Published:Updated:

செவ்வியல் தன்மையுடன் மக்களால் நினைவுகூறப்படும் சிவாஜி!

தமிழ்ப்பிரபா
செவ்வியல் தன்மையுடன் மக்களால் நினைவுகூறப்படும் சிவாஜி!
செவ்வியல் தன்மையுடன் மக்களால் நினைவுகூறப்படும் சிவாஜி!

ஒரு பேட்டியில் சிவாஜியின் இறப்பைப் பற்றி கமல்ஹாசன் நினைவு கூறுகையில் அவரின் திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் அமையவில்லை என்கிற ஆதங்கத்தை `சிங்கத்துக்கு தயிர்சாதம் கொடுத்தே கொன்னுட்டாங்க' என்று மேற்கோள்  காண்பித்து வருந்தியிருப்பார் .

சிவாஜியின் நினைவுநாளான இன்று, தமிழ் சினிமா அவரை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லையா எனச் சிந்தித்துப் பார்க்கிறபோது கமலின் கூற்று, சற்று மிகையாகவேத் தோன்றுகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடித்ததில் சிவாஜி முதன்மையானவர். வித்தியாசம் என்பதையும் தாண்டி அவர் நடிப்புக்கான தீனியை அன்றைய இயக்குநர்கள் சமைத்துக் கொடுக்கவே செய்தார்கள். எழுதி வைக்கப்பட்ட கதைகளில் அவர் நடித்தார் என்பதிலிருந்து அவருக்காகக் கதைகள் எழுதப்பட்டன. சிங்கத்துக்கு தயிர்சாதம் கொடுக்கப்பட்டிருந்தால், அதில் சிவாஜியின் பங்கும் இருந்தது என்பதையும் சேர்த்து மதிப்பிட வேண்டும்.

தவிர, சிவாஜி இந்த மதிப்பீடுகளைத் தாண்டியவர். பாடல்கள் மட்டுமே முழு நீள சினிமாவாக வெளிவந்த காலத்திலிருந்து அதில் வசனங்கள் அதிகமாக இடம்பெற்று நவீன சினிமாவாகப் பரிணாமம் அடையத் தொடங்கியபோது தன் ஆட்டத்தை தொடங்கியவர் சிவாஜி. வசனம் பேசி நடிப்பதே புதுமையாக இருந்த சமயத்தில் அவருடைய வசன உச்சரிப்புகளில் தமிழ் சினிமா அவரை உச்சி முகர்ந்தது. வாய்மொழியாகவும் ஏடுகளிலும் அறிந்துவந்த சரித்திர நாயகர்களை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துவதில் சிவாஜிக்கு முக்கியப் பங்குண்டு. 

அண்ணா, கலைஞர் போன்றோரின் அனல்பறக்கும் வசனங்கள்கொண்ட பகுத்தறிவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்களை மக்களிடம் கொண்டுசேர்த்தவர். அதே சமயம் புராணங்களும் இதிகாசங்களும் சினிமாவாக எடுக்கப்பட்டபோது, படைப்பாளிகளின் முதல் தேர்வு சிவாஜி கணேசனாகவே இருந்தார். அவரின் நடிப்புத்தன்மை தண்ணீரைப் போன்றது. எந்தப் பாத்திரத்தில் ஊற்றினாலும் அதன் வடிவாகவே மாறக்கூடியவராக இருந்தார்.

மக்களின் துன்பங்களைப் போக்குபவராக, ஏழைப் பங்காளனாக, வெகுஜனங்களின் அபிப்பிராயத்தை வெல்வது மாதிரியான வசனங்களும், பாடல்களும், காட்சிகளும் அமைக்கப்பெற்று எம்.ஜி.ஆர் கோலோச்சிக்கொண்டிருந்தார். எம் .ஜி.ஆருக்கும் மக்களுக்கும் இடையே இந்த மாதிரியான அதீத உணர்ச்சிக்கு இடம் வகுக்கக்கூடிய விஷயங்கள் இருந்தன. ஆனால், சிவாஜி முழுக்கவும் தன் நடிப்பாற்றலாலும் விதவிதமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் மக்கள் மனதை வென்றவர். தன் திரைப்படங்களில்  கதாநாயகப் பிம்ப வழிபாடுகளை முன்னிறுத்தாமல் அவர் நடித்துவந்தது அவருக்குப் பிறகு வந்த நடிகர்களுக்கு ஒரு செயலூக்கத்தை அது அளித்தது.

பேசி நடிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் பாடல் வரிகளுக்கு உதட்டை அசைப்பதிலும் இருக்க வேண்டும் என்பதில் தன்னை அறியாமலேயே ஒரு பாடமாக அவர் விளங்கினார். அவருக்கு முந்தைய காலத்தில் பாடலை சொந்த குரலில் பாடியவர்களே திரையிலும் பாடியதால் வரிகளுக்கு ஏற்றாற்போல் உதட்டை அசைப்பது சவாலானதாக இல்லை. அந்தச் சவாலில் முதல் தலைமுறையாக இருந்த அவர் சிறப்புற எதிர்கொண்டார். சொற்களின் அர்த்தத்தை முழுவதும் உள்வாங்கி வெறும் வாயை மட்டுமின்றி கண்களிலும் பாடல்களின் பொருளை வெளிப்படுத்தினார். சிவாஜியின் எந்தப் பாடல்களை  எடுத்துப்  பார்த்தாலும் இதை உணர முடியும். உதாரணத்துக்கு, சில பாடல்களை இங்கே பட்டியலிடுகிறேன். அதைக் கேட்ட பிறகு மேற்கூறியதை இன்னொரு முறை வாசித்துப்பாருங்கள். ஓர் ஒற்றுமையை உணர முடியும்.

1) என்னை யாரென்று எண்ணி எண்ணி... (பாலும் பழமும்)

2) பொன்னொன்று கண்டேன்.. (படித்தால் மட்டும் போதுமா) 

3) எங்கே நிம்மதி (புதிய பறவை)

4) தெய்வமே தெய்வமே  (தெய்வ மகன் )

5) நீயும் நானுமா  (கெளரவம்)

‘அவரின் நடிப்பு, யதார்த்தத்தைக் காட்டிலும்  மிகையானது' என்றொரு கருத்து புழங்கி வருகிறது. சரியாக அணுகிப்பார்த்தால் மிகையான நடிப்பு என்று அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனம்,  அவருக்கு அடுத்த தலைமுறை ரசிகர்கள்  வைத்ததாகவே இருக்கும். காலத்துக்கேற்றாற்போல் ரசனைகள் மாறுவது தவிர்க்க இயலாதது. அந்த வகையில் முந்தைய தலைமுறை  படைப்புகள் மீதும் படைப்பாளிகள் மீதும் வைக்கப்படும் விமர்சனங்களைத் தாண்டி செவ்வியல்தன்மையுடன் மக்களால் நினைவுகூறப்படுவர் சிவாஜி என்பதில் ஐயமில்லை. 

இந்த மிகை நடிப்பை இன்னொரு விதத்தில் ஆராய்கிறபோது அவர் திரை நடிப்புக்கு வந்த பின்புலத்தையும் பரிசீலிக்கவேண்டியிருக்கிறது. படிப்பைவிட நடிப்பில் தன்னால் சிறந்து விளங்க முடியுமென்று நினைத்தவர் மிகச்சிறிய வயதிலேயே பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு ஓடிப்போய் ஒரு நாடக கம்பெனியை வந்தடைந்தார். “அப்பா அம்மா இல்லாத அநாதை" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பாய்ஸ் கம்பெனியில் நாடங்களில் நடித்தார். பல ஆண்டுகால நாடக அனுபவத்துக்குப் பிறகே அவர் சினிமாவுக்கு வந்தார். கூத்து, நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கு வரும் கடையிருக்கைப் பார்வையாளனுக்கும் உணர்வுகளைக் கடத்த வேண்டும் என்பதில் குரலை உயர்த்திப் பேசுவதும் மிகையான உடல்மொழியை வெளிப்படுத்துவதும் இயல்பானதே. அந்த மரபில் ஊறிப்போய் சினிமாவுக்கு வந்த சிவாஜி. அதையொற்றி இருப்பது ஆச்சர்யமில்லை. அதே சமயம்  `சிவாஜியைப்போல  நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களிடமும் இதே மிகை உணர்ச்சி நடிப்பு வெளிப்பட்டதா?' எனக் கேட்டால்,  இல்லைதான். ஆனால், அவர்களெல்லாம் சிவாஜி அளவுக்கு இன்றளவும்  பேசப்படுகிறார்களா என்பதையும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.

எம்.ஜி.ஆர் போன்ற மக்கள் செல்வாக்கு மேலோங்கி இருந்தவரின்  சமகாலத்தில் தொடர்ந்து ஏழாண்டுகள் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியவர் சிவாஜி. கட்சி அரசியலில்  சேர்ந்து  தன்னால் சோபிக்க முடியாவிட்டாலும், அரசியலில் இறங்குவதற்கு முன்பும் பின்பும் மக்கள் நலனில் அவர் அக்கறைகொண்டிருந்தார் என்பது அவர் பற்றிய செய்திகளை அறிய வருகிறபோது மறுப்பதற்கில்லை.

அவரின் நினைவுநாளான இன்று, அவர்தம் கலைத் திறமையைக்கொண்டு மக்களுக்கு ஆற்றிய சிலவற்றைத் தெரிந்துகொள்வது அவருக்கான அஞ்சலியை முழுமையடையச்  செய்வதாக இருக்கும். 

* மதிய உணவுத் திட்டத்துக்கு  முதல் நபராக நன்கொடையாக  ஒரு லட்சம் ரூபாயை  அப்போதைய பிரதமர் ஜவஹர்லால்  நேருவிடம் தந்தார்.

* 1962-ம் ஆண்டில் சென்னையில் வெள்ளம் வந்தபோது உறைவிடத்தையும் உடமைகளையும் இழந்துத்  தவித்த குடிசைவாழ்  மக்களுக்கு உணவுப் பொட்டலங்களும் பண உதவியும் செய்தார்.

* `வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகத்தை பல இடங்களில்  மேடையேற்றி  அதில் கிடைத்த 32 லட்சம் ரூபாய்க்கும் மேலான தொகையை பல நல்ல காரியங்களுக்குக் கொடையாக வழங்கினார்.

* பாகிஸ்தானுடன் எல்லைத் தகராறு  நடந்தபோது எல்லையில் பணியாற்றும்  ராணுவ வீரர்களுக்காக கலை நிகழ்ச்சி நடத்தி,  சுமார் 17 லட்சம் ரூபாயை அரசுக்கு அளித்தார்.

*இலங்கைத் தமிழர்களுக்கு உதவியாக  1,10,000 ரூபாய்  கொடுத்தார்.

நடிப்பு சம்பந்தமாக பல விஷயங்களில் நடிகர்களுக்கு முன்னோடியாக இருந்த அமரர் சிவாஜி கணேசன், திரைக்கு வெளியேயும் ஒரு கலைஞனுக்கு  சமூகப்  பணிகளில் தொடர்பும் பொறுப்பும் இருக்கிறது என்பதற்கும் முன்னோடியாகத்தான்  வாழ்ந்தார்.

தமிழ்ப்பிரபா