Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

தமிழ் சினிமாவின் தரமான சம்பவம் கார்த்திக் சுப்புராஜின் `ஜிகர்தண்டா'! #3YearsOfJigarthanda

முன்பெல்லாம் ஒரு திரைப்படம் வெளியாகி எவ்வளவு நாள்கள் திரையங்குகளில் ஓடுகிறது என்பதைப் பொறுத்துதான் அந்தத் திரைப்படத்தின் வெற்றி கணக்கிடப்படும். தற்போதுள்ள காலகட்டத்தில், மீம்ஸ்களில் எந்த அளவுக்கு ஒரு படத்தின் காட்சிகள் பேசப்பட்டு, ஹிட் அடிக்கிறது என்பதை வைத்துத்தான் அந்தத் திரைப்படத்தின் வெற்றி கணக்கில்கொள்ளப்படுகிறது. அந்த வகையில்  2014-ம் ஆண்டு வெளியான ‘ஜிகர்தண்டா’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படம். ரசிகர்களின் ரசனையையும் ருசியையும் ஒருசேர பூர்த்திசெய்த `ஜிகர்தண்டா'வுக்கும் இன்று மூன்றாம் ஆண்டு பிறந்த நாள். ``ஸ்கெட்ச், சேகருக்கு இல்ல சௌந்தரு... உனக்குத்தான்”, ``நாங்க பண்ண சம்பவத்திலேயே சிறப்பான சம்பவம், தரமான சம்பவம்” போன்ற வசனங்களும் அந்தக் காட்சிகளின் தன்மையும்  இன்றளவும் நெட்டிசன்களால் பெருமளவில் மீம்ஸ்களாகப் பரவப்பட்டுவருகின்றன.  

ஜிகர்தண்டா

பொதுவாக முதல் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தால், அந்த இயக்குநரின் அடுத்த திரைப்படம் மீது அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருக்கும். அதுவே அந்த இயக்குநருக்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுக்கும். அதே சூழ்நிலைதான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கும். ஆனால், அந்த எதிர்பார்ப்பை உணர்ந்து நெருக்கடிகளைப் பற்றியெல்லாம் கவலைகொள்ளாமல், தன் இரண்டவாது படமான `ஜிகர்தண்டா'வை தரமான சம்பவமாக நமக்கு வழங்கினார்.

ரத்தம் தெறிக்கத் தெறிக்க `நாயகன்', `தளபதி'  வகையிலான கேங்ஸ்டர்  திரைப்படத்தை இயக்கும் பணியை `ஆடுகளம்' நரேன் அறிமுக இயக்குநரான சித்தார்த்துக்குக் கொடுக்கிறார்.  மதுரையில் வாழ்ந்துகொண்டிருக்கும் நிஜ ரௌடியான ‘அசால்ட் சேது’ பாபி சிம்ஹாவின் வாழ்க்கைக் கதையை அவருக்கே தெரியாமல் தன் நண்பன் கருணாகரனுடன் இணைந்து படமாக்கும் முயற்சியில் இறங்குகிறார் சித்தார்த். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என்பதுபோல் விஷயத்தை பாபி சிம்ஹா அறிந்துகொள்ள  ``என் கதையை என்கிட்டே கேட்கவேண்டியதுதான. வேற எவன் எவன்கிட்ட எல்லாம் கேக்குற'' என்று கூறி தன்  ரத்த சரித்திரத்தை சித்தார்த்துக்கு விளக்குகிறார் பாபி சிம்ஹா. கிடைத்தது வெற்றி என `சுபம்' போட்டுவிடலாம் என நினைக்கும் தருணத்தில், லட்சுமி மேனன் மூலமாக சித்தார்த்துக்கு செக்மேட் வைக்கப்படுகிறது. அதாவது, ‛என் கதையில் நான்தான் ஹீரோவாக நடிப்பேன்’ என பாபி சிம்ஹா முறைக்க, சித்தார்த் நினைத்ததுபோலவே பாபி சிம்ஹாவை வைத்து ரத்தம் தெறிக்கத் தெறிக்க கேங்ஸ்டர்  படம் எடுத்தாரா... என்பதை, தமிழ் சினிமாவுக்கு புதிய பாணியில் கூறியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.

ஜிகிர்தண்டா பாபிசிம்ஹா

தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்கள் வெளிவர அடித்தளமிட்ட படங்களில் `ஜிகர்தண்டா' படத்துக்கு முக்கிய இடமுண்டு. Once In A Lifetime Role எனச் சொல்வார்களே, அதேபோல்தான் பாபி சிம்ஹாவுக்கு அசால்ட் சேது கதாபாத்திரம் மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. ``நம்ம வாழணும்... செமையா வாழ்ந்தாண்டானு  சொல்ற மாதிரி வாழணும்'' என தனக்கே உரிய மாடுலேஷினில் சொல்லும்போதும் சரி, படத்தின் இறுதியில் ``உன்கிட்ட மணிரத்னம் நம்பர் இருக்கா?'' எனக் கேட்கும் இடத்திலும் சரி, அசால்ட் சேது அசால்டாக ஸ்கோர் செய்தார்.  இதே போன்ற இன்னொரு ரோலில் பாபி சிம்ஹாவைக் காண We Are Waiting பாஸ்!

வில்லனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஒரு தனி கெத்து வேண்டும். அந்தக் கெத்து சித்தார்த்திடம் அதிகம். ``காசு இருக்கிறவன் எல்லாம் வந்துட்டுப் போக சினிமா ஒண்ணும் அயிட்டம் வீடு இல்ல'' என்று கருணாகரனிடம் பேசும் காட்சியில் உண்மையாகவே சினிமா மீது காதல்கொண்ட ஒருத்தனின்  வலியைப் பார்வையாளர்களுக்கு உணர்த்தினார். ``நானும் சினிமா ஹீரோ இல்லை... சேதுகிட்ட சண்ட போட்டு உன்னைத் தூக்கிட்டுப் போய் கல்யாணம் பண்ண. ஆனா, பண்ணணும்னு தோணுது'' என்று லட்சுமி மேனனிடம் பேசும் காட்சியிலும், இறுதியில் துப்பாக்கித் தோட்டாக்களை அங்கும் இங்கும் சுட்டுவிட்டு `தேங்க்ஸ்' என பாபி சிம்ஹாவிடம் சொல்லும் காட்சியிலும் அப்ளாஸ் அள்ளினார்.

படத்தில் நம் பார்வைக்குத் தெரியாத இன்னொரு ஹீரோ சந்தோஷ் நாராயணின் இசை. என்னதான் `நெருப்புடா...', `வர்லாம் வர்லாம் வா..!' என மாஸ் இசை விருந்து படைத்தாலும், ‘டிங் டாங் உன்னைக் கட்டிவெச்சு உதைப்பேன்...’ பாடலிலும் அசால்ட் சேதுவின் பின்னணி இசையிலும் விறுவிறுப்பு கூட்டினார். `கண்ணம்மா கண்ணம்மா...' பாடலில் காதலும் பேசினார். 

தன் திறமையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்தார் லட்சுமி மேனன். கதையின் திருப்புமுனைக்கு அவர் காரணமாக இருப்பார் என யாரும் அறிந்திராத தருணத்தில் ``சேது கதையில சேது ஹீரோவா நடிச்சாத்தான் நல்லா இருக்கும்'' எனக் கொளுத்திப்போட்டு பாபி சிம்ஹா மற்றும் சித்தார்த்துக்கு மத்தியில் தானும் ஸ்கோர் செய்தார்.

‘திரைப்படத்துல ஹீரோவாக நடித்தால் செஞ்ச பாவங்களை எல்லாம் சரியாகிப்போயிடுமா?’ எனத் தொடங்கி, படத்தின் லாஜிக்கை அலசி ஆராய்ந்தனர் விமர்சகர்கள். எனினும் புதுமையான திரைக்களத்தை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியத்தைத் தொடர்ந்து தனக்கென தனி ரசிகர் வட்டத்தை நிலைநிறுத்திக்கொண்டார் கார்த்திக் சுப்புராஜ். முதல் படம் ஹிட் கொடுத்து, இரண்டாம் படத்தில் தடுமாறாமல் பேசவைத்ததன் மூலம், கார்த்திக் சுப்புராஜ் ‘நானும் அசால்டுதான்டா’ என்று ரசிகர்கள் மனதில் ஆணித்தரமாகச் சொன்னார்.  

வெல்டன் டீம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement