வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (28/07/2017)

கடைசி தொடர்பு:13:29 (28/07/2017)

டியர் ஜெண்டில்மென்...பெண்களின் பாலியல் விருப்பங்களை நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்களா? #LipstickUnderMyBurkha

லிப்ஸ்டிக்

சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் பாலிவுட் படம், 'லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா(Lipstic Under My Burkha)'. வெவ்வேறு வயதுகளில் இருக்கும் நான்கு பெண்கள், அவர்களின் பாலியல் விருப்பங்கள், ஏக்கங்கள், வெறுப்புகளைப் பற்றிப் பேசும் திரைக்கதையால், சென்ஸார் போர்டு சான்றிதழ் பெற பல போராட்டங்களைக் கடந்து இறுதியில் திரைக்கு வந்திருக்கும் படம்.  

நான்கு நாயகிகளுடனும் அறிமுகம் ஆவோம். 

ஷிரீனுக்கு (கொன்கனா சென்) பல போராட்டங்களுக்குப் பின் பணியில் பதவி உயர்வு கிடைக்கிறது. அந்த சந்தோஷத்தைக்கூடக் கொண்டாடவிடாமல் அவளை நெருக்குகிறது வீட்டுக்குள் அவள் வாழும் நரக வாழ்க்கை. தன் கோபத்தைக்கூட பாலியல் உறவு மூலம் வெளிப்படுத்தும் அவளது கணவனிடம், தன்னுடைய பதவி உயர்வு சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் சூழல் அவளுக்கு இல்லை. 

கல்லூரி செல்லும் இஸ்லாமியப் பெண் ரெஹானாவுக்கு (ப்ளாபிடா) பாப் பாடகி மைலி சைரஸ் போல்  மேடை ஏறி பாடவேண்டும் என்று ஆசை. ஆனால், அவள் புர்காவோடே எந்நேரமும்  இருக்க வேண்டும் என்பது அவள் பெற்றோரின் கட்டளை.

லீலாவுக்கு (அஹானா) அன்று நிச்சயதார்த்தம். அவளைப் படம்பிடித்துக்கொண்டிருக்கிறான் அவளுடைய காதலன். அப்போது கரன்ட் கட்டாக, அவனுடன் பாலுறவு கொள்கிறாள். அதனைக் கண்ட அவள் தாய் அவளை அடித்து, களைந்திருக்கும் அவளை மீண்டும் மணப்பெண்ணாக அலங்கரிக்க, அவள் தன் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்கிறாள். 

நான்காவது பெண், 50 வயதைத் தாண்டிய உஷா (ரத்னா). கணவர் இறந்த பின் தன் சொந்த முயற்சியில் இனிப்புக்கடை வைத்து  முன்னேறியவர்.  தனது பாலியல் தேவைகளை  பூர்த்திசெய்யும் வடிகாலாக அவர் செக்ஸ் புத்தகங்களை, ஆன்மிக புத்தகங்களில் மறைத்துவைத்துப் படிக்கிறார். அவர்  வாழ்வில் ஓர் ஆண் வருகிறான்.  

இந்த நான்கு கதாபாத்திரங்களுடன் மற்றோரு கதாபாத்திரமாய் அவர்களுடன் பயணிக்கிறது... லிப்ஸ்டிக்! தாங்கள் சுதந்திரமாக உணரும்போதும், சமுதாய நெருக்கடிகளை சந்திக்கும்போதும் இந்தப் பெண்கள் லிப்ஸ்டிக் பூசிக்கொள்கின்றனர். அது அவர்களுக்கு விலங்கை உடைக்கும் ஓர் உணர்வைத் தருகிறது. 

லிப்ஸ்டிக் போபால் நகரில் வசிக்கும் இந்த நான்கு பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளையும், தங்களின் பாலியல் உணர்வுகளையும் ஒவ்வொரு முறையும் இவர்கள் எப்படிக் கையாள்கிறார்கள் என்பதை நகைச்சுவை கலந்து பதிவு செய்திருக்கிறார், இயக்குநர் அலங்கரித்தா ஸ்ரீவஸ்தவா (Alankrita Srivastava). 

பெண்ணின் பாலியல் சுதந்திரம் பற்றி இந்தியச் சமுதாயத்தில் வெளிப்படையாகப் பேசுவதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. அப்படிப் பேச முற்படும் பெண்கள் இயல்பாகப் பார்க்கப்படுவதுமில்லை. அப்பா - அம்மாவின் கடுமையான  அடக்குமுறைகளால் தவிக்கும் ரெஹானா, வெளிநாடு சென்று திரும்பிய கணவனின் பாலியல் இச்சைகளுடனும்  பிற்போக்கான சிந்தனைகளுடனும் போராடும் ஷிரீன், அம்மாவின் கனவுகளுக்கும் தனது விருப்பங்களுக்கும் இடையே தத்தளிக்கும் லீலா, தனது முதுமையை மறைத்து அலைபேசியில் ஓர் ஆணுடன் காமம் பேசி  மகிழும் உஷா  பாட்டி... என ஊருக்காக ஒரு வாழ்க்கையும் மனதுக்குள் தனக்காக ஒரு வாழ்க்கையும் வாழ்ந்துவரும் பல பெண்களின் பிரதிபலிப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் இந்தப் பெண்கள். 

உஷா பாட்டியாக நடித்திருக்கும் ரத்னாவின் நடிப்பை நம்மால் எளிதில் கடந்துவிட முடியாது. 50 வயதைத் தாண்டிய பெண்மணி தன் பாலியல் தேவைகளை உணர்த்தும் அந்த எமோஷன்ஸுக்கு அப்ளாஸ். கணவனுக்கு காண்டம்  வாங்கிச் செல்லும் ஷெரீனாக  நடித்திருக்கும்  கொன்கனா சென் கண்களில் மிதக்கும் வேதனை நம்மையும் பாதிக்கிறது. அப்பா செமத்தியாகத் திட்ட, தனது அறைக்கு வந்து செம வெஸ்டர்ன் ஆட்டம் போடும் ரெஹானாவாக நடித்திருக்கும் ப்ளாபிடா, அந்தக் கதாபாத்திரத்தின் நியாயத்தை நமக்குப் புரியவைக்க முயற்சிக்கும் நடிப்பைக் கொடுத்துள்ளார். முழுக்க முழுக்க உணர்ச்சிகளே ஆளும் திரைக்கதையை தொந்தரவு செய்யாத வகையில் அடங்கி, ஆனால் அழகாகப் பயணிக்கிறது அக்‌ஷய் சிங்கின் ஒளிப்பதிவு. மங்களான ஒளி, சிதறிக் கிடக்கும் பொருட்கள் என படம் முழுக்கக் காட்டப்படும் காட்சிகள், பெண்ணின் மனக்குழப்பங்களின் குறியீடுகளாகின்றன.

நெருக்கடியான சூழலில் இரு பெண்கள் பேசிக்கொள்ளும்போது, 'நமக்கெல்லாம்  ஆயிரம் கனவுகள்  இருக்கும்; அவ்வளவுதான்!' என்கிறார்கள். கணவனின்  ரகசிய காதலியிடம் ஒரு விற்பனையாளராகச் சென்று, 'நான் பயன்படுத்தியதை நீ பயன்படுத்த முடியாதல்லவா?' என்று கேட்கிறார் மனைவி. இப்படி பெண் மனசை அசலாகப் பேசும் வசனங்கள் படத்தின் பலம். 

பல சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புகளுக்குமிடையே வெளிவந்திருக்கிறது 'லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா'. இப்படம் பேசும் பெண்களின் உளவியல் உண்மைகளை, பொதுச் சமூகம் ஏற்றுக்கொள்ளுமா என்பது கேள்விக்குறியே. ஆனால், அவை புறந்தள்ள முடியாத அளவுக்கு மெய்யானவை. இன்னும் இந்தச்  சமூகம் பெண்களை புரிந்துகொள்ளவே இல்லை என்பதை, 'லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா' மட்டுமல்ல, அதன் மீதான விமர்சனங்களும் உணர்த்துகின்றன. அதுவே அப்படத்தின் வெற்றியும்கூட!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்