‘யார்னு கண்டுபிடிச்சுட்டேன்!' பைரஸி நபரைக் கண்டுபிடித்த ‘துப்பறிவாளன்’ விஷால்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘துப்பறிவாளன்’. பிரசன்னா, வினய், சிம்ரன், பாக்கியராஜ், ஆன்ட்ரியா மற்றும் அனு இம்மானுவேல் என படத்தில் செலக்டிவ் காஸ்டிங். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. யார் அந்த பைரஸி நபர் என்பதையும், லட்சுமிகரமான அந்த நபர் பற்றியும், திருமணம் பற்றியும் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் விஷால்.

விஷால்

“முதல் படம் மாதிரியான ஃபீல் தான் இருக்கு. ஆனா இதுவரைக்கும் ஒன்பது படம் பண்ணிட்டேன். என்னுடன் பணியாற்றிய நடிகர்களில் எனக்கு அதிக ஒத்துழைப்பு கொடுத்த நடிகர் விஷால்தான். இந்தப் படத்தின் கதையைச் சொல்லி முடிக்கும்போது என்னைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தான். பெரிய ஹீரோ அவன். ஆனாலும் ‘அவன் இவன்’னு கூப்பிடுறதுக்கு எனக்கு இடம் கொடுத்தான். என்னுடைய தம்பி. என்னுடைய அம்மாவின் வயிற்றில் பிறந்த என் தம்பிதான் விஷால். எனக்குத் தெரிஞ்சு ரொம்ப சின்சியரான நடிகர். எனக்காக இந்தப் படம் ஓடணும்னு அவசியம் இல்லை. ஆனா என்னுடைய தம்பிக்காக இந்தப் படம் சிறப்பா ஓடணும்” என்று பேசினார் இயக்குநர் மிஷ்கின். 

விஷால் பேசும்போது, “ ஒவ்வொரு தயாரிப்பாளரும் யோசிக்கிற விஷயம், தரமான படம் பண்ணனுங்கிறதுதான். அந்த வகையில் ‘துப்பறிவாளன்’ நிச்சயம் எனக்கு நல்ல பெயர் வாங்கித் தரும். ஒரு நடிகனா, தயாரிப்பாளரா இந்தப் படம் மிகப்பெரிய ஊக்கம் கொடுத்திருக்கு. நானும், மிஷ்கின் சாரும் எட்டு வருஷமா சேர்ந்து படம் பண்ணணும்னு யோசிச்சிட்டு இருந்தோம். ஆனா அதுக்கான வாய்ப்பு அமையவே இல்லை. என்னையும் மிஷ்கினையும் சைக்கோனு தான் சொல்லுவாங்க. ‘இந்த ரெண்டு சைக்கோவும் சேர்ந்து எப்படி படம் பண்ணப்போறாங்க’னு தான் வெளியில பேசிப்பாங்க. அதையெல்லாம் தாண்டி இந்தப் படத்தை முடிச்சிருக்கோம். என்னுடைய வாழ்க்கையிலேயே மிகப்பெரிய பொக்கிஷமா எனக்கு கிடைச்ச மனிதர் மிஷ்கின். ஆரம்பத்தில் மிஷ்கின் ஸ்டைலுக்காகதான் கண்ணாடி போட்டிருக்கார்னு நினைச்சிட்டு இருந்தேன்.  ஆனா அவர் கண்ணுல ஒரு பவர் இருக்கு. ஷூட்டிங் ஸ்பாட்டுல துப்பறிவாளனா முதல்ல இதைத்தான் கண்டுப்பிடிச்சேன்.

விஷால்

படக்குழுவில் இருக்குற எல்லோருமே பேய் பிடிச்ச மாதிரிதான் இருப்பாங்க. பேய் மாதிரி வேலை செய்வாங்க. எல்லா படத்துக்குமே ரிகர்சல் எடுக்குறது வழக்கம். ஆனா இந்தப் படத்திற்கு கொஞ்சம் அதிகமாகவே உழைச்சிருக்கேன். ஆகஸ்ட் இரண்டாவது வாரம் துப்பறிவாளன்  இசைவெளியீட்டு விழா நடக்கவிருக்கு. அந்த நாள் முக்கியமான அறிவிப்பு ஒண்ணு கொடுக்கப்போறேன். துப்பறிவாளனா  நான் கண்டுப்பிடிச்ச விஷயம். யார் அந்த பைரஸி நபர்னு கண்டுப்பிடிச்சுட்டேன். ‘நீ யாருனு எனக்குத் தெரியும். நீ எங்க இருக்கேன்னும் தெரியும். நான் யார்னு உனக்குத் தெரியும். நம்ம ரெண்டு பேர் யார்னு சீக்கிரமே இந்த உலகத்துக்குத் தெரியப்போகுது’ என்று பொடி வைத்து பேசினார் விஷால்.

“காமராஜர் மாதிரி என்னை இருக்கணும்னு சொல்லுறாங்க. சத்தியமா நேர்மையா நடந்துப்பேன். ஆனா, எனக்கும் கல்யாணம் ஆகணும். பைரஸி விஷயம் வெளிய சொன்னேன்னா, அப்பா ஒரு பக்கம் தேடி வருவார். இன்னொரு பக்கம் ‘லட்சுமிகரமான...’ ஒருத்தங்க தேடிவருவாங்க. தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் இரண்டுக்குமே நான் சொன்ன விஷயங்களைத் தொடர்ந்து செய்துமுடிப்பேன். நல்லதே நினைப்போம், நல்லது மட்டுமே செய்வோம்” என்று முடித்தார் விஷால்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!