையாக மீண்டுவருவதில் தாமதம் ஏற்படுகிறது. மீண்டும் மீண்டும் அவர் மனம் புண்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, பழைய கசப்புகளை மறக்க, பாதிக்கப்பட்ட என் தோழியின் பெயரையும் புகைப்படத்தையும் இந்த பிரச்னையைச் சார்ந்த விஷயத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற பிரச்னையில் நம் வீட்டுப் பெண்கள் பாதிக்கப்பட்டால், அவர் பெயர் வெளியே தெரியாத வகையில் நீதியை பெறும் முயற்சியை செய்வோம் அல்லவா? அப்படி இந்த விஷயத்திலும் நாம் இணைந்து செயல்பட வேண்டும் என அனைவரையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்" என்கிறார் ரம்யா நம்பீசன். 

இது வேண்டிப் பெறும் விஷயமே அல்ல; மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவசியமான பண்பு. ஒன்றிணைவோம்; மாண்பு காப்போம்!