Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“வீட்ல தமிழ் பேசலைன்னா என் மாமியார் டென்ஷன் ஆகிடுவாங்க!” நெகிழும் நடிகை கல்யாணி

நடிகை கல்யாணி நடராஜன்

“குடும்பம்,  குழந்தைகள்னு பிஸியான அம்மாவான நான், சினிமாவுக்கு வருவேன்; அம்மா ரோல்ல நடிச்சு பெயர் வாங்குவேன்னு கனவிலும் நினைச்சுப் பார்த்ததில்லை. அதெல்லாம் நிஜமாகி இருக்கிறதைப் பார்த்தால், சந்தோஷமா இருக்கு" - உற்சாகமாகப் பேசுகிறார் நடிகை கல்யாணி நடராஜன். 'சைவம்', 'ஒரு நாள் இரவில்', 'ரெமோ' எனப் பல படங்களில் அம்மா ரோலில் நடித்து அசத்தியவர். 

"பூர்வீகம் தமிழ்நாடுதான். ஆனால், சில தலைமுறைக்கு முன்னாடியே வட இந்தியாவில் செட்டில் ஆகிட்டாங்க. மும்பையில வசிச்ச டிரெடிஷனலா, தமிழ்க் குடும்பக் கட்டுப்பாடுகள் கொண்ட ஃபேமிலியில வளர்ந்தேன். இங்கிலீஸ் லிட்ரேசர் முடிச்சுட்டு, டிராவல் கோர்ஸ் படிச்சேன். சில காலம் பெக்ரைன்ல டிராவல் ஏஜென்டா வொர்க் பண்ணினேன். கல்யாணமானதும் ஹோம் மேக்கரா சில வருஷம். அப்புறம். வீட்டுல இருக்க போரடிக்குதுன்னு, ஒரு தனியார் ஸ்கூல்ல டீச்சரானேன். பிறகு, வீட்டிலேயே டியூஷன் எடுத்தேன். அப்பவும் நடிப்பு பற்றியெல்லாம் எந்த எண்ணமும் இல்லை. 

நடிகை கல்யாணி நடராஜன்

மும்பையில், டிராமா நடத்தும் தமிழ்க் குடும்பங்கள் நிறைய இருக்காங்க. பத்து வருஷங்களுக்கு முன்னாடி கிடைச்ச அவங்களின் நட்பினால், மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல தயக்கமா இருந்துச்சு. 'உனக்குப் பிடிச்சிருந்தா தைரியமா செய்'னு கணவர் ஊக்கம் கொடுத்தார். அப்படி ஆரம்பிச்ச பயணத்துல நடிப்பில் ஆர்வம்கொண்ட கணவரும் டிராமாவில் பெர்ஃபார்ம் பண்ண ஆரம்பிக்க, தம்பதியரா கலக்க ஆரம்பிச்சோம். இப்போ, 'க்ளீன் சிலேட் கிரியேஷன்' எனத் தனி டிராமா குரூப் வெச்சிருக்கோம். அதுல கணவர் டைரக்‌ஷன் வேலையைப் பார்க்க, நான் லீடு ரோல்ல நடிச்சுட்டிருக்கேன்" என்கிற கல்யாணி நடராஜன், சினிமாவுக்குள் நுழைந்த கதையைச் சொல்கிறார்.

“என் டிராமா நடிப்பைப் பார்த்து, 'சேட்டை' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சுது. அடுத்து, 'சைவம்' படத்துக்காக ஒரு மாசத்துக்கும் மேல காரைக்குடியில் தங்கினேன். சினிமா ஃபீல்டு பற்றி நிறைய அனுபவம் கிடைச்சுது. 'ஒரு நாள் இரவில்' படத்தில் சத்யராஜ் மனைவியா நடிச்சது நல்ல ரீச் கொடுத்துச்சு. 'பிசாசு', 'தெறி', 'ரெமோ', 'குற்றம் 23' எனத் தொடர்ந்து பல படங்கள். சில தெலுங்கு மற்றும் ஒரு இந்தி படத்திலும் நடிச்சுட்டேன். 'தமிழ் சினிமாவின் புது க்யூட் அம்மா' எனப் பலரும் சொல்லி உற்சாகப்படுத்துறாங்க. 

நடிகை கல்யாணி நடராஜன்

தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்துக்குத் தனி அங்கீகாரமும் மரியாதையும் கொடுக்கப்படுது. மனோரமா, சரண்யா பொன்வண்ணன் ரெண்டுப் பேருமே அந்த அங்கீகாரம் பெற்றவங்க. அவங்களை மாதிரி வெரைட்டியா நடிக்கணும்னு ஆசை. நான் சினிமாவுக்கு தாமதமாகத்தான் வந்திருக்கிறேன். 'ரெமோ' படத்துல கீர்த்தி சுரேஷ் அம்மாவா நடிச்சப்போ நிறைய காமெடி, சென்டிமென்ட் அனுபவங்கள் கிடைச்சுது. அப்படி தினம் நிறைய அனுபவங்கள் கிடைக்குது" என்கிற கல்யாணி நடராஜன் விளம்பரப் படங்களிலும் நடித்துவருகிறார். 

"ஓடோனில் விளம்பரம், நடிகை த்ரிஷாவுடன் ஜிஆர்டி நகை விளம்பரம், அழகுச் சாதனப் பொருள்கள், துணிக்கடை, வீட்டு உபயோகப் பொருள்கள் என நிறைய விளம்பரங்களில் நடிச்சிருக்கேன். எல்லாமே பாசிட்டிவ்தான். ஆனா, இப்போ அதிகமா டெலிகாஸ்ட் ஆகுற ஓடோனில் விளம்பரம் மட்டும் நெகட்டிவ் மாதிரியான ரூபம் (பலமாகச் சிரிக்கிறார்). சினிமா, விளம்பரம் என நிறைய நடிச்சாலும், டிராமாவில் நடிக்கும்போது பெரிய திருப்தி கிடைக்குது. எங்க டிராமாவில் நடிக்கிறவங்க பெரும்பாலானோர் ஆபீஸ் வேலைக்குப் போறவங்க. மாலை நேரங்களில்தான் எங்க பயிற்சி இருக்கும். மாசத்துக்கு ஒருமுறை டிராமாக்களை நடத்துவோம். 

நடிகை கல்யாணி நடராஜன்

சார்டட் அக்கவுன்டடா பெரிய நிறுவனத்தில் வொர்க் பண்ற கணவர் நடராஜனும், சின்னப் பையன் ஷரந்தும் ஒரு சில சினிமாவில் நடிச்சிருக்காங்க. பெரிய பையன் சித்தாந்த், காலேஜ் படிக்கிறான். நாற்பது வயசுக்குப் பிறகு நடிக்க ஒத்துழைப்புக் கொடுத்து, உற்சாகப்படுத்தும் என் மாமியாரின் அரவணைப்பு ரொம்பப் பெருசு. நல்லது கெட்டது சொல்லி, ஒவ்வொரு விஷயத்தையும் பக்குவப்படுத்தும் அவங்க இல்லைன்னா என் லைஃப் இவ்வளவு ஸ்மூத்தா போகாது. ஆனா மாமியாருக்கு நானும் கணவரும் வீட்டுல தமிழ்ப் பேசலைன்னா கோபமாகிடுவாங்க. 'மும்பையில் வசிச்சாலும், தமிழை மறந்திடக்கூடாது'னு சொல்லிட்டே இருப்பாங்க. அன்பு சூழ் உலகத்தில் சிறகடிச்சுப் பறந்துட்டிருக்கேன்" எனச் சிலிர்ப்புடன் புன்னகைக்கிறார் கல்யாணி நடராஜன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்