Published:Updated:

நடிப்பால் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்தாரா அஜித்?! #AK25

நமது நிருபர்
நடிப்பால் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்தாரா அஜித்?! #AK25
நடிப்பால் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்தாரா அஜித்?! #AK25

பைக் மெக்கானிக் பையனாக கிரீஸ் டப்பாக்களோடு புழங்கிக்கொண்டிருந்த அஜித்குமாரைத்தான் பின்னாளில் `காதல் மன்னன்’ எனப் பட்டம் கொடுத்து அழகு பார்த்தோம். செருப்பு விளம்பரம் ஒன்றில் அமெச்சூராக ஆடிக்கொண்டிருந்த அஜித்குமாரைத்தான், பிறகு `அல்டிமேட் ஸ்டார்’ என அழைத்துச் சிறப்பித்தோம். தமிழ் சினிமாவின் தனக்கான இடத்தைத் தானே தீர்மானித்துக்கொள்ளும் நிலைக்கு வளர்ந்த அஜித்குமாரைத்தான் `தல’ என்று அழைத்தோம். டான்ஸ் ஆடத் தெரியாது, நடிப்பில் அமெச்சூர்... எனப் பல எதிர்வினைகள் வைக்கலாம். ஆனால், தமிழ் சினிமாவில் அஜித்தைத் தவிர்க்க முடியாது. காரணம், அஜித்தும் அவரின் ரசிகர்களும் கட்டமைத்த `தல' என்ற கட்டமைப்பு! 

`என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் சில விநாடிகள் வந்துபோனதுதான் அஜித்தின் சினிமா அறிமுகம் என்றாலும், பிறகு வந்த `பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குப் படம்தான் அஜித்குமாரின் மிகச்சரியான அறிமுகப் படம். இந்தப் படத்தின் ஷூட்டிங் 1992-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கியது. ஆக, தமிழ் சினிமாவில் இன்றோடு 25 வருடங்களைக் கடந்திருக்கிறார் அஜித்குமார்.

`அமராவதி'யில் தொடங்கி, ‘உன்னைத்தேடி’ வரை அஜித் நடித்த பெரும்பாலான படங்கள் காதலும் காதல் சார்ந்த இடங்களுமாகச் சுற்றிக்கொண்டிருக்க, `காதல் மன்னன்’ பட்டத்தோடு அஜித்தை வளர்த்துக்கொண்டிருந்தார்கள் ரசிகர்கள். புதுமுக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் `வாலி’ திரைப்படம் அஜித்தை அடுத்த லெவலுக்கு அழைத்துச்சென்றது. அதே ஆண்டில் வெளியான `அமர்க்களம்’ அவரது மைலேஜை இன்னும் அதிகப்படுத்த, `அல்டிமேட் ஸ்டார்’ என முறுக்கிக்கொண்டு சுற்ற ஆரம்பித்தது இன்னொரு கூட்டம். அஜித்துக்கு இரண்டுமே பிடித்திருந்தது. மென்மை கொஞ்சமும், வன்மை கொஞ்சமுமாக மாறி மாறி நடிக்க ஆரம்பித்தார். இரு தரப்பு ரசிகர்களும் `தல ரசிகன்’ என்ற புள்ளியில் இணைந்தார்கள்.

இமேஜ் பற்றிய கவலை இல்லாமல் நடிப்பது, எதிர்வினை எப்படி இருந்தாலும் பேசுவது, தன் போக்கில் நடந்துகொள்வது… என அஜித்குமாருக்கு இருக்கும் மனநிலைக்குக் கொஞ்சமும் சளைத்தது அல்ல அஜித் ரசிகர்களின் மனநிலை. `அல்டிமேட் ஸ்டார்’ என்ற டைட்டில் கார்டு ஓடும்போது கைதட்டி காலரைத் தூக்கிவிட்ட ரசிகர்கள்தான், `இனி பட்டத்தைப் பயன்படுத்த மாட்டேன்’ என அறிவித்தபோதும் கைதட்டினார்கள், காலரைத் தூக்கிவிட்டார்கள். ஆரம்ப காலங்களில் காதல் படங்களில் அவரின் நடிப்பைப் பார்த்து ரசித்த ரசிகர்கள்தான், இன்று அஜித்குமார் திரையில் நடந்தாலே கைதட்டுகிறார்கள். இதோ, சில தினங்களுக்கு முன்புகூட ஏழு அடி உயர சிலையை அஜித்குமாருக்கு நிறுவியிருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள். அஜித்துக்கு அவரின் ரசிகர்கள் ஸ்பெஷல்; ரசிகர்களுக்கு அஜித் ரொம்பவே ஸ்பெஷல். எப்படி நடக்கிறது இந்த மேஜிக்?

தனது நடிப்பால் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்தாரா அஜித்? `இல்லை' என அஜித் ரசிகர்களே சொல்வார்கள். பிறகு அஜித்தை ஏன் பிடித்திருக்கிறது? `உழைப்பால் உயர்ந்தவர்' என்ற பதில் பட்டென வரும். கூடவே, உழைப்பாளர் தினத்தில் பிறந்தவர் என்பதால், ரசிக மனோபாவத்துக்கு அது கூடுதல் பலம் சேர்க்கிறது.

`முகவரி' படத்தின் ஶ்ரீதர் கேரக்டரில் இருந்த இயல்பு, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் இருந்த கேஷுவலான நடிப்பு, கண்களாலேயே வில்லத்தனம் காட்டிய `வாலி' என திரையில் அஜித் நடித்துக்கொண்டிருக்க, திரைக்கு வெளியே ரசிகர்கள் வேறுவிதமான கட்டமைப்பைக் கட்டினார்கள். அஜித் ரசிகர்களிடம் பேச்சு கொடுத்தால், `அத்தனை ஆபரேஷன்களிலிருந்தும் மீண்டு வந்து நடிக்கிறார்', `பைக் ரேஸில் கலந்துகொண்டு அசத்துகிறார்', `விமானம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருக்கிறார்' என்ற மனநிலைதான் பிரதிபலிக்கும். இவை அஜித்தை ஒரு நடிகராக அணுகுவதற்குத் தடையாகின்றன. ஆனாலும், தனக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள அவ்வப்போது தன்னை மீறி, தன் நடிப்பைப் பேசும் படங்களில் ஒப்புக்கொள்கிறார். டாப் ஹீரோவாக இருந்த சமயத்தில்தான், பெண்மை கலந்த ஆண் கேரக்டரில் நடித்தார். எதிர்வினைகள் எப்படியும் இருக்கட்டும் என `சால்ட் அண்ட் பெப்பர்' லுக்கில் நடித்து, ஹீரோக்களுக்கு இருந்த இலக்கணத்தை உடைத்தார். எல்லா ஹீரோக்களும் `நல்லவன்' போர்வையில் நடித்துக்கொண்டிருக்க, மிகமிக மோசமான கேரக்டரில் நடித்து `மங்காத்தா' ஆடினார். ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதற்காக, `வீரம்' படத்தில் விதவிதமாகப் பன்ச் பேசினார். 

இயக்குநர் இல்லாமல் நடிகர் இல்லை என்பதை உணர்ந்தவர் அஜித். திரைக்குள்ளும் பல திறமையானவர்களை அறிமுகம் செய்திருக்கிறார். சரண், எஸ்.ஜே.சூர்யா, சரவண சுப்பையா, வி.இசட்.துரை, ராஜகுமாரன், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.எல்.விஜய், ஜேடி - ஜெர்ரி, சிங்கம்புலி, ராஜுசுந்தரம் எனப் பலருக்கும் இயக்குநர் கனவை நனவாக்கிக் கொடுத்தவர். 

தவிர, திரைக்கு வெளியிலும் அஜித்தின் செயல்பாடுகள் `ஏகே 25' என்ற வரலாற்றுக்கு முக்கியமான பங்களிப்பைக் கொடுப்பதோடு, அஜித்தை ரசிகர்கள் கொண்டாடுவதற்கான காரணம் சொல்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழா மேடையிலேயே `மிரட்டிக் கூப்பிடுறாங்கய்யா' எனப் பேசி கெத்து காட்டினார். இந்த நிகழ்வுக்குப் பிறகுதான், `அஜித் அ.தி.மு.க அபிமானி' என்ற பிம்பத்தை உருவாக்கி உலவவிட்டார்கள். பிறகு, தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்தார், `விளம்பரப் படங்களில் நடிக்க மாட்டேன்' என்றார். அஜித் மீதான இமேஜ் டாப் கியரில் பறந்தது. 2013-ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகராக வலம்வந்தார் அஜித். ஃபார்முலா கார் பந்தயத்தில் கலந்துகொண்ட வெகுசில இந்தியர்களில் இவரும் ஒருவர். இது ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான எதிர்வினைகளைக் கொடுத்து, நடிகராக இருந்த அஜித்தை நல்ல மனிதராக, ரோல்மாடலாக எனப் பலப் பல அடையாளங்களைக் கொடுக்கிறது. அதனால்தான், அவர் திரையில் முறைத்தாலும் சிரித்தாலும் கைதட்டுகிறார்கள்.

`சிட்டிசன்' படமும், `முகவரி'யில் நடித்த ஶ்ரீதர் கேரக்டரும் அஜித்துக்கு மிகமிக நெருக்கமானவை. அதுபோன்ற மென்மையான அஜித்தை இனி பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை. அஜித் ரசிகர்களும் அவ்வப்போது, `இந்தப் படத்துல `தல' நடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும்?', `இந்த மாதிரி கேரக்டர் எல்லாம் அஜித்துக்குதான் செட் ஆகும்' என அவர் நடிக்காத படங்களைப் பார்த்துவிட்டு கமென்ட் அடித்தாலும், அவர்களுடைய இறுதி எண்ணம் இப்படியாகத்தான் இருக்கிறது, `அஜித் வானத்திலிருந்து குதிக்க வேண்டும், விமானத்தில் பறந்து சண்டை போட வேண்டும், ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்ட வேண்டும்'! 

`சாதாரண பைக் மெக்கானிக் ஆக இருந்து, சினிமாவின் டாப் ஹீரோவாகத் திகழ்பவர் அஜித்' என ஒரு வரியில் இதைச் சொல்லிவிடலாம். ஆனால், இதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பு, முயற்சி, வலி எல்லாம் அஜித்துக்கு மட்டும்தான் தெரியும். அவை அனைத்தையும் கடந்துதான் 25 வருடங்களாக தமிழ் சினிமாவின் நிலையான இடத்தில் நிற்கிறார் அஜித். 

வாழ்த்துகள் தல!

நமது நிருபர்