Published:Updated:

வேகம்... வேகம்... அதிரடியான மின்னல் வேகப் பயணம்! #Cars3

சுரேஷ் கண்ணன்
வேகம்... வேகம்... அதிரடியான மின்னல் வேகப் பயணம்! #Cars3
வேகம்... வேகம்... அதிரடியான மின்னல் வேகப் பயணம்! #Cars3

ஒரு திரைப்படம் முழுக்க மனிதர்களுக்குப் பதிலாக, கார்களே கதாபாத்திரங்களாக வந்தால்..? ‘அய்யோ.. சலிப்பாக இருக்குமே’ என்று ஓட நினைப்பவர்கள், cars 3 திரைப்படத்தைப் பார்க்க ஆரம்பித்தால், பரவசத்தில் அமர்ந்துவிடுவார்கள். பார்வையாளர்களின் வரவேற்பைப் பெறாமல் இந்த வரிசை படங்கள் மூன்றாவது பாகம் வரை வரமுடியுமா? 

படம் தொடங்கிய சிறிது நேரத்துக்குள்ளேயே அவை வாகனங்கள் என்பதை மறந்து, மனிதர்கள்போலவே உணரத் தொடங்கிவிடுவீர்கள். அப்படியொரு அசத்தலான திரைக்கதையும் உருவாக்கமும் இதன் பின்னணியில் உள்ளன. Cars 2 திரைப்படத்தின் தொடர்ச்சி இது. முந்தைய பாகங்கள் சற்று சலிப்புடன் இருந்ததாக சில ரசிகர்களால் கருதப்பட்டது. அதை ஈடுகட்டும் வகையில், பரபர காட்சிகளுடன் மூன்றாவது பாகம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

பெரும்பாலான ஹாலிவுட் திரைக்கதைகளின் அடிப்படையில்தான் இதுவும் உருவாகியுள்ளது. ஒரு குறிப்பிட்ட விளையாட்டுத் துறையில் புகழ்பெற்ற சாம்பியன் ஒருவன் இருப்பான். பல ஆதரவாளர்களைப் பெற்றிருந்தாலும் ஆண்டுகள் கடந்ததும் அவன் புகழ் மங்க ஆரம்பிக்கும். ஒதுக்கலுக்கும் கிண்டலுக்கும் ஆளாவான். அதே விளையாட்டுத் துறையில் ஓர் இளம் வீரன் உள்ளே வருவான். சாம்பியனைவிட பலசாலியாக முன்னிறுத்தப்படுவான். திமிர் பிடித்த அவன், சாம்பியனை சீண்டிக்கொண்டே இருப்பான். பொறுமையைக் கடைப்பிடிக்கும் சாம்பியனுக்குப் புதிய வீரனை வீழ்த்தவேண்டிய நெருக்கடியான சூழல் உருவாகும். தன் திறமையைப் புதுப்பித்துக்கொண்டு, இறுதிப் போட்டியில் ஆக்ரோஷமாக களம் இறங்கி சாம்பியன் பட்டம் வென்று தன் புகழை வென்றெடுப்பான். 

சில்வஸ்டர் ஸ்டலோன் நடித்த ‘ராக்கி’ திரைப்பட வரிசைகளைக் கவனித்தால், அதன் திரைக்கதை பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும். Cars 3 திரைப்படத்திலும் ஏறத்தாழ இதுவே நிகழ்கிறது. விஜய் நடித்த ‘குருவி’ திரைப்படத்தில், அவர் கலந்துகொள்ளும் ஒரு கார் ரேஸில், நவீன ரக கார் வைத்துள்ள சக போட்டியாளனை வெல்ல நினைப்பார். போட்டியின்போது தன்னுடைய காரில் அறுந்துபோகும் ஆக்ஸிலேட்டர் வயரை வாயால் கடித்து, என்னென்னமோ சாகசங்கள் செய்வார். எம்.ஜி.ஆர் காலத்துப் படங்களில் மாட்டுவண்டி ரேஸிலேயே ராக்கெட் வேகமாகப் போவார்கள். இதெல்லாம் சாத்தியமாவது, அவர்கள் ஹீரோக்கள் என்பதே காரணம். ஆனால், அதுபோன்ற அபத்தங்கள் ஏதும் இந்தத் திரைப்படத்தில் இல்லை. நாயகன் கடைசிவரை வெற்றியடைவானா என்கிற சந்தேகத்துடன்தான் காட்சிகள் நகருகின்றன. நம்பகத்தன்மையுடன் கூடிய திரைக்கதை. 

லைட்டனிங் மெக்யூன் என்பவன் கார் ரேஸ் சாம்பியன். பிஸ்டன் கோப்பையை ஏழு முறை வென்றிருப்பவன். அவனை ஆதர்சமாகக்கொண்ட ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். படத்தின் தொடக்கத்தில் நிகழும் ஒரு போட்டியில் தன்னைத்தானே உற்சாகப்படுத்திக்கொண்டு காரை அதிவேகமாக ஓட்டத் தொடங்குகிறான் லைட்டனிங். அவன் இறுதிக் கோட்டை தொடப்போகும் சமயத்தில், மின்னல் போன்று எங்கிருந்தோ வந்த ஒரு கறுப்பு நிற கார், இவனை முந்திக்கொண்டு வெற்றியடைகிறது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறான் லைட்டனிங். 

வெற்றியடைபவனின் பெயர் ‘ஜேக்சன் ஸ்டார்ம்’. பெயருக்கேற்ப புயல்போல காரைச் செலுத்துபவன். அவன் வைத்திருப்பது அதிநவீன ரக வாகனம். அதுவும் அவனது வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது. லைட்டனிங் வயதுள்ள கார் ரேஸ் வீரர்கள் ஒவ்வொருவராக இந்த விளையாட்டிலிருந்து விலக ஆரம்பிக்கிறார்கள். இனி நவீன ரக கார்களின் முன்னால் ஜெயிக்க முடியாது என்கிற காரணம் ஒன்று. தொடர் தோல்விகளால் அவர்களுக்கு ஸ்பான்சர் கிடைப்பதில்லை என்பது மற்றொரு காரணம். 

“நீங்க எப்ப ரிடையர்ட் ஆகப்போறீங்க?’ என்று ஊடகங்கள் லைட்டனிங்கை கேட்கின்றன. ‘எப்போதும் இல்லை’ என்கிறான். மீண்டும் ஒரு போட்டியில் வென்று தன் திறமையை உலகுக்கு காட்ட உறுதியெடுக்கிறான்.

லைட்டனிங் இலக்கில் வென்றானா? எப்படி வென்றான்? அதற்கான காரணங்கள் என்ன என்பதை விறுவிறுப்பும் பரபரப்பும் கலந்த காட்சிகளோடு சொல்லியிருக்கிறார்கள். 

(காரை, ‘அவன், இவன்’ என்று சொல்லியிருப்பதை கவனியுங்கள். படத்தின் திரைக்கதை அத்தகையது) 

Fast and Furious போன்ற கார் ரேஸை அடிப்படையாகக்கொண்ட சாகசத் திரைப்பட விரும்பிகளுக்கு இத்திரைப்படம் நிச்சயமாகப் பிடிக்கும். ஸ்டெர்லிங் என்கிற ஸ்பான்ஸர், லைட்டனிங்குக்கு உதவ முன்வருகிறான். ஆனால், நவீன முறையிலான பயிற்சிகளை லைட்டனிங்கால் புரிந்துகொள்ள முடியவில்லை. எதிர்பார்த்த வேகத்தை அவனால் அடையமுடியவில்லை. ‘சரி.. பொருள்களுக்கு விளம்பரத் தூதுவனாக இரு’ என்கிறான் ஸ்பான்சர். ‘நண்பா… காரை அதிவேகமாக ஓட்டி அதில் அடையும் பரபரப்பில்தான் என் மகிழ்ச்சி இருக்கிறது, பணத்தில் இல்லை’ என்கிறான் லைட்டனிங். விளையாட்டில் மட்டுமே ஆர்வமுடைய வீரர்களின் பிரத்தியேகமான குணம் இது. 

லைட்டனிங்குகுப் பயிற்சி அளிக்க க்ரூஸ் என்கிற பெண் வருகிறாள். அவளின் நவீன பயிற்சிகளால் எரிச்சலாகிறான் லைட்டனிங். ‘இதெல்லாம் வேலைக்கு ஆகாது. வந்து என் பழைய முறையிலான பயிற்சியைப் பார்’ என அழைத்துச்செல்கிறான். சேறும் சகதியும் உள்ள கடற்கரை மணலில் பயிற்சி பெறும்போதுதான் லைட்டனிங்குக்குப் பழைய உற்சாகம் கிடைக்கிறது. ஆனால், க்ரூஸ் அங்குத் தடுமாறுகிறாள். மிகவும் சுவாரஸ்யமான காட்சிகள் இவை. இதைவிடவும் கடுமையான பயிற்சி வேண்டும் என்பதற்காக காட்டுத்தனமான பாதைக்கு அழைத்துச்செல்கிறான். முறையற்ற வகையில் முரட்டுத்தனமாக ரேஸ் நடத்தும் குழுவொன்றில் சிக்கி, க்ரூஸை காப்பாற்றுகிறான். இங்கு கிடைக்கும் அனுபவங்கள்தான் இறுதிப் போட்டிக்கு உதவுகின்றன.

தன் பழைய நண்பர்களின் உதவியுடன் உற்சாகமாக இறுதிப்போட்டிக்குள் நுழைகிறான் லைட்டனிங். பந்தயத்துக்குள் காரை ஓட்டிக்கொண்டிருக்கும்போதே, க்ரூஸ் நினைவு வருகிறது. பயிற்சியாளராக இருந்தாலும், அவளுடைய விருப்பம் கார் ரேஸ் வீரராக வேண்டும் என்பதே. எனவே, ஒரு கட்டத்தில் தன் அடையாள எண்ணை அவளுக்கு அளித்து தொடர்ந்து ஓட்டச்சொல்லி உற்சாகப்படுத்துகிறான் லைட்டனிங். ஆண்கள் விட்டுக்கொடுத்து, பெண் சமூகத்தை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதை வெகு அழகாகச் சொல்கிறது இந்தக் காட்சி. க்ரூஸ் வென்றுவிடக்கூடாது என்பதற்காக வில்லன் ஸ்டார்ம், அவளுடைய காரை சுவரேராமாக இடித்துச்சென்று இடைஞ்சல் செய்கிறான். ஆனால், லைட்டனிங்கின் பழைய குருவான டாக்டர் ஹட்சனின் பாணியில், ஸ்டார்மின் காரின் மேலே டைவ் அடித்து குரூஸ் வெல்லும் காட்சி ரகளையானது. 

Cars வரிசைத் திரைப்படங்கள் உள்ளிட்ட பல அனிமேஷன் திரைப்படங்களை இயக்கிய Brian Fee இந்தப் படத்தை அற்புதமாக இயக்கியுள்ளார். பிக்சார் அனிமேஷன் குழுவின் அட்டகாசமான வரைகலைநுட்பமும் கற்பனை வளமும் பிரமிக்கவைக்கிறது. ஒவ்வொரு பிரேமையும் பார்த்து பார்த்துச் செதுக்கியிருக்கிறார்கள். குறிப்பாக, கார் பந்தயக் காட்சிகள், பயிற்சிபெறும் காட்சிகள் போன்றவை அசல் திரைப்படங்களின் சாகசக் காட்சிகளுக்கு நிகராக உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய பாகங்களில் குரல்கள் கொடுத்து உயிரூட்டிய அதே நட்சத்திர கலைஞர்களோடு புதிய பாத்திரங்களுக்கும் சிலர் இணைந்துள்ளார்கள். 

இந்தத் திரைப்படத்தை 3D நுட்பத்தில் பெரியதிரையில் காண்பது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். கார்கள் பேசுவதையும் ஹீரோக்கள்போல சாகசம் செய்வதையும் பார்க்கும் குழந்தைகள் உற்சாகமடைவது உறுதி!

சுரேஷ் கண்ணன்