Published:Updated:

வினோத், 'கொக்கி' குமார், ரகுவரன்... தனுஷின் கில்லி கேரக்டர்ஸ்! #HBDDhanush

தார்மிக் லீ
வினோத், 'கொக்கி' குமார், ரகுவரன்... தனுஷின் கில்லி கேரக்டர்ஸ்! #HBDDhanush
வினோத், 'கொக்கி' குமார், ரகுவரன்... தனுஷின் கில்லி கேரக்டர்ஸ்! #HBDDhanush

ருப்பு நிறம், மெலிந்த தேகம், அப்பாவி முகம்... தமிழ் சினிமாத் துறையில் ஹீரோவாக இருப்பதற்கான எந்தத் தகுதியும் இல்லாத ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் கால் பதித்தார். சிக்ஸ் பேக் உடற்கட்டு இல்லை, ஆப்பிள் மேனி இல்லை, சுண்டிவிட்டால் ரத்தம் வரும் நிறமும் இல்லை, போதாக்குறைக்கு இவர் நடித்த முதல் படத்துக்கு 'இந்த மூஞ்சியெல்லாம் நடிக்க வந்துருச்சு.. ச்சை!' என்பது போன்ற விமர்சனங்கள். இவை எல்லாவற்றையும் கடந்து வந்து சாதித்த ஆள்தான் தனுஷ். அவரது நடிப்பில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்கள் சிலவற்றைப் பார்ப்போம்...

'காதல் கொண்டேன்' வினோத் :

'துள்ளுவதோ இளமை' படத்துக்குப் பின் காணாமல் போய்விடுவார் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருக்க, 'காதல் கொண்டேன்' படத்தில் வினோத்தாகக் களமிறங்கினார் தனுஷ். குழந்தைத் தொழிலாளியாக வளர்ந்த ஒரு சிறுவன் வெளியுலகத்தைக் காணும்போது இவ்வுலகம் அவனுக்கு எப்படித் தெரியும் என்ற கேள்விக்கான விடையை வினோத்தின் கதிகலங்கிக் காணும் அந்த கண்கள் உணர்த்தும். வித்தியாசமான குணாதியங்களைக் கொண்ட ஒரு ஆளை ஒதுக்கி வைக்கும் ஒரு சமூகம் ஒன்றும் நமக்குப் புதிதல்ல. கெட்டுப்போன சாப்பாட்டை இவர் சாப்பிட்ட காட்சி, 'இன்னும் பசிக்குது சோறு வேணும்...' என்று சோனியா அகர்வாலிடம் இவர் வெளிக்காட்டிய அந்த உணர்வு, 'திவ்யா, திவ்யா' என்று இவர் ஆடிய வெறியாட்டத்திற்குக் கிடைத்த பரிசுதான் 'தனுஷ் ரசிகர் மன்றம்'. இவர் தமிழ் சினிமாவின் நடிகன் என்று ஏற்றுக்கொண்ட அந்தக் கதாபாத்திரம்தான் வினோத். 

'கொக்கி' குமாரு :

2006-ல் 'பட்டியல்' செல்வா - கோசி, 'சித்திரம் பேசுதடி' திரு, 'தலைநகரம்' ரைட்டு ஆகிய தாதாக்களுடன் களமாட வந்தான் 'புதுப்பேட்டை' கொக்கி குமாரு. அந்த ஆண்டின் மகத்தான வெற்றிப் படங்களில் இப்படம் இடம்பெறவில்லை என்றாலும் தனுஷின் ரசிர்களையும் தாண்டி பலரின் மனதில் நின்று, வென்ற ஒரு படமாக மாறியது 'புதுப்பேட்டை'. பணக்காரர்களிடம் இருக்கும் கள்ளப்பணத்தை ஏழை எளிய மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் தாதாக்களுக்கு மத்தியில் சற்று மாறுபட்டு பயணித்தார் கொக்கி குமாரு. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு சாமானியன் எப்படி தாதா உலகத்துக்குள் செல்கிறான், படிப்படியாக உயர்ந்து எப்படி சர்வைவல் செய்கிறான் என்று யதார்த்தத்தை மறுபக்கத்திலிருந்து காட்டிய படம் 'புதுப்பேட்டை'. அம்மாவைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கையில் கிண்டல் செய்யும்போது கொந்தளிக்கும் அந்தக் கோவம், அவரோடு இருக்கும் ஒரு ஆள் எதிர் அணியில் சேர்ந்துவிட்டது தெரிந்தவுடன் வெளிக்காட்டிய அந்த யதார்த்தம், குப்பைத் தொட்டியில் குழந்தையைப் போடப்போகும் போது அந்த சென்டிமென்ட், வெறித்தனமான வன்முறைக் காட்சிகள் என அனைத்திலும் மெர்சலான நடிப்பை வெளிக்காட்டியிருப்பார் கொக்கி குமாரு. 

கே.பி.கருப்பு :

உசுருக்குச் சமமானதுதான் பந்தயம். அந்தப் பந்தயத்திலும் மகத்தான வெற்றியைப் பெற்ற படம் 'ஆடுகளம்'. 'புதுப்பேட்டை' கொக்கி குமாருக்குப் பிறகு, கே.பி.கருப்பு இவர் ஏற்று நடித்த சவாலான கதாபாத்திரமாக மாறியது. இதற்கு முன் வெளியான படங்களில் டப்பிங்கில் அசால்ட் செய்த தனுஷுக்கு இந்தப் படம் மிகப்பெரிய சவாலாக அமைந்தது. படத்தில் இவர் மதுரையைச் சேர்ந்த இளைஞன் என்பதால் அந்த வட்டார மொழி நடையில் அதிகக் கவனம் செலுத்தினார். இவரின் அந்த மெனக்கடலுக்குப் பயனாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினைப் பெற்றார். இன்டர்வலுக்கு முன் இடம்பெற்ற சேவல் சண்டைக் காட்சியின் மூலம் இவர் ஆகச் சிறந்த நடிகர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டினார். ஏனென்றால், சேவல் காட்சி CG என்பதால் படப்பிடிப்பின் போது நடுவில் வெறும் காலி இடத்தைப் பார்த்து அந்நடிப்பை வெளிக்காட்ட வேண்டும். டப்பிங்கோடு சேர்த்து, நடிப்பும் சவாலாக அமைந்த ஒரு கதாபாத்திரம்தான் கே.பி.கருப்பு. 

ஜீனியஸ்' கார்த்திக், 'கொலவெறி' ராம்  :

இவரின் நடிப்புத் திறனுக்கு மேலும் மெருகூட்டிய இரு படங்கள் 'மயக்கம் என்ன', '3'. இரு படங்களும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும், இவரின் நடிப்பு குறிப்பிடத்தக்கது. ஒரு இளைஞனுக்கு, தான் பார்க்கும் வேலை எவ்வளவு பிடிக்கும் என்பதை 'ஜீனியஸ்' கார்த்திக் கதாபாத்திரம் வாயிலாக வெளிக்காட்டினார். சர்வசாதரணமாகப் பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு படம், திடீரென ஏதோ ஒரு விஷயம் நடக்க, ரசிகர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் மாற்றியமைத்த இரு படங்கள் 'மயக்கம் என்ன', '3'. தன் திறமைக்கான அங்கீகாரம் எங்குமே கிடைக்காமல் போன காரணத்தாலும், ஒருவரின் மீது இருக்கும் காதல் அளவு கடந்து செல்வதாலும் வரும் விளைவுகளின் பிரதிபலிப்புகள்தாம் கார்த்திக், ராம். ஏறக்குறைய இரண்டுமே ஒரே ஜானர் படம்தான். காரணங்கள் மட்டும் வெவ்வேறு. இரு படத்திலும் இவர் வெளிக்காட்டிய அந்த நடிப்பு வித்தியாசமானதுதான். முக்கியமாக '3' பட க்ளைமாக்ஸில் இவரது நடிப்பு தமிழ் சினிமாவில் எப்போதும் பேசப்படும்.

'வி.ஐ.பி' ரகுவரன் :

இப்படத்தின் மூலம் ஒரு புது அடையாளத்தையே உண்டாக்கினார் தனுஷ். ஊருக்குள் இருக்கும் பல 'தண்டச்சோறு'களின் மறுமுகத்தைக் காட்டிய ஒரு படமாக 'வேலையில்லா பட்டதாரி' அமைந்தது. தண்டச்சோறாகக் கருதப்படுபவர்களின் ஒட்டுமொத்த வலியையும் மூணு நிமிடத்தில் மூச்சுவிடாமல் பேசியிருப்பார். இவர் பேசிய அந்த வசனத்திற்கு திரையரங்கமே அதிர்ந்தது. வேலையில்லாமல் இருக்கும் ஒரு இளைஞனின் வலி எப்படி இருக்கும் என்று உணர்த்திய இவரது வசனங்கள், அம்மா பாசத்தை தன் குரல் வளத்தால் மக்களுக்கு கொண்டு சேர்த்த அந்த உணர்வு, நான் படிச்சது சிவில் இன்ஜினியர்தான், அது சம்பந்தமாதான் நான் வேலைக்குப் போவேன் என்ற இவர் தன்னம்பிக்கை, பல இளைஞர்களுக்கு நம்பிக்கை விதைத்தது.

நடிகராகக் கால் பதித்து, கொலவெறியாக பாடல் பாடி, பொயட்டிக் வரிகளில் விளையாடி, தற்போது இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் களமிறங்கிக் கலக்கும் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

தார்மிக் லீ