Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

ஆடிட்டர் கனவு முதல் காமெடி நடிகை வரை - தேவதர்ஷினி : கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 15

கோடம்பாக்கம் தேடி..! - 15

முந்தைய பாகங்களை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

குணச்சித்திர, காமெடி வேடங்களுக்குப் பெயர்போன அவர் அறிமுகமானது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக. 1997-ல் எத்திராஜ் கல்லூரியில் பி.காம் படித்துக்கொண்டிருந்தவர் ஜெ.ஜெ டி.வி, சன் டி.வி-களின் நிகழ்ச்சிகளைத் தொகுக்கத் தொடங்கினார். சென்னையில் இருப்பவர்களே, 'என்னது நடிக்கப்போறியா..?' என ஆச்சர்யமாகக் கேட்கும் காலம் அது. எத்திராஜ் கல்லூரிப் பெண்கள் இதில் கொஞ்சம் முன்னேறிப் பொதுச் சமூகக் கட்டுகளை உடைத்து வெளியே வரத் தொடங்கினார்கள். 

சன் டி.வி-யில் நிகழ்ச்சிகளைத் தொகுத்த உமா பத்மநாபன் இவரது புகைப்படம் கேட்கவும் கொடுத்திருக்கிறார். கவிதாலயா கிருஷ்ணன் இவரது புகைப்படம் பார்க்க, 'கனவுகள் இலவசம்' வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. 'மர்மதேசம்' சீரியல் இவரது திரைப் பயணத்துக்கான திறவுகோல். பள்ளி, கல்லூரியில் முதல் மாணவியாகத் திகழ்ந்தவர் ஆடிட்டர் கனவைத் தள்ளிப் போட்டுவிட்டு சின்னத்திரையில் தடம் பதிக்கத் தயாரானார். தந்தை கல்லூரி முதல்வர், தாய் பள்ளி முதல்வர் என ஓரளவுக்கு பிரச்னை இல்லாத சூழல் என்பதால் கனவை நோக்கிய பயணம் தெளிந்த நீரோடையைப் போல் ஆனது. ஆடிட்டர் கனவை எப்போதும் எட்டலாம் என நடிக்கத் தொடங்கியவர், இப்போது சைக்காலஜி படித்திருக்கிறார். நடிப்புக்குப் பிறகு ஆடிட்டிங்கில் இறங்கும் எண்ணமும் இருக்கிறதாம். 

தேவதர்ஷினி

கனவுகள் இலவசம்' தொடர் சிறியது என்பதால் விடுமுறை நாள்களில் நடிப்பதே போதுமானதாக இருந்திருக்கிறது. ஆனால், 'மர்மதேசம்' ஒன்றரை ஆண்டு தொடரும் சீரியல். கல்லூரி முடித்ததும் மாலை வேளைகளில், கல்லூரி விடுமுறை நாள்களில் நடிக்க ஆரம்பித்தவர், பிறகு நடிப்பை முதன்மையாக்கி தொலைநிலைக் கல்வியில் எம்.காம் படிக்கும் நிலை உருவானது. ஆரம்ப காலத்தில் ஃப்ரேம் பொசிஸனுக்குள் நிற்கத் தெரியாது... ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் சரியாக வராது... டயலாக் டெலிவரியை மட்டுமே கையில் இருக்கும் அம்பாக நினைத்துத் திரைநாணேற்றினார்.  அத்தனையையும் கற்றுக்கொண்டது அதன்பிறகுதான்.

நடிக்கப் போவது, அலுவலகத்துக்கு தினமும் வேலைக்குப் போவதைப்போல அத்தனை எளிதானதொன்றுமில்லை. திரையுலகின் மீதான ப்ரியம் எல்லாவற்றையும் தாங்க வைத்தது. 'மர்மதேசம்' ஷூட்டிங்கில் பார்த்த நடிகர் சேத்தனை 2002-ல் கரம்பிடித்தார். இவரின் பயணத்திற்குப் பின்னே இவரது கணவரும் உடன் நிற்கிறார். 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' நகைச்சுவைத் தொடரில் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய நடிகையானார். தேவதர்ஷினி என்றாலே கலகலப்பான பாத்திரமாக ரசிகர்களின் மனதில் பதிந்து போனது. வீட்டிலிருக்கும் பெண்கள் தேவதர்ஷினியைத் தங்களுடைய பிம்பமாகவே பார்க்கத் தொடங்கினார்கள். சின்னத்திரையில் மின்னிய காலத்தில் சினிமா வாய்ப்புகள் வந்தாலும், நேரமின்மையால் தள்ளிப்போட்டவருக்கு 'பார்த்திபன் கனவு' திரைப்படம் அடித்தளமாகிறது. முதல் படத்திற்கே தமிழ்நாடு அரசின் விருது பெறுகிறார். 'காக்க காக்க', எனக்கு 20 உனக்கு 18' எனச் சில படங்களிலும் கமிட் ஆகிறார். சினிமாவில் நிகழ்கிற ஒரு துன்பியல் உண்மை... ஒரு வருடம் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தாலே போதும்... 'அவங்க இப்போ நடிக்கிறதையே விட்டுட்டாங்களே' எனக் கிளப்பிவிட்டு விடுவார்கள். அவற்றையெல்லாம் கடந்துவந்து தன்னை நிரூபிக்க நிறையப் போராட வேண்டியிருக்கும். இதோ 20 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. இப்போதும், சின்னத்திரையில் காமெடி ஷோவில் தொடர்ந்து கலக்கிக்கொண்டிருக்கிறார். திரைப் பயணத்தையும், வாழ்க்கைப் பயணத்தையும் திறம்ப்டக் கையாண்டு வாள் சுழற்றுகிறார். 

Devadharshini

ஒரு ப்ரேக்குக்குப் பிறகு, 2010-ல் 'காஞ்சனா' திரைப்படம். கோவை சரளாவோடு காமெடி வொர்க்-அவுட் ஆனது. ஆச்சி மனோரமா, கோவை சரளாவுக்குப் பிறகு காமெடி ரோலின் ரிலே குச்சியை நெடுந்தூரம் எடுத்துச்செல்ல யாருமில்லை. அண்ணி, அக்கா கேரக்டர்களில் நடித்தபடி காமெடியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளில் 'காஞ்சனா' திரைப்படத்தில் நடித்ததற்காக 'சிறந்த நகைச்சுவை நடிகை' விருது பெறுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விருது அவருக்கு இன்னும் உத்வேகத்தைக் தரக்கூடும். இவரது கணவர் சேத்தனும் தமிழ்நாடு அரசின் விருதைப் பெறவிருப்பது ஒன் ப்ளஸ் ஒன் ஆஃபர். ஆண் காமெடி நடிகர்களைப் போலப் பெண்களுக்குத் தொடர்ச்சியாகப் பட வாய்ப்புகள் வருவதில்லை. கிடைக்கும் ஒன்றிரண்டு திரைப்படங்களில் தலைகாட்டிக் காணாமல்போகும் நடிகைகள் என நிறைய பேரை உதாரணமாகச் சொல்லலாம். இந்த நிலை மாறி, நகைச்சுவை கேரக்டர்களுக்காக நடிகைகளுக்கும் ஸ்கோப் கிடைக்கவேண்டும் என நினைக்கிறார் தேவதர்ஷினி.

தேவதர்ஷினி - சேத்தன்

வாய்ப்புகள் எப்போதாவதுதான் தேடிவரும்... கிடைக்கிற வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்து மேலேறினால் வெளிச்சம். கண்கூசும் வெளிச்சத்திற்குத் தாக்குப்பிடித்து நிலைபெறுவது அவரவர் திறமை. பயிற்சியும், முயற்சியும் இருந்தால் எல்லாமே சாத்தியம் என்பதுதான் இவரது அனுபவங்கள் சொல்லும் பாடம். 

- இன்னும் ஓடலாம்... 

 

முந்தைய பாகங்களை வாசிக்க இந்தப் படங்களை க்ளிக் செய்யவும்...

                          

...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement