வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (03/08/2017)

கடைசி தொடர்பு:11:31 (03/08/2017)

’’ஜனகராஜுக்கும் விஜய் சேதுபதிக்குமான பாண்டிங் நல்லாயிருக்கும்..!’’ - '96' பட ரகசியம் சொல்லும் இயக்குநர்

விஜய் சேதுபதி நடிகனாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமான நேரத்தில் அவருக்கு ஹிட் கொடுத்த திரைப்படம் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்'. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் சி.பிரேம் குமார். தற்போது இவர் விஜய்சேதுபதியை வைத்து '96' என்ற படத்தை செம பிஸியாக இயக்கிக்கொண்டிருக்கிறார். 

விஜய் சேதுபதி, ஜனகராஜ்

முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு ரெடியாகிக்கொண்டிருந்தவரை ஒரு சிறிய இடைவெளியில் பிடித்தோம். '96' படத்தில் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் இவர், எப்படி முதலில் ஸ்க்ரிப்ட்குள் வந்தார் என்பதை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

''எனக்கு விஜய் சேதுபதியை 10 வருடங்களாகத் தெரியும். '96' படத்தின் ஸ்க்ரிப்ட் எழுதிவிட்டு விஜய் சேதுபதியிடம் ஸ்க்ரிப்ட்டை சொல்லி, யாராவது இயக்குநர் இருந்தால் சொல்லு, இந்தப் படத்தை இயக்குவதற்கு என்றேன். விஜய் சேதுபதி உடனே, நீங்களே டைரக்டர் பண்ணினால் என்ன? என்றார். இயக்குநராகிவிட்டேன். படத்துக்கான ஒளிப்பதிவு நான் செய்யவில்லை. ஏனென்றால் ஒரு நேரத்தில் ஒரு காரியத்தை உருப்படியாகச் செய்வோம் என்றுதான். ஸ்க்ரிப்ட் எழுதும்போதே இந்தக் கதையில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் எழுதினேன்.

இந்தப் படம் முழுக்க முழுக்க காதல் திரைப்படம்தான். காதல் தாண்டி படத்தில் காமெடியிருக்கும் ப்ளஸ் ரொமாண்டிக் இருக்கும். படத்தில் விஜய்சேதுபதிக்கு ஒரு கெட்டப் சேன்ஜ்  இருக்கு. இயல்பாகவே இந்தப் படத்துக்கு அது தேவைப்பட்டது. '96'னு பேர் வைத்தது படத்தில் விஜய்சேதுபதி +2 முடித்த வருடத்தை குறிக்க. அதனால்தான்  இந்தப் பெயர். மற்றபடி, படம் இந்த தலைமுறையில் நடப்பதாகத்தான் இருக்கும். இந்தப் படத்தில் நடிக்க ப்ளஸ் டூ படிக்கும் பசங்களைத் தேடிக்கொண்டு இருந்தேன். அந்தப் பசங்க இப்போதுதான் கிடைத்தார்கள்.  

இந்தப் படத்தில் நடிக்க வைக்க ஜனகராஜ் சாரைதான் நான் வலைபோட்டுத் தேடினேன். அவரைத் திரையில் பார்த்தே 10 வருடங்கள் ஆகிவிட்டது. அவரை முதலில் படத்தில் நடிக்க வைக்க தேடியபோது அவர் இந்தியாவிலேயே இல்லை என்றார்கள். ஜனகராஜ்தான் இந்தக் கதாபாத்திரம் பண்ண வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஏன்னா, ஜனகராஜ் சார் காமெடி ரோலாக இருந்தாலும், குணசித்திர பாத்திரமாக இருந்தாலும் இரண்டையும் ஒரே நேரத்தில் மிகவும் நேர்த்தியாக அவரால்தான் பண்ண முடியும். அதனால் அவர் பண்ணினால் நன்றாகயிருக்கும்னு அவரைத் தேடிப்பிடித்து கதை சொல்லி அழைத்து வந்தேன். படத்தில் அவருக்கும், விஜய்சேதுபதிக்குமான அந்த பாண்டிங் மிகவும் நன்றாகயிருக்கும். இந்த வருட இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்'' என்றவரிடம், '96' படத்துக்குப் பிறகு, தொடர்ந்து படங்கள் இயக்குவீர்களா என்றால், ’அது காலத்தின் கையில்தான் உள்ளது’ என்று முடித்தார் இயக்குநர் சி.பிரேம் குமார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்