வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (31/07/2017)

கடைசி தொடர்பு:13:42 (05/08/2017)

’சிந்து சமவெளி’  அமலா பால்... ’கயல்’ ஆனந்தி... ஷுட்டிங் சுவாரஸ்யம் சொல்கிறார் ஹரிஷ் கல்யாண்!  (sponsored content)

சிந்து சமவெளி திரைப்படத்தில் அறிமுகமாகி, பொறியாளன், வில் அம்பு போன்ற படங்களின் மூலம் தன்னுடைய நடிப்பால் மக்களின் மனம் கவர்ந்த நடிகர் ஹரீஷ் கல்யாணுடன் ஒரு பேட்டி.

Harish Kalyan

கோலிவுட்டில் இருந்து டோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுக்கறீங்க. இந்த வாய்ப்பு எப்படி கிடைச்சுது?

இந்தத் திரைப்படத்திற்காக ஒரு புதுமுகத்தைத் தேடிக்கொண்டிருந்தார்கள். என்னுடைய ‘வில்-அம்பு’ திரைப்படத்தைப் பார்த்துத்தான் அந்த வாய்ப்பை எனக்கு அளித்தார்கள். நல்ல டீம், நல்ல புரோடக்க்ஷன் கம்பெனி, தெலுங்குப் பட உலகில் அறிமுகமாக இது நல்ல வாய்ப்பு என்பதால், அந்த வாய்ப்பை நான் ஏற்றுக்கொண்டேன். இப்போது தமிழில் சில படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால், அதன் பிறகு வந்த சில தெலுங்குப்பட வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை. 

தமிழில் நீங்கள் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களைப் பற்றிக் கூறுங்கள்.

தமிழில் சுசீந்திரன் சார் பேனரில் மீண்டும் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அதன் தலைப்பு மற்றும் பிற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை. அது இல்லாமல் இரண்டு திரைப்படங்களில் நடிக்கவிருக்கிறேன். இரண்டுமே நல்ல பேனர், நல்ல டீம், வெவ்வேறு கதைக் களங்களைக் கொண்டிருக்கிறது. மூன்று திரைப்படங்களும் வேறு ஜானரில் இருக்கும். ஒன்று காதலும், நகைச்சுவையும் கலந்திருக்கும். மற்றொன்று ஆக்க்ஷன் திரில்லர். இன்னொரு படம் பக்கா கமர்ஷியலாக இருக்கும். 

Harish Kalyan

டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டை அதிகம் தேர்வு செய்கிறீர்களா?

இல்லங்க, வில்-அம்பும் சரி, தெலுங்குப் படத்திலும் சரி, ஸ்க்ரிப்ட்  அவ்வாறு அமைந்திருந்தது. என்னுடைய இப்போதைய உடல்வாகு மற்றும் வயதிற்கு ஏற்ற கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்துவருகிறேன். இனி ‘சோலோ’ ஹீரோவாக நீங்கள் பார்க்கலாம். நிச்சயம் அது சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

நல்லா நடிக்கறீங்க, பாடல் எழுதறீங்க, பாடவும் செய்யறீங்க, வேற என்னென்ன திறமைகளை உள்ள வச்சிருக்கீங்க?

இதை எனக்குக் கிடைத்த பெரிய பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன். வில் அம்பு மற்றும் பொறியாளன் படங்கள் வெளியானபோது, படத்தைப் பற்றியும், என் நடிப்பைப் பற்றியும்  விகடனில் வெளியான விமர்சனங்கள் மிகவும் நேர்மையாகவும், ஊக்கம் அளிப்பதாகவும் இருந்தது. அதற்கு விகடனுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

பள்ளியில் படிக்கும்போதே ராஜா சார் ட்ரூப்பில் இருந்த சதானந்தம் அவர்களிடம் கீபோர்ட் கற்றுக்கொண்டேன். நாளடைவில் நானே மெட்டுப் போட்டு, பாடல் எழுதி, ரெக்கார்ட் செய்து வைத்துக்கொள்வேன். நான் கம்போஸ் பண்ணின சில பாடல்கள் யூடியுப்லயும் இருக்கு. தனுஷ் சார் போல பல திறமைகள் கொண்ட கலைஞனா உருவாகணும்ங்கிறதுதான் என் ஆசை. தனியா ஆல்பம் போடுற ஐடியாவும் இருக்கு.

அது இல்லாமல் நடனம் கற்றுக்கொண்டேன். ராபர்ட் மாஸ்டர், தினேஷ் மாஸ்டர் இவங்கதான் டான்ஸ்ல என் குரு. சினிமாவுக்காக குதிரை ஓட்டுவது, சிலம்பம், ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்டன்ட்ஸ் போன்றவை கற்றுக்கொண்டேன். 

வில் அம்பு படத்துல நீங்க போட்டோகிராபர் ஆகணும்னு ஆசைப்படுவீங்க, ஆனா உங்க அப்பா IT படிக்கச் சொல்வார். உங்க நிஜ வாழ்க்கையில் எப்படி?

என் நிஜ வாழ்க்கையிலும் கிட்டத்தட்ட அதுபோலத்தான் இருந்தது. முதலில் நானும் இஞ்சினியரிங்தான் சேர்ந்தேன். பிறகு, யோசித்துப் பார்த்தபோது சினிமாவில் இருக்கவேண்டும் என்பதுதான் என் வாழ்க்கையின் லட்சியம், எதற்காக நான்காண்டுகளை இதில் வீணாக்கவேண்டும் என்று தோன்றியதால் கல்லூரியை டிராப் செய்துவிட்டேன். 

வில் அம்பு படத்தில் வருவது போல அல்லாமல், நிஜ வாழ்வில் அப்பா என் முடிவை சப்போர்ட் பண்ணினார். அப்பா மட்டுமல்ல, என் மொத்தக் குடும்பமும் எனக்கு ஆதரவா இருந்ததால பத்தொன்பது வயசுலேயே நான் சினிமால இறங்கிட்டேன். அப்போ சிந்து சமவெளி வாய்ப்பு கிடைச்சுது. அங்கிருந்து என் திரைப்பயணம் தொடங்கிடுச்சு.

சுசீந்திரன் , வெற்றி மாறன் பேனர்ல எல்லாம் நடிச்சிட்டீங்க. அடுத்து நீங்க யார் கூட ஒர்க் பண்ண விரும்பறீங்க? 

வெற்றி சார் பேனர்ல பொறியாளன் வந்திச்சு. சுசீந்திரன் சார் பேனர்ல வில் அம்பு வந்துச்சு. இவர்களைப் போல பெரிய டைரக்டர்கள் பேனர்ல நடிச்சது சந்தோஷமா இருந்தது. பெரிய பேனர்கள் என்பதைத் தாண்டி, மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற ஒரு நல்ல காதல் கதையில் நடிக்கவேண்டும் என்பது என் விருப்பம். கௌதம் சார் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய பேனரிலோ, டைரக்க்ஷனிலோ, இல்லை அவருடைய கதை ஒன்றிலோ நடிக்க ஆசை. அவர் மட்டுமில்லை, பெரிய டைரக்டர்ஸ், புரொடக்க்ஷன் கம்பெனிகள் எல்லாரோடவும் ஒர்க் பண்ண விரும்பறேன். 

அமலா பால், சிருஷ்டி டாங்கே கூட நடிச்சிருக்கீங்க. இவர்களில் உங்க பேவரைட் ஹீரோயின் யாரு? 

ரெண்டு பேருமே எனக்கு நல்ல ப்ரெண்ட்ஸ். இருவருடைய நடிப்பும் எனக்குப் பிடிக்கும்.  ஜோதிகா மேம், திரிஷா, சமந்தா இவங்களோட நடிப்பும் பிடிக்கும். சமகால நடிகைகளில் எனக்கு ஆலியாபட்டோட நடிப்பு ரொம்பப் பிடிக்கும். ‘கிரஷ்’னு கூட சொல்லலாம்.

பொறியாளன் படத்துல ரொம்ப அழகா உங்க கேரக்டரை எஸ்டாபிளிஷ் பண்ணியிருந்தீங்க. சிந்து சமவெளிக்கும் பொறியாளனுக்கும் நடுவுல அந்த மெச்சூரிட்டி எப்படி வந்துச்சு? 

அமலா பால்

சிந்து சமவெளி டைம்ல எனக்கு எல்லாமே புதுசு. நான் டைரக்டர் சொன்னதை அப்படியே டெலிவர் பண்ணினேன். அதுக்கப்புறம் இரண்டரை வருஷம் கழிச்சுதான் பொறியாளன் வாய்ப்பு கிடைச்சுது. அந்த இடைவெளி எனக்கு மனதாலும் சரி, உடலாலும் சரி நிறைய மாற்றங்கள கொடுத்துச்சு. பொறியாளன் பண்ணும்போது சினிமா, ஸ்க்ரிப்ட், கேரக்டர் போன்ற எல்லாவற்றையும் பற்றி ஒரு புரிதல் இருந்தது. இரண்டிற்கும் இடையே பெரிய வித்தியாசம், மெச்சூரிட்டி இருந்தது உண்மைதான். அதுக்கு அந்த படங்களோட இயக்குனர்களும் ஒரு முக்கிய காரணம். இனி வரும் படங்களில் இன்னும் பெட்டரா பண்ணுவேன்னு நம்பறேன்.

அமலா பால், ஆனந்தி-ன்னு உங்க கூட நடிச்ச ஹீரோயின்லாம் ஹிட் ஆகிடுறாங்க. செம செண்ட்டிமெண்ட்டா இருக்கே..! 

ஹஹஹா, நல்ல விஷயம்தானே! அமலா பால், ஆனந்தி இருவருக்கும் தமிழில் அதுதான் முதல் படம். தன்னைத்தானே மெருகேத்திகிட்டாங்க. இப்போ வேற உயரத்துக்கு போயிட்டாங்க. இப்படி ‘லக்கி ஹீரோ’வா இருக்கிறது எனக்கு மகிழ்ச்சிதான். 

அப்போ ரெண்டு பேருமே சின்னப்பசங்க. ‘செட்’லயே விளையாட்டுத்தனமா இருப்பாங்க. இப்போ ரொம்ப மெச்சூர் ஆயிட்டாங்க. இப்போ அவங்ககூட ஒர்க் பண்ணினா வேற அனுபவமா இருக்கும்னு நெனைக்கிறேன்.

வில் அம்பு படத்துல என்ன ஸ்பெஷல்...?

வில் அம்பு பட வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கிய காரணம் அதன் இயக்குனர் ரமேஷ்தான். பொறியாளனுக்குப் பிறகு எனக்கு ஒரு நல்ல பெயரைக் கொடுத்த படம். என்னோட கேரியர்ல ரொம்ப முக்கியமான படம். கமர்ஷியலாக சுமாராக ஓடினாலும், எனக்கும் அதில் நடித்த எல்லோருக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தது. அந்த விதத்தில் எனக்கு வில் அம்பு ரொம்ப ஸ்பெஷல். முதலில் சுசீந்திரன் சார் என்னை அழைத்து, என் நடிப்பைப் பாராட்டினார். பிறகு திரையுலகைச் சேர்ந்த பலரும் பாராட்டினார்கள். 


சிந்து சமவெளி படத்துல நடிச்ச அனுபவம் பத்தி சொல்லுங்க..

சிந்து சமவெளி படம் நடிக்கும்போது எனக்கு பத்தொன்பது வயசு. அனுபவமும் கிடையாது. இயக்குனர் சாமி அப்போது ‘மிருகம்’ திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்திருந்தார். படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. எனக்கு இந்தக் கதாபாத்திரத்தை நடிக்கமுடியுமா என்று பயமும், தயக்கமும் இருந்தது. அதில் சொன்ன விஷயங்கள் சரியாக இருந்தாலும், சொன்ன விதம் தவறாக இருந்ததால் அந்தப் படத்திற்கு நிறைய எதிர்ப்புகள் வந்தது. 

அறிமுகமே இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தமாக இருந்தது. சினிமாவிற்குள் தவறுதலாக வந்துவிட்டோமா என்று யோசிக்கும் அளவிற்கு நிறைய அறிவுரைகள் வந்தது. ஆனால், அந்தப் படத்தில் நடித்ததற்காக  வருத்தப்படுகிறேன் என்று கூறமாட்டேன். அது என்னைப் பக்குவப்படுத்த உதவியதாகவே பார்க்கிறேன். நிறைய கற்றுக்கொண்டேன். நான் சினிமாவை மதிக்கிறேன், என்றாவது ஒருநாள் அது என்னை நல்ல ஒரு இடத்தில் கொண்டு சேர்க்கும் என்று நம்புகிறேன். எல்லா விஷயத்தையும் ஒரு படத்தில் பார்த்ததால், அதை ஒரு 360 டிகிரி அனுபவமாகப் பார்க்கிறேன். 

அப்போ அமலா பால் அறிமுக நடிகை. அவங்க எப்படி நடிச்சாங்க...

சிந்து சமவெளி திரைப்படம்தான் அவருக்கு முதலில் வெளியான தமிழ்த்திரைப்படம். நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டாரா, அவர் இயல்பிலேயே நடிக்கும் திறன் பெற்றிருந்தாரா என்றெல்லாம் தெரியவில்லை, மிகவும் இயல்பாக நடிக்கக்கூடியவர். இன்று ஒரு சிறப்பான இடத்தில் இருக்கிறார். அவருடன் நடித்த போது, இருவருமே சிறு வயது என்பதால் எப்போதும் விளையாட்டுத் தனமாக இருப்போம். இப்போது இருவருக்கும் ஒரு ‘புரொபஷனலிசம்’ இருக்கு. மெச்சூரிட்டி இருக்கு. இப்போ நாங்க சேர்ந்து நடிச்சா வித்தியாசமா இருக்கும்னு நெனைக்கிறேன். 

அந்த படத்துக்கு எழுந்த எதிர்ப்புகளை அப்போ பட யூனிட் எப்படி எடுத்துக்கிட்டாங்க. குறிப்பா அமலா பால் என்ன ரியாக்ட் பண்ணாங்க. 

அந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் ஷோவை நான், அமலா, எங்க டீம் எல்லோரும் ஒன்றாகச் சென்று ஏவிஎம்மில் பார்த்தோம். பார்த்து முடித்ததும் ஏதோ சரியில்லை என்ற உணர்வு இருந்தது. அதேபோல அந்தப் படத்திற்கு பெரிய எதிர்ப்பு வந்தது. அதைத் தொடர்ந்து இயக்குனரைப் பற்றிய சர்ச்சைகள், அமலா பாலை அடிக்க வந்தார் என்ற சர்ச்சைகள் வந்தது. இருவருக்குமே சினிமா புதியது என்பதால் எப்படிக் கையாள்வது என்ற குழப்பத்தில் இருந்தோம். இப்போது நினைத்தாலும் அந்த நாட்களுக்கு மீண்டும் சென்றுவிடவே கூடாது என்று எண்ணுவேன். 

Harish Kalyan

ஏனெனில் சினிமாவில் காலடி எடுத்து வைப்பதே சிரமமான காரியம். அதிலும் முதல் படம் இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தம் இருந்தது. கெட்ட நேரமா என்று தெரியவில்லை. ஆனால், அதையும் கடந்து வந்துவிட்டோம். அந்த படத்தில் நடித்ததால் எனக்கு இரண்டரை வருடங்கள் வேறு படங்கள் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகுதான் பொறியாளன் கிடைத்தது. 

ஆனால் அமலாவிற்குப் பரவாயில்லை. அவருக்கு உடனே மைனா வெளிவந்து பெரிய வெற்றி பெற்றதால் இதன் பாதிப்பு அதிகம் இல்லை. அந்த விஷயத்தில் அவர் ‘லக்கி’. நான்தான் மாட்டிக்கொண்டேன். கடவுள் அருளால் அதற்குப் பிறகு நிறைய நல்ல படங்கள் கிடைத்து இந்த இடத்தில் இருக்கிறேன். இப்போது நான் நடித்துக் கொண்டிருக்கும் நல்ல கதையம்சமுள்ள படங்கள், என்னுடைய நம்பிக்கை, நடிப்பு ஆகியவை என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நம்புகிறேன். இவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும், அவர்கள் மனதில் எனக்கென்று ஒரு இடம் பிடிப்பேன் என்றும் உறுதியாக நம்புகிறேன்.  

Follow Harish Kalyan on
Twitter - @iamharishkalyan
Facebook - Harish Kalyan

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்