‘‘எனக்கும் அந்த நடிகைக்கும் எந்த விரோதமும் இல்லை!’’ - நடிகை வழக்கில் சிக்கிய பாடகி

இந்த ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி, கேரளத் திரையுலகத்துக்கு... இல்லை... மொத்த இந்தியத் திரையுலகத்துக்கே அதிர்ச்சியூட்டும் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நடிகை கடத்தப்பட்டு, காரிலேயே வன்கொடுமைக்கு ஆளானார். தமிழ் மற்றும் மலையாளத்தில் கிட்டத்தட்ட 75 படங்களுக்கும் மேல் நடித்தவர் அவர். 'ஒரு பிரபல நடிகைக்கே இந்தக் கதி நேர்ந்தால், சாதாரண பெண்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?’ என்று ஒட்டுமொத்த கேரளத் திரையுலகமும் பெண் கொடுமைக்கு எதிராகப் போராடியது. 

இதைத் தொடர்ந்து, முக்கியக் குற்றவாளியாக பல்சர் சுனி என்பவரை, சரண்டர் ஆக வரும்போது கைது செய்தது போலீஸ். ‘‘இந்த நடிகையைக் கடத்த வேண்டும் என்பது எனக்கு வந்த ஆர்டர்’’ என்று பல்சர் சுனி கொடுத்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து, நடிகர் திலீப் இந்த வழக்கில் அடுத்த குற்றவாளியாகச் சிக்கினார். திடீர் கஸ்டடி, திடீர் விசாரணை என்று ‘ரவுண்ட் தி கிளாக்’ சர்வீஸில் திலீப்பிடம் விசாரணை செய்து வருகிறது போலீஸ்.

பெண்களையும் குழந்தைகளையும் தன் காமெடி நடிப்பால் கவர்ந்த திலீப், ஒரு நடிகையின் வழக்கில் சிக்கியது ‘டாக் ஆஃப் தி கேரளா’ ஆனது. குற்றவாளி பல்சர் சுனில், க்ரைம் நடத்திவிட்டு 'லக்‌ஷயா' என்னும் ஆன்லைன் மார்க்கெட்டிங் கம்பெனிக்கு வந்ததாக விசாரணையில் சொன்னதைத் தொடர்ந்து, நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன், திடீர் தலைமறைவானார். ஏனென்றால், லக்‌ஷயா நிறுவனம், காவ்யாவுக்குச் சொந்தமானது. காவ்யாவைக் கண்டதும் கைது செய்ய போலீஸ் உத்தரவிட்டது தனிக் கதை. இப்போது திலீப்பின் தொடர்பில் இருக்கும் அத்தனை பேரையும் சுற்றி வளைத்து விசாரிக்கிறது போலீஸ். இதில் திலீப்பிடமிருந்து கிடைத்த வாக்குமூலத்தில் இருந்து, பாடகியும் டி.வி தொகுப்பாளினியுமான ரிமி டாமி என்பவர் பெயர் அடிபட்டதாம். 

ரிமி டாமி, ‘மீச மாதவன்’ என்ற மலையாளப் படத்தில் தனது முதல் பாடலை அரங்கேற்றி பிரபலமானவர். மலையாளத்தில் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார் ரிமி டாமி. இது தவிர, திலீப்புடன் சேர்ந்து இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார். விசாரணையின்போது, திலீப்புக்கும் ரிமிக்கும் இடையில் சில பிசினஸ் டீலிங்குகள் இருந்ததாகவும், இது தொடர்பாக ஃபாரீன் டூர் சென்று வந்திருக்கிறார் ரிமி டாமி என்றும் சில உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. இதைத் தொடர்ந்துதான் இப்போது போலீஸ் வளையத்தின் விசாரணைப் பிடியில் சிக்கிவிட்டார் ரிமி டாமி. 

ரிமி

‘‘எனக்கும் திலீப்புக்கும் எந்தவித பணப் பரிவர்த்தனைகளும் கிடையாது. விசாரணையின்போது, அவர் ஒரு மேடத்துக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாகச் சொன்னதாகச் சொல்கிறார்கள். அவர் சொன்ன அந்த ‘மேடம்’ நான் இல்லை. பைஜு பவுலோஸ் என்னும் காவல்அதிகாரிதான் இது தொடர்பாக முதன் முதலில் என்னிடம் பேசினார். 

நான் வெளிநாடு சென்றிருக்கிறேன். நான் ஒரு பாடகி. நிறைய ஸ்டேஜ் ஷோக்கள் நடத்துவதற்காக வெளிநாடு சென்ற அனுபவம் எனக்கு உண்டு. அதைச் சொன்னேன். மற்றபடி என்னை போலீஸார் சந்தேகிக்கவில்லை. இது ஒரு விசாரணைதான். மேலும், நடிகர் திலீப் எனக்கு நண்பர்தான். ஆனால், அவருக்கும் எனக்கும் எந்தப் பணப்பரிவர்த்தனையும் இல்லை. வேண்டுமானால், வருமான வரித் துறை இதைக் கண்டுபிடிக்கட்டும்.

எனக்கும் அந்த நடிகைக்கும் எந்தமுன் விரோதமும் கிடையாது. சொல்லப்போனால், இந்தப் பிரச்னை நடந்தவுடனேயே அவருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் மெசேஜ் கூட அனுப்பியிருக்கிறேன். அந்த நடிகையின் நெருங்கிய தோழியான ரம்யா நம்பீசன் எனக்கும் நெருங்கிய தோழி. வேண்டுமானால், ரம்யாவிடம்கூட நீங்கள் கேட்டுப் பாருங்கள். காவ்யாவிடமும் இது பற்றிப் பேசியிருக்கிறேன். ஊடகங்கள்தான் எனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இருப்பதாகத் திரித்து எழுதுகின்றன. இதுதான் எனக்கு மிகவும் மனஉளைச்சலைத் தருகிறது’’ என்று விசாரணை வளையத்தில் இருந்தபடி பொங்கி எழுந்துவிட்டார் ரிமி டாமி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!