இன்றைய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில், கமல்ஹாசன் என்ன பேசுவார், என்ன பேச வேண்டும்?

ன்று சனிக்கிழமை. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் பேசப்போகிறார் கமல்ஹாசன். வேறு எந்த வாரத்தையும்விட இந்த வாரத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம். காரணம், `சேரி பிக் பாஸ்பிஹேவியர் என்ற வார்த்தை மூலம் காயத்ரி ரகுராம் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்திவிட்டதாக' திராவிடர் விடுதலைக் கழகம் போன்ற அமைப்புகள் புகார் கொடுத்திருக்கின்றன. “பிக்பாஸ்' நிகழ்ச்சி, பண்பாட்டைக் கெடுக்கிறது. கலாசாரத்தைக் கெடுக்கும் இந்த நிகழ்ச்சியைத் தடைசெய்ய வேண்டும். கமல்ஹாசனைக் கைதுசெய்ய வேண்டும்' எனப் புகார் கொடுத்திருக்கிறது இந்து மக்கள் கட்சி. கமல்ஹாசன் வீட்டின் முன்பு, இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இத்தகைய சர்ச்சைகள் ஒருபுறம் என்றால், காயத்ரி ரகுராம், ஆர்த்தி, சினேகன் போன்றோரின் நடவடிக்கைகள் `பிக் பாஸ்' பார்வையாளர்கள் மத்தியில் ஆத்திரத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கின்றன. `பிக் பாஸ்' குறித்து நாம் நடத்திய சர்வேயிலும் இது எதிரொலித்தது.

இன்று இரவு `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பேசப்போகும் கமல்ஹாசன், ஆர்த்தி, ஓவியா, ஜூலி, வையாபுரி நால்வரில் யார் எலிமினேட் ஆகிறார் என்பதை அறிவிப்பார். அதேபோல் இந்த வாரம் நடந்த சர்ச்சைகள்குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பண்பாட்டு சர்ச்சை, சாதிரீதியிலான சர்ச்சை, அடுத்தவர் அந்தரங்கத்தை வேடிக்கை பார்ப்பது ஆகியவை குறித்தெல்லாம் கமல்ஹாசன் பேசுவார் என எதிர்பார்க்கலாம்.

இவை, கமல்ஹாசன் பேசுவார் என நாம் நினைப்பது. ஆனால் அவர் என்னவெல்லாம் பேசவேண்டும்?

பிக் பாஸ்

* `கூடி வாழ்தலை இது ஊக்கப்படுத்துகிறது' என்றார் பேட்டியில். ஆனால், பரணியைத் தொடர்ந்து கார்னர் செய்து, அவரை மனரீதியாகத் துன்புறுத்தி, வெளியே அனுப்பியும்விட்டார்கள். அதுபற்றிக் கேட்பார். ஆனால், கண்டிப்பாரா? 

* பரணி வெளியேறும்போது ஓவியா `Bye பரணி' என்றார். அதனாலேயே அவரையும் இப்போது கார்னர் செய்கிறார்கள். இதைக் கேட்பாரா? 

* சினேகனும் காயத்ரியும் பேசும்போது `ஓவியா கேமராவுல அப்படியும் இப்படியும் காமிக்கிறார். அதான் அவ்ளோ ஓட்டு விழுது' என்றிருக்கிறார்கள். இது ஒட்டுமொத்தப் பார்வையாளர்களையும் கேலிக்குள்ளாக்குகிறது. இதைக் கண்டிப்பாரா?

* `தொடர்ச்சியாக காயத்ரி ரகுராமும் ஆர்த்தியும் ஜூலி மீது வன்மத்துடனே இயங்குவது ஏன்?' என்று கேள்வி எழுப்புவாரா?

* ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்த அதிருப்தியை, காயத்ரி ரகுராம், ஆர்த்தி, சினேகன் ஆகியோர் ஜூலி மீது பிரதிபலிப்பது சரிதானா? ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தவர் என்ற வகையில், இதைக் கேட்கவேண்டிய தார்மீகக் கடமை கமல்ஹாசனுக்கு உண்டு.

* அதேபோல் `ஜல்லிக்கட்டுப் போராட்டம், அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் எதிரான போராட்டம்' என்ற மனநிலை சினேகன், ஆர்த்தி, காயத்ரி ஆகியோருக்கு இருக்கிறது. சமீபத்திய பேட்டி வரை அ.தி.மு.க அரசை விமர்சிக்கும் கமல்ஹாசன், இதுகுறித்த தன் கருத்தைத் தெரிவிக்கவேண்டும்.

* `சேரி பிஹேவியர்' குறித்த கேள்விக்கு, `அதை நான் சொல்லவில்லை. நான் பேசும் ஸ்க்ரிப்டில் இல்லை' என்றெல்லாம் கமல்ஹாசன் சொல்லியிருந்தாலும், அவரை முதன்மைப்படுத்தி நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியில், அவர் தொகுப்பாளராகச் செயல்படும் ஒரு நிகழ்ச்சியில் சாதி ஆதிக்க மனநிலை வெளிப்பட்டால், அதை விமர்சிக்கவும் கண்டிக்கவும்வேண்டிய கடமை கமல்ஹாசனுக்கு உண்டு. எனவே, காயத்ரி ரகுராமிடம் இதுகுறித்துக் கேள்வி எழுப்புவாரா?

* `மாற்றம் என்பதே மாறாதது' என்ற டாஸ்க்கில் `மற்றவர்களைப் பற்றிப் புறம்பேசும் பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் முயற்சியில் இருக்கிறேன்' என சினேகன் தெரிவித்திருந்தார். ஆனால், சொன்ன அந்த நாளில்கூட அதை அவர் கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை. மற்றவர்களைப் பற்றித் தொடர்ந்து புறளி பேசும் சினேகனின் வழக்கம் குறித்து கமல் பேசுவாரா?

* ரஜினி, கமல், அஜித் போன்ற நடிகர்களின் கெட்டப்பில் பலர் நன்றாக ஆடியிருக்க, ஆடவே தெரியாத ஆர்த்தியை ஏன் `பெஸ்ட் பெர்ஃபாமர்' என கணேஷ் வெங்கட்ராம் தேர்ந்தெடுத்தார் என்பதைக் கேட்பாரா?

* ஆரவ், ஆர்த்தி, ஜூலி என எவரிடமும் நம்பகத்தன்மை இல்லாமல்போவது பற்றிப் பேசுவாரா?

பார்க்கத்தானே போகிறோம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!