Published:Updated:

‘உறவோடு விளையாடு’ - ஒன்பது விருதுகளை அள்ளிய நாடகம்!

உ. சுதர்சன் காந்தி.
‘உறவோடு விளையாடு’ - ஒன்பது விருதுகளை அள்ளிய நாடகம்!
‘உறவோடு விளையாடு’ - ஒன்பது விருதுகளை அள்ளிய நாடகம்!

ன்றைய குடும்பங்களில் நடக்கும் யதார்த்தங்களையும் பிரச்னைகளையும் கதாபாத்திரங்களின் உணர்வுகள் வழியே மிக அழகாகப் பதிவிட்டிருக்கிறார் பூவை மணியன். `இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் புண்ணியங்கள், அடுத்த சந்ததியினருக்குப் போகும். ஆனால், நாம் செய்யும் பாவங்கள், நமக்கே வந்து சேரும். அதுவே கர்மா` என்பதையே கருவாகக்கொண்டு எழுதப்பட்ட இந்தக் கதையை, ராஜாராம் இயக்கியிருக்கிறார்.

பிரபல விளம்பர கம்பெனி நடத்திக்கொண்டிருக்கும் கண்ணன், தான் நினைத்த பெண்களை அடைய, செல்போன் வாங்கிக் கொடுத்து அவர்களிடம் பேசியே அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்கிறார். வேறொரு கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கும் காயத்ரி, விருப்பப்பட்ட கண்ணனை தன் அப்பாவை மீறி மணந்து அவரை நல்லவனாக்க முயற்சிக்கிறாள். இடையில், கண்ணனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவளின் தாயாக வரும் ஆண்டாள் (கவுதமி), கண்ணனின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வர நினைக்கும் காட்சிகள் அரங்கத்தில் அனைவரையும் ரசிக்கவைத்தன. ஒரு பெண் தன் கணவனால் ஏமாற்றப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்த காயத்ரி, அதற்குப் பரிகாரமாகத் தன் கருவைக் கலைப்பதாகவும் கர்ப்பப்பையை அகற்றுவதாகவும் அதிர்ச்சி முடிவை எடுக்கிறாள். இறுதியில் கதையின் கருவைச் சொல்லி நாடகம் முடிகிறது.

பழிவாங்கும் காட்சிகளில், குகபிரசாத்தின் இசை அந்தக் காட்சிகளுக்குக் கூடுதல் பலம். `வானளவு உயர்ந்த கட்டடம்தான் தெரியும். அதைத் தாங்கி நிற்கும் அஸ்திவாரம் யாருக்கும் தெரியாது”, “கறந்த பாலையும் பிறந்த குழந்தையும் தவிர, எல்லாத்துலயும் குறை உண்டு” போன்ற வசனங்கள் கதைக்கு ப்ளஸ். மேலும், கிராமத்துப் பெண்ணாக ஆண்டாள் மாறுவேடத்தில் வரும்போது சிந்திக்கக்கூடிய நகைச்சுவைக் காட்சிகளுக்கு அரங்கமே அதிர்ந்தது.

மே மாதம் நடைபெற்ற கோடை நாடக விழாவில், அனைவராலும் பேசப்பட்டு ஒன்பது விருதுகளைப் பெற்ற இந்தக் கதையின் ஆசிரியரிடம் இந்த நாடகம் பற்றிக் கேட்டோம்...

“மேடை நாடகங்களைப் பொறுத்தவரையில், பெற்றோர் குழந்தைகளையே சம்பந்தப்படுத்தி எழுதுவார்கள். நான் இந்தக் காலத்தில் நடக்கும் சில விஷயங்களை மையமாக வைத்து எழுதினேன். சினிமா மோகம் வந்த பிறகு, மேடை நாடகங்களுக்கு மதிப்பு குறைந்துவிட்டது. ஆக, சினிமாவுக்கு நிகராக ஒரு கதை எழுதி, மக்களுக்கு அங்கு கிடைப்பதை இங்கேயே கிடைக்கவைக்க எழுதியதுதான் இந்தக் கதை. சினிமாவைப்போல காட்சிகள் வேகமாகச் செல்லும். சினிமாவையும் மேடை நாடகத்தையும் கலந்த ஒரு கதைதான் `உறவோடு விளையாடு`'' என்றார்.

“நடிகர்களைத் தேர்தெடுத்த விதம் பற்றி..''

“இந்தக் கதையின் வில்லன், ஹீரோ ரெண்டுமே கிரீஷ்தான். இதுவரை, விவேகானந்தர், ராமானுஜன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்த இவரை, கண்ணன் என்கிற நெகட்டிவ் ரோலில் நடிக்கவைத்தோம். அது பெரிய அளவில் பாராட்டப்பட்டது. ஆண்டாள் கேரக்டருக்கு நிறையபேரிடம் கேட்டோம். ஆனால், நாடகத்தில் 40 நிமிடம் கழித்து வருவதால், இந்த கேரக்டரை நாடகக் கலைஞர்களே செய்ய மறுத்தனர். அந்தச் சமயத்தில்தான் பலர் கவுதமியின் பெயரைப் பரிந்துரைத்தனர். கதையைக் கேட்ட அவர், உடனே `நானே பண்றேன்' என்றார். நாடகத்துக்கு இவரின் உழைப்பு இன்றியமையாதது. நாடகம் முதன்முதலாக அரங்கேரும்போது 102 டிகிரி காய்ச்சலுடன் நடித்தார். எங்கள் நாடகத்துக்கு இவர் மிகப்பெரிய பலம். அதேபோல் மற்ற நடிகர்களும் பங்கெடுத்து நடித்ததற்குக் கிடைத்துதான் ஒன்பது விருதுகள்'' என்றார்.

“நாடகத்தில் ட்ரெண்டியான பல விஷயங்கள் உள்ளதே!''

“ஆம், இப்போதுள்ள மக்கள் அதைத்தானே அதிகம் விரும்புகிறார்கள். அறிவுபூர்வமான நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். மேலும், கதாநாயகன் விளம்பர கம்பெனி வைத்துள்ளதால் `ப்ரீத்திக்கு நான் கேரன்டி', `கறை நல்லது' போன்ற விளம்பர வசனங்களைச் சேர்த்தோம். அதற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது”.

“புண்ணியம், பாவம் எனக் கதையை முடித்திருக்கிறீர்களே?''

“கடவுளை நம்பினாலும் நம்பாவிட்டாலும் கர்மா என்பது நிச்சயம் இருக்கிறது. காஞ்சி பெரியவர் சொன்னதும் இதுதான், புண்ணியம் செய்தால் தன் சந்ததியினருக்குச் செல்லும். பாவம் செய்தால் நமக்கே வந்து சேரும். ஆக, அதையே கதைக்கருவாக வைத்துள்ளோம்”.

“இந்த நாடகத்துக்கு என்னென்ன விருதுகள் கிடைத்துள்ளன?”

“கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், 28 வருடங்களாக நாடகங்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்குவித்துவருகிறது. இந்த வருடத்துக்கான சிறந்த நாடகம், சிறந்த கதை, சிறந்த வசனம், சிறந்த இயக்கம், சிறந்த கதாநாயகன், சிறந்த குணசித்திர நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த இசை, சிறந்த ஒப்பனை என ஒன்பது விருதுகள் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு எட்டாவது நாடகம். இந்த `உறவோடு விளையாடு' நாடகம் நிறைய இடங்களில் இன்னும் அரங்கேற இருக்கிறது. இதன் அரங்கேற்றம் முழுவதும் முடிந்த பிறகுதான் அடுத்த கதை எழுதணும்'` என்று பெருமையுடன் முடிக்கிறார் பூவை மணியன் .

இவரின் அடுத்த படைப்புக்கும் விருதுகள் கிடைக்க வாழ்த்துகள்.

உ. சுதர்சன் காந்தி.

Journalist @ Cinema Vikatan