ஓவியா, ஜூலி, சினேகன்... 'பிக் பாஸ்' பற்றி விவாதித்த அரசுப் பள்ளி மாணவர்கள்! #BiggBossTamil | This government school students discussed a lot about Bigg Boss tamil

வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (03/08/2017)

கடைசி தொடர்பு:14:42 (03/08/2017)

ஓவியா, ஜூலி, சினேகன்... 'பிக் பாஸ்' பற்றி விவாதித்த அரசுப் பள்ளி மாணவர்கள்! #BiggBossTamil

பிக் பாஸ்

"விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி அனைத்து வயதினராலும் பார்க்கப்படுகிறது. வீடுகளில் பெற்றோர்கள் பார்க்கும்போது, குழந்தைகளும் பார்க்கும் சூழல் ஏற்படுகிறது. ஆனால், அதில் இடம்பெறும் காட்சிகள் பற்றி எத்தனை வீடுகளில், குழந்தைகளிடம் தெளிவாக உரையாடப்படுகிறது?" என்கிற கேள்வியை முன்வைக்கிறார், ஆசிரியர் சிவா. இவர், மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 

ஆசிரியர் சிவா, தனது வகுப்பறை மாணவர்களோடு சமூகத்தின் பல்வேறு விஷயங்களை விவாதிப்பதும் மாணவர்களை உரையாடச் சொல்வதும் வழக்கம். குறிப்பிடத்தகுந்த சினிமா, குறும்படம், நாடகம் ஆகியவை குறித்து மாணவர்களின் கருத்துகளைக் கேட்டு, புதிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். சமீபமாக, மாணவர்களிடம் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி பற்றிய பேச்சு அடிபடுவதால், அதுகுறித்த உரையாடலுக்கு வகுப்பறையில் ஏற்பாடு செய்தார். அது அவருக்குக் கொடுத்த பல்வேறு ஆச்சர்யங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

"எந்தவொரு விஷயமாக இருந்தாலும் உரையாடும்போதுதான், அதன் பல்வேறு கோணங்கள் நமக்குத் தெரியவரும். அதனால்தான், வகுப்பறைகளில் குறும்படங்களைத் திரையிடுகிறோம். அதன் கதை, ஒளிப்பதிவு, வசனம் என அனைத்தைப் பற்றியும் விவாதிப்போம். அந்த வகையில்தான் 'பிக் பாஸ்' பற்றியும் விவாதித்தோம். 'மாணவர்களில் எத்தனை பேர் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறீர்கள்?' எனக் கேட்டேன். 80 சதவிகித மாணவர்கள் தொடர்ந்து நிகழ்ச்சியைப் பார்ப்பதாகக் கூறினர். 'இந்த நிகழ்ச்சியை ஏன் பார்க்கிறீர்கள்?' என்று கேட்டேன். பெரும்பாலான மாணவர்கள், 'அந்த நேரத்தில் பெற்றோர் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதால், நாங்களும் பார்க்கிறோம்' என்றனர். ஒரு சில மாணவர்கள், 'எங்களுக்கு இந்த நிகழ்ச்சி பிடித்திருப்பதால் பார்க்கிறோம்' என்றனர். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பிடித்த, பிடிக்காத விஷயங்கள் பற்றி கேட்டேன். 

பிக் பாஸ்

பிடித்த விஷயங்கள்: பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் வீட்டின் தோற்றம், எல்லோரும் தனித்தனியே படுப்பதற்கான படுக்கை வசதி, எல்லோரும் சமையல் செய்வது. (குறிப்பாக ஆண்களும் சமைப்பது பலருக்குப் பிடித்திருந்ததது) ஒவ்வொன்றுக்குமான சுவாரஸ்மான விதிகள், உடற்பயிற்சி செய்வதற்கான கருவிகள், எல்லோரும் ஏதேனும் ஒரு வேலையைச் செய்வது, அவ்வப்போது கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, ரஜினி, கமல், விஜய், அஜித் வேடங்களில் நடனமாடுவது உள்ளிட்ட விஷயங்களைக் கூறினர். 

பிடிக்காத விஷயங்கள்: மற்றவரைப் பற்றி புரணி பேசுவது, எல்லோரும் சேர்ந்து ஒருவரைத் தனிமைப்படுத்துவது, சண்டைப் போட்டுக்கொள்வது, வாரம் ஒருவரை நீக்குவது, இதில் பங்குபெறுபவர்களை 100 நாள்கள் குடும்பத்தைவிட்டுப் பிரித்துவைத்திருப்பது, எல்லோரின் முன்பாக அழுவது, குழு குழுவாகச் சேர்ந்து மற்றவரைத் திட்டுவது ஆகியவை. இவை அனைத்தையும்விட அநேக மாணவர்களால் சொல்லப்பட்ட விஷயம், காலையில் அலாரம்வைத்து எல்லோரையும் எழுப்பிவிடுவது. 

மாணவர்கள் சொன்னவற்றிலிருந்து சில விஷயங்களைப் புரிந்துகொண்டேன். இங்கே படிக்கும் மாணவர்களில் பெரும் பகுதியினர், கிராமத்திலிருந்து வருபவர்கள். எனவே, 'பிக் பாஸ்' வீட்டின் பிரமாண்டமும், படுக்கை அறைகள், ஜிம் ஆகியவற்றின் மீது ஈர்ப்பு வந்திருக்கிறது. மற்றவர்களைப் பற்றிக் குறைகூறுவது எவருக்கும் பிடிப்பதில்லை. அவ்வாறு குறைகூறாத காரணத்தாலேயே ஓவியாவை மாணவர்களுக்குப் பிடித்திருக்கிறது. என்ன நினைக்கிறாரோ அதைத் தயங்காமல் ஓவியா பேசுவதாகக் கூறுகின்றனர். அடுத்தவர்களைப் பற்றி எப்போதும் குறைகளைப் பேசிக்கொண்டிருக்கும் ஜூலியைப் பிடிக்கவில்லை என்றும், சினேகன் எல்லோரிடம் நடுநிலையோடு நடந்துகொள்வதாகவும் பகிர்ந்துகொண்டார்கள். 

மாணவர்களின் கருத்துகளைக் கேட்டதோடு உரையாடலை முடிக்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் நடப்பவற்றை நிஜம் எனப் பொருத்திப் பார்க்க வேண்டாம் என்றும், 24 மணி நேரத்தில் நடப்பவற்றிலிருந்து ஒரு மணி நேர அளவில் சுருக்கித் தரப்படுகிறது என்பதையும் கூறினேன். அதேநேரம், இந்த நிகழ்ச்சி அவர்களின் படிப்பின் கவனத்தை சிதறடித்துவிடக் கூடாது என்பதையும் பல செய்திகளோடு பகிர்ந்துகொண்டேன். இறுதியாக அதுவொரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி எனப் புரிந்துகொள்ளும்படி வலியுறுத்தினேன்" என்றார் ஆசிரியர் சிவா.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close