Published:Updated:

‘இனி என் படங்களில் மது, சிகரெட் காட்சிகள் இருக்காது!’ - ஹிப் ஹாப் ஆதி

முத்து பகவத்
‘இனி என் படங்களில் மது, சிகரெட் காட்சிகள் இருக்காது!’ - ஹிப் ஹாப் ஆதி
‘இனி என் படங்களில் மது, சிகரெட் காட்சிகள் இருக்காது!’ - ஹிப் ஹாப் ஆதி

தமிழ்நாட்டில் மொத்தமாக 250 திரையரங்குகளில் மட்டுமே ‘மீசைய முறுக்கு’ வெளியானது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அதன் எண்ணிக்கை அப்படியே இரண்டு மடங்கு அதிகமாகியிருக்கிறது. இதனால் சந்தோஷத்திலும் ஆச்சரியத்திலும் இருக்கிறது ‘மீசையமுறுக்கு’ டீம். கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், இயக்கம், நடிப்பு என அனைத்துமே ஹிப்ஹாப் ஆதி. தயாரிப்பு மட்டும் சுந்தர் சி. படம் முழுக்க புதுமுகம், அதுவும் யூ டியூப் ஸ்டார்களே நடிகர்கள்.

படம் குறித்து  சுந்தர் சி பேசியது:

“16 வயதினிலே படத்தில் ஒரு சீன். கமலிடம் ஸ்ரீதேவி கேட்பாங்க. ‘என்ன உன்ன எல்லோரும் கோபாலகிருஷ்ணன்னு கூப்பிடுறாங்களா’ அதுக்கு கமல், ‘ நான் மட்டும் தான் அப்படி கூப்பிடுறேன். எல்லோருமே சப்பாணினு தான் கூப்பிடுறாங்க’னு சொல்லுவார். அதே மொமன்ட்டுதான் எனக்கும். இந்தப் படம் தொடங்கி ரிலீஸ் வரைக்கும், படத்துமேல நம்பிக்கை வச்சது நான் மட்டும்தான். இதோட ஓபனிங் பலருக்கும் ஆச்சரியமா இருக்கும்னு சொல்லிட்டு இருந்தேன். ஆனா யாருமே நம்பலை. ஏன்னா, ஆதியோட பவர் என்னென்னு எனக்குதான் தெரியும். 

ஒரு சின்ன எடுத்துக்காட்டு.... நானும் ஆதியும் ஷூட்டிங் விஷயமா பேச ஒரு காலேஜுக்கு போனோம். அலுவலகத்தில் இருந்தவங்க எல்லோருமே 40+, வந்து என்னைப் பார்த்துப் பேச ஆரம்பிச்சுட்டாங்க. எப்படி என் பவர்னு ஆதியைக் கிண்டல் பண்ணேன். வேலை முடிஞ்சு வெளிய வந்தா, ஒட்டுமொத்த காலேஜும் ஆதிக்காக வெயிட்டிங்.  என்னைய ஒரு பய திரும்பிப் பார்க்கலை. நான் விட்ட அதே லுக்கை ஆதி அப்போ என்னைப் பார்த்து விட்டார். இளைஞர்களுக்கு ஆதி மேல இருக்குற ஈர்ப்பு தான், ‘மீசைய முறுக்கு’ படத்திற்கு நல்ல ரீச் கொடுத்திருக்குனு நினைக்கிறேன். தமிழ்நாட்டில் மொத்தம் 250 திரையரங்கில்தான் படத்தை போட்டோம். மூன்றே நாளில் டபுள் மடங்காக திரையரங்குகளில் திரையிடப்படுது. இதுதான் படத்தோட உண்மையான வெற்றி. 

என்னுடைய 22 வருட கெரியரில், படம் ரிலீஸ் அன்னைக்கி விநியோகஸ்தர் ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய முதல் படம் இதுதான். பாகுபலி படத்திற்குப் பிறகு தியேட்டருக்கு மக்கள் வருவது குறைஞ்சிடுச்சு. அதுவும் ஜி.எஸ்.டி.யினால சினிமாவுக்கு பெரிய பாதிப்பு. சினிமா அழிஞ்சிடுச்சுனு ஒரு மூடநம்பிக்கை பரவிடுச்சு. ஜி.எஸ்.டி.யையும் தாண்டி ‘விக்ரம் வேதா’, ‘மீசைய முறுக்கு’ இரண்டுமே மிகப்பெரிய வெற்றி. ஏன்னா மக்கள் மறுபடியும் தியேட்டர் வர ஆரம்பிச்சுட்டாங்க. நிச்சயமாகவே சினிமாவுக்கு இது நல்ல அறிகுறி” என்றார் சுந்தர்.சி.

இதுகுறித்து ஹிப்ஹாப் ஆதி, “படம் ரிலீஸான முதல்நாள் விநியோகஸ்தர் முருகானந்தம் அண்ணா, எனக்கு மாலை போட்டு பாராட்டினார். வழக்கமா படம் ரிலீஸானாலே இப்படி பண்ணுவாங்கனு நினைச்சேன். அப்போ ‘இது ஒரு மிராக்கிள், இதை நீ நோட் பண்ணிக்கோ. இது இனிமேல் உனக்கு நடக்க வாய்ப்பில்லை’னு சுந்தர் அண்ணா சிரிச்சிட்டே சொன்னார். சினிமா மட்டுமல்லாம நிறைய இடத்தில் என்னை ஊக்கப்படுத்தியவர் சுந்தர் அண்ணாதான்.  ஒரு படம் நல்லா இருக்குனு தியேட்டருக்கு வருவது ஒரு பக்கம்னா, நல்லா இருக்கோ, நல்லா இல்லையோ வந்து பார்க்கணும்னு நினைக்கிறது இன்னொரு பக்கம். எங்க மேல நம்பிக்கை வச்சி தியேட்டருக்கு மக்கள் வந்ததே ரொம்ப பெரிய விஷயம். இனி வரும் என்னுடைய படங்களிலும் குடி, சிகரெட்னு இல்லாம, பாசிட்டிவ்வா இருக்கும்னு உறுதியா சொல்லிக்கிறேன். 

குறும்படம் எடுத்துட்டு இருந்த பலரும் மிகப்பெரிய இயக்குநரா மாறியிருக்காங்க. அதுமாதிரி யூ டியூப் ஸ்டார்ஸ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் ட்ரெண்ட் வர ஆரம்பிச்சிடுச்சு. இந்தப் படத்தில் நடிச்ச எல்லோருக்கும் தனி அடையாளம் கிடைக்க ‘மீசைய முறுக்கு’  நிச்சயம் உதவும். இந்தப் படம் பல திறமைகளுக்குக் கிடைத்த வெற்றி” என்று நம்பிக்கையுடன் பேசினார் ஹிப்ஹாப் ஆதி. 

முத்து பகவத்

Cinema Reporter
க.பாலாஜி